Jaya asks PM to quit

Posted on Friday 5 September 2008

அணு ஒப்பந்தம்: பொய் சொன்ன மன்மோகன் சிங் அரசு தொடரக் கூடாது: ஜெயலலிதா
 
சென்னை: அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ப‌ற்‌றி நாடாளும‌ன்ற‌த்த‌ி‌‌ல் பொ‌ய் சொ‌ல்‌லிய ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யிலான ம‌த்‌திய அரசு உடனடியாக பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘அய‌ல்நாட்டு சக்திகளின் கட்டளைப்படி செயல்படவும், அய‌ல்நாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் இயங்கவும், இந்தியாவின் நடவடிக்கைகளை உட்படுத்தும் வகையில் ஓர் (அணுசக்தி) ஒப்பந்தத்தை மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றத் துடிக்கிறது.

இதன்மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசு நம் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளிடம் அடகு வைத்திருக்கிறது. இத்தகைய ஓர் அரசை நாம் இனியும் நம்ப முடியாது. இந்த அரசு நாடாளுமன்றத்திலேயே பொய் சொல்லியிருக்கிறது.

இந்த அரசு, இந்த தேசத்தையே ஏமாற்றியிருக்கிறது. இந்த அரசு இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அரசு நம் மக்களை கைவிட்டிருக்கிறது. இந்த அரசு மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.

கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், வரலாறு காணாத விலை உயர்வு, பகிரங்கமாகத் தெரியும் லஞ்ச ஊழல், பற்றாக்குறையாய் இருக்கும் எரிசக்தி, மின்சாரம், மதக் கலவரம், சமூகங்களிடையே பிணக்கு, பல் வேறு இடங்களில் பசி, பஞ்சம், பட்டினி.

இந்தப் பிரச்னைகளெல்லாம் மத்திய அரசுக்கு பொருட்டாக தெரியவில்லை. இந்த அரசுமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய அரசு பதவி விலக வேண்டும். உலகத்தின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக உள்ள 110 கோடி இந்திய மக்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கக்கூடிய நிலையில், இந்த அரசு இனியும் தொடரக் கூடாது.

டாக்டர் மன்மோகன் சிங், கற்றறிந்த பொருளாதார வல்லுநர், நேர்மையான மனிதர் என்று நான் இதுவரை மதிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு சர்வதேச அரங்கில் தன்னுடைய அனைத்து மரியாதையும், நம்பகத்தன்மையையும் இழந்தவராக மன்மோகன் சிங் நிற்கிறார்.

அவர் சேர்ந்திருக்கும் அரசியல் கூட்டு காரணமாகத்தான் இந்த மரியாதை இழப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனக்கு ஏதேனும் சுயமரியாதை இன்னமும் இருப்பதாக அவர் நினைத்தால் டாக்டர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்’ எ‌ன்று கூறியுள்ளார்.

admin @ 8:14 pm
Filed under: news
Jaya ask PM to help Kashmir pandits

Posted on Friday 5 September 2008

jayalalithaa காஷ்மீர் இந்துக்களுக்கும் உதவி செய்வாரா?:
பிரதமருக்கு ஜெயலலிதா கேள்வி

சென்னை: ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை காஷ்மீர் இந்துக்கள் மீதும் பிரதமர் காட்ட வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்’   என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஒரிசாவில் கிருஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்டவசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.

அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரிசாவில் மத பிரச்னையின்போது பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது.

அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

5,000 ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.

காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.

1990களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச் சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள்.

அங்கிருந்து தப்பிய சுமார் 3.5  லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படைவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

ஒரிசாவில் கிருஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம்.

காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 12:10 am
Filed under: news
Arcot Veerasamy charges Left

Posted on Thursday 21 August 2008

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்-ஆர்க்காடு வீராசாமி</p>  <p>அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள்
இருந்த இடம் தெரியாமல் போவார்கள்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை: மத்தியில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கூறினார்.

இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாடு முகமையும் இணைந்து நேற்று நடத்திய ராஜீவ்காந்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேசுகையில்,

”இந்தியாவில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இன்னும் 60 ஆண்டுகளுக்குத்தான் இருக்கிறது. நீரில் மின்சாரம் தயாரிக்கலாம் என்றால் மழை பிரச்னை. ஆகையால் அமெரி்க்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் அத்வானி அதை எதிர்த்தாலும், பிரதமரானால் கையெழுத்து போடமாட்டேன் என்று கூறவில்லை.

இப்படி முரண்பட்ட அத்வானியோடு இடதுசாரிகள் கூட்டணி சேர்ந்து மன்மோகன் அரசை கவிழ்க்கச் சதி செய்தது வியப்பாக உள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 60 இடங்களைப் பெற்ற இடதுசாரிக் கட்சிகள் வரும் தேர்தலில் 30 இடங்களைக்கூடப் பெறுவார்களா எனத் தெரியவில்லை.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வல்லரசாக இந்தியா உருவாகும். இதை சீனா விரும்பவில்லை.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலம் சீனாவுடன் இடதுசாரிகள் மறைமுகமாகச் சதி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் வருகிறது.

ரஷியாவுடன் கூடங்குளம் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டுமானங்கள் முடிந்து இயந்திரங்கள் எல்லாம் இறக்கியாகி விட்டது. ரஷ்யாவுடனான  ஒப்பந்தத்தை எதிர்க்காத இடதுசாரிகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடுவதை எதிர்க்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? இவர்களை நாட்டு மக்கள் இனங்கண்டுள்ளனர். வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

admin @ 12:25 am
Filed under: news
Karnataka threatens to move SC on Hogenakkal issue

Posted on Wednesday 20 August 2008

ஓகேனக்கல்: பிரதமர் தீர்வு காண உதவவேண்டும்: எடியூரப்பா
தீர்வு ஏற்படாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பசவராஜ்

சென்னை: ஓகேனக்கல் பிரச்னையைத் தீர்க்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் கூறினார். இதற்கிடையில் பெங்களூருவில் பேட்டியளித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ், ஒகேனக்கல் பிரச்னையில் தீர்வு கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என எச்சரித்துள்ளார்.

கர்நாடக முதல்வராகப் பதவியேற்றப் பின் முதன்முறையாக நேற்று சென்னை வந்தார் எடியூரப்பா. சொந்தக் காரியமாக சென்னை வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

”கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே ஏற்பட்டுள்ள ஒகேனக்கல் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடு்த்துள்ளேன்.

இரு மாநில முதல்வர்கள் முன்னிலையில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண உதவவேண்டும். ஒகேனக்கல் திட்டத்தில் சுமூகத் தீர்வு காணப்பபடவேண்டும். அண்டை மாநிலங்களுடன் நல்ல உறவு வேண்டும் என்று கர்நாடகா விரும்புகிறது” என்றார்.

ஒகேனக்கல் திட்டத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி பெறவேண்டும் என்றும், இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்தவேண்டும் என்றும் எடியூரப்பா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், எடியூரப்பாவின் இந்தக் கருத்தை நிராகரித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ஒகேனக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீ்ர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ்,
 
”ஒகேனக்கல் பிரச்னையில் கூட்டு சர்வே நடத்துவது, குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீரை பகிர்ந்து கொள்வது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசுக்கு அவகாசம் கொடுத்திருந்தோம். இந்நிலையில் தமிழக அமைச்சர் துரைமுருகன் கூட்டு சர்வே குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி யிருக்கிறார். இவ்விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கவலை அளிக்கிறது.

ஒகேனக்கல் விஷயத்தில் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால் கர்நாடகா தரப்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசு ஒத்துழைக்காவிட்டால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்.

கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் பொறுத்தவரை கூட்டு சர்வே நடத்தும் வரை, தமிழக அரசு திட்டத்தைத் தொடங்கக்கூடாது என்பதே  எங்கள் நிலை” என்றார்.

admin @ 11:39 pm
Filed under: news
Madras Varsity gives doctarate to PM, CM and Sonia

Posted on Wednesday 20 August 2008

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வயது 150!:
மன்மோகன்-சோனியா-கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்

150 years old Madras Varsity gives doctarate to PM, CM and Sonia<br>

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய மூவருக்கும் சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்ட வழங்க உள்ளது.

மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய தொடங்கி 150 ஆண்டுகளாகின்றன. இதை முன்னிட்டு இந்த மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து பல்வேறு கல்வித் திட்டங்களை பரிமாறிக் கொண்டன.

150ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்கலைக்கழக மானியக்குழுவும் இந்த பல்கலைக்கழகங்களுக்கும் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக 150வது ஆண்டுவிழா நிறைவு விழா செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடக்க உள்ளது. விழாவுக்கு தமிழக ஆளுநரும் சென்னைப் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை வகிக்கிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலை வகிக்கிறார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் 3 பேருக்கும் அவர்களின் அரசியல் மற்றும் பொதுநலச் சேவையை பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறது. பட்டங்களை ஆளுநர் பர்னாலா வழங்குகிறார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார்.

admin @ 2:58 am
Filed under: news
Manmohan Singh appeals for peace in Kashmir

Posted on Friday 15 August 2008

மதத்தின் பெயரால் மக்களை பிரிக்காதீர்கள்:
பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள்

The Prime Minister, Dr. Manmohan Singh addressing the Nation on the occasion of 62nd Independence Day from the ramparts of Red Fort, in Delhi on August 15, 2008<br>

டெல்லி: மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது நமது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

62 ஆவது சுதந்திர தினமான நேற்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர், நாட்டுமக்களுக்காக உரையாற்றுகையில் இவ்வாறு  கூறினார். மேலும் அவருடைய உரையில்,

”இந்தியாவின் மதசார்பின்மைக்கு அமர்நாத் கோயில்தான் சிறந்த உதாரணம். ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் இருந்தால்தான் அக்கோயிலுக்குச் செல்லும் யாத்தீரிகர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துதர முடியும்.

மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைத்தால் காஷ்மீர் நிலைமை இன்னும் மோசமாகும். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஊறு நேரும்.  அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

மற்ற பகுதிகளைப் போல் காஷ்மீரும் வளர்ச்சியடைய  வேண்டுமானால் அங்கு அமைதியை ஏற்படுத்தவேண்டும். அதற்குத் தேவையான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதி, கல்வி போன்றவற்றில் அரசு முதலீட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் அப்பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, முன்னேற்ற உதவலாம்.

தீவிரவாதிகளும், அவர்களுக்குத் தூது போகிறவர்களும் இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு எதிரிகள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவுக்கும், பிராந்திய அமைதிக்கும் அவர்கள்தான் எதிரிகள். நாம் அவர்களைத் தோற்கடிக்கவேண்டும்.

இந்திய பாகிஸ்தான் உறவைச் சீரமைக்கும் முயற்சிக்கு காபூல் நகர இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் பெரும் தடையாக உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் கவலையையும் அதிருப்தியையும் பாகிஸ்தான் அரசிடம் கூறியுள்ளோம்” என்றார்.

admin @ 10:01 pm
Filed under: news
Olympic-2008: Abinav Bindra…Gold for golden hands!

Posted on Monday 11 August 2008

ஒலிம்பிக்கில் தங்கம்: அபிநவ் காட்டில் பரிசு மழை

abhinav-bindragold-for-golden-hands.jpg

பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா(26).

பீஜிங்கில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மொத்தம் 700.5 புள்ளிகளைச் சேர்த்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார் அபிநவ்.

108 வருட இந்திய ஒலிம்பிக் வரலாற்றில், தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் கிடைப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு குழு விளையாட்டான ஹாக்கி போட்டியில் இந்தியா 8 முறை தங்கம் வென்றுள்ளது.

இந்திய விளையாட்டு உலகின் உயரிய விருதுகளான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளைப் பெற்றுள்ள அபிநவ்விற்கு கோடிக்கணக்கான ரொக்கப்பரிசுகளும், சலுகைகளும் கிடைத்துள்ளன.

‘நீங்கள் தங்கம் வென்றதன் மூலம் 100 கோடி இந்தியர்களின் கனவு நனவாகியுள்ளது. இதற்காக பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்’  என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வாழ்த்தியுள்ளார்.

‘உங்களுக்கு நாடே வாழ்த்து  தெரிவிக்கிறது. அதில் நானும் பங்கேற்கிறேன்’ என்று வாழ்த்துகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தமிழக முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்துக்களை அபிநவ்விற்கு தெரிவித்திருப்பதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் அளித்திருக்கிறார்.

அபிநவ் பிந்த்ராவிற்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி, ஹரியாணா அரசு ரூ.25 லட்சம், இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சம், பிகார் அரசு ரூ.11 லட்சம், மகாராஷ்டரா ரூ.10 லட்சம், கர்நாடகா ரூ.10 லட்சம் என கிட்டதட்ட பரிசுத்தொகை 2.50 கோடியை எட்டுகிறது.

இதுதவிர விமானத்தில், இரயிலில் வாழ்நாள் முழுக்க இலவசப்பயணச் சலுகையும் அபிநவ்விற்கு கிடைத்துள்ளது

தங்கம் வாங்கி தந்த கைகளுக்கு இதுகூட செய்யாவிட்டால் எப்படி?

admin @ 8:59 pm
Filed under: news
15th SAARC summit ended in Colombo

Posted on Sunday 3 August 2008

சார்க் மாநாடு முடிந்தது:
தீவிரவாத ஒழிப்பு உள்பட 4 ஒப்பந்தம் கையெழுத்து

maldives.jpg

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் 2 நாட்கள் நடந்த சார்க் () உச்சி மாநாடு நேற்று முடிவடைந்தது. இம்மாநாட்டில் தீவிரவாதிகள் ஒழிப்பு உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 41 அம்ச கூட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்தது.

இம் மாநாட்டிற்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் அப்துல் ரசாக் கிலானி, வங்கதேச ராணுவ சட்ட தலைமை நிர்வாகி பக்ருதீன் அகமது, நேபாள இடைக்கால பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, பூடான் பிரதமர் ஜிக்மி தின்லே, மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடைசி தினமான நேற்று தீவிரவாதம், கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக சார்க் நாடுகளிடையே பரஸ்பரம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், சட்டப்பூர்வமாக உதவி அளிக்கவும் வகை செய்யயும் ஒப்பந்தம், சார்க் நாடுககள் வளர்ச்சி நிதி அமைப்பதற்கான ஒப்பந்தம், சார்க் தடையற்ற வர்த்தக அமைப்பில் புதிய உறுப்பினராக ஆப்கானிஸ்தானை சேர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம், தெற்கு ஆசிய பிராந்திய தர கட்டுப்பாடு நிறுவனம் அமைக்க வகை செய்யும் ஒப்பந்தம் ஆகிய 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சார்க் நாடுகளிடையே போதைபொருள், ஆயுதம் மற்றும் மனிதர்களை சட்ட விரோதமாகக் கடத்துவதை தடுத்தல், தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச மற்றும் சார்க் நாடுகளின் தீர்மானங்களை நிறைவேற்றல், சார்க் நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை முழுமையாக நிறைவேற்றல், பிராந்திய தொடர்பை மேம்படுத்த நேரடி தொலைபேசி தொடர்பு வசதி, பலநோக்கு நவீன போக்குவரத்து வசதியை செய்தல், நீர்வள ஆதாரம், சுற்று சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானம், சுற்றுலா கலாசாரம், கல்வி, பெண்கள், குழந்தைகள் நிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 41 அம்ச கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

அடுத்த சார்க் மாநாட்டினை நடத்த மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் முன்வந்தார். இதை சார்க் நாடுகள் ஏற்றுக்கொண்டன. அடுத்த சார்க் (16ஆவது) மாநாடு, மாலத்தீவு தலைநகரான மாலியில் நடைபெறும்.

admin @ 11:40 pm
Filed under: news
Manmohan Singh, Rajapakse meets in Colombo

Posted on Saturday 2 August 2008

மன்மோகன் சிங் - ராஜபக்சே சந்திப்பு:
தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சு

கொழும்பு: கொழும்பு நகரில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்,நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய 8 நாடுகள் அங்கம் வகிக்கும் தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) 2 நாள் உச்சி மாநாடு கொழும்பு நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இது சார்க் அமைப்பின் 15-வது மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பிராந்திய ஒத்துழைப்பு, அபிவிருத்தி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதம் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியில் இருந்து கொழும்பு நகருக்கு சென்றார். அவருடன் அதிகாரிகள் அடங்கிய குழுவும் சென்று உள்ளது.

பிற்பகல் கொழும்பு நகருக்கு அருகே உள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் போய்ச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை பிரதமர் ரதன்ஸ்ரீ விக்கிரமநாயகே, வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகாமா மற்றும் முப்படை அதகாரிகள், இலங்கையில் உள்ள இந்திய அதிகாரிகள் விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் மன்மோகன் சிங்குக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் அங்கிருந்து கொழும்பு நகருக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு மாலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினார்கள். இலங்கை அதிபரின் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் முதலில், வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது, சார்க் மாநாட்டில் இன்று நடைபெறும் விவாதத்தின் போது முன் வைக்க வேண்டிய தீவிரவாதம், விலைவாசி உயர்வு, வர்த்தக கட்டுப்பாடுகள், உணவு பாதுகாப்பு கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தனியாக சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அப்போது, தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையின்படி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமர் மன்மோகன் சிங் வற்புறுத்தினார்.

கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும்போது அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அவர் கேட்டுக் கொண்டார். எல்லை தெரியாமல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்துவிடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை தவிர்த்து அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இரு நாட்டு கடற்படைகளின் கூட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ராஜபக்சேவிடம் அவர் வலியுறுத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விரைவில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானியும் இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசுகிறார்கள். பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியிலான அரசு தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு அந்த நாட்டின் புதிய பிரதமரான கிலானியும், மன்மோகன் சிங்கும் சந்தித்து பேசுவது இதுவே முதல் தடவை ஆகும். இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத செயல்களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் பங்களிப்பு அதிகரித்துள்ள நிலையிலும், காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையிலும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள மற்ற சார்க் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார்.

admin @ 2:28 am
Filed under: news
Srilankan govt take action on Tamil fishermen issue

Posted on Saturday 2 August 2008

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்:  
விசாரிக்க ‌இலங்கை அரசு உத்தரவு!
 
 
rajapakse-manmohan-singh.jpg

டெல்லி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய பிரச்னை குறித்து பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நடந்த சந்திப்பில் கூறியதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்த‌ ‌இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

கொழும்புவில் இன்று துவங்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ‌இலங்கை சென்ற பாரதப் பிரதமர் மன்மோகன்சிங், நேற்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்திய- ‌இலங்கை கடல் எல்லை மீன்பிடி பணியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க ‌இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

admin @ 1:45 am
Filed under: news