UPA govt., acting fast on Indo-US nuclear deal

Posted on Thursday 24 July 2008

அணுசக்தி ஒப்பந்தம்: நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது மத்திய அரசு.

ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் அணு மூலப் பொருட்களை விநியோகிக்கும் நாடுகளின் ஆதரவை பெற மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது.

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற 2 முக்கியக் காரியங்களை இந்தியா செய்யவேண்டும். சர்வதேச அணுசக்தி கழகத்துடன் அணு உலைகள் பாதுகாப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்யவேண்டும். அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடாததால், அணு மூலப் பொருட்களை விநியோகம் செய்யும் 45 நாடுகளை அணுகி இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டு ஒப்புதல் பெறவேண்டும்.

இதற்காக மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், பிரிதிவிராஜ் சவான், ஆனந்த் சர்மா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சக அதிகாரிகளுடன் அந்தந்த நாடுகளுக்கு விரைகிறார்கள். இவர்கள் அந்நாட்டு அரசுகளுடன் பேசி ஆதரவு திரட்டுவார்கள். இதுதவிர அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இதற்கான பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

மேலும், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சர்வதேச அணுசக்தி கழகக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் இந்தியாவுக்கு ஒப்புதல் தரப்படும் எனக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து

அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டு அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin @ 2:55 am
Filed under: news
Trust of vote victory: CM feels happy

Posted on Wednesday 23 July 2008

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: சாதனைக்கு கிடைத்த வெற்றி- கருணாநிதி பேட்டி

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு பெற்றுள்ள வெற்றி, 4 ஆண்டுகாலம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும், சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதி வீட்டு முன்பு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதன்பின்பு முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதிலும் வருமாறு :

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?

நான்காண்டு காலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்கள் இவைகளுக்கு கிடைத்த வெற்றி இது என்ற மகிழ்ச்சி எனக்கு.

இந்த வெற்றியின் மூலம் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படுகிறதா?

மன்மோகன்சிங் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம், அவர்களுக்கு ஆதரவாக நம்பிக்கை இருக்கிறது என்ற அளவில் நிறைவேறி இருப்பதைக் கண்டு நாங்கள் அது சேதுசமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவு என்று சொன்னால் நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கை அது பாதிக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் இப்போது அதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவடையுமா?

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தில் எவ்வப்போது என்னென்ன பணிகளை நிறைவேற்றுவது என்பதற்கான காலவரையறை வகுத்திருப்பதையே நான் பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதற்கான அலுவலகமே, திறக்கப்பட்டு விட்டதும் ஏடுகளில் வந்துள்ளது. இவ்வளவிற்கும் பிறகு சிலர் அந்த திட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.

ஒகேனக்கல் திட்டத்தை கர்நாடக அரசிலே உள்ள எடியூரப்பா சட்ட விரோதம் என்று சொல்லியிருக்கிறாரே?

அது சட்டவிரோதமல்ல, அனைத்தையும் ஆய்வு செய்து ஏற்கனவே அது முடிவு செய்யப்பட்டுவிட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு இடதுசாரிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நேற்று பா.ஜ.க. தலைவர் அத்வானி இந்த தீர்மானத்தின் மீது பேசிய பேச்சை அவர்கள் கூர்ந்து படித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அத்வானி பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று சொல்லியிருக்கிறார். இதில் இருந்து அவர்களை அடையாளம் கண்டுகொண்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் மத்திய அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

இருக்கிறது.

நீங்கள் டெல்லிக்கு செல்கின்றீர்களா?

நாளை செல்கிறேன்.

இடதுசாரி இயக்கங்கள் தமிழ்நாட்டில் இனி என்ன நிலை எடுப்பார்கள்?

தமிழ்நாட்டில் அதைப்பற்றி எந்த பிரச்னையும் இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை.

நாளை டெல்லி செல்லும்போது பிரமரிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி நேரில் பேசுவீர்களா?

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தனைபேரும் நேரில் பிரதமரை சந்தித்து மீனவர்கள் பிரச்னை பற்றி பேசியிருக்கிறார்கள். நானும் பேசுவேன்.

சோனியாகாந்திக்கும், பிரதமருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டீர்களா?

தெரிவித்துவிட்டேன்.

இந்த வெற்றிக்குப் பிறகு கனிமொழிக்கு மந்திரிசபையில் இடம் வேண்டும் என்று கேட்பீர்களா?

இப்படிப்பட்ட அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

பலகோடி ரூபாய்கள் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கியதாக அவையிலேயே காட்டியதைப்பற்றி?

அப்படியெல்லாம் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுவிட்டார்கள்.

இது ஜனநாயக படுகொலை இல்லையா? இதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுமா?

சபாநாயகரே விசாரணை பற்றி சொல்லியிருக்கிறாரே. பணம் வாங்கப்பட்டிருந்தால் அது ஜனநாயக கொலைதான்.

admin @ 3:54 am
Filed under: news
BJP shown cast of vote on Trust of vote day

Posted on Wednesday 23 July 2008

ஓட்டுக்குப் பணம்: நாடாளுமன்றத்தில் நடுக்கம்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் கத்தை கத்தையாக ரூ.1 கோடி பணத்தை கொண்டு வந்தார். ‘ஆளும் கட்சியினர் லஞ்சமாக இந்தப் பணத்தை கொடுத்தார்கள்’ என்று அவர் கூறியதால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது, நாடாளுமன்றத்தில் நேற்று 2-வது நாளாக விவாதம் நடைபெற்றது. மாலையில் துணை சபாநாயகர் சரஞ்சித் அத்வால் சபையை நடத்திக் கொண்டு இருந்தார். சமாஜ்வாடி கட்சி எம்.பி. மோகன்சிங்கை துணை சபாநாயகர் பேச அழைத்தபோது, பாரதிய ஜனதா உறுப்பினர்கள் சபையின் மத்திய மண்டபத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

மொரேனா தொகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. அசோக் அர்கால், கையில் தோல் பை ஒன்றை எடுத்துச் சென்றார். சபாநாயகர்  இருக்கைக்கு முன்பு உள்ள நாடாளுமன்றத் தலைமைச் செயலாளர் மேஜை மீது அந்த பையை அசோக அர்கால் வைத்தார்.

சிறிது நேரத்தில், நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. முதலில் அசோக் அர்கால் ஒரு கட்டு பணத்தை கையில் தூக்கிப்பிடித்தபடி, சபையை நோக்கியும் பத்திரிகையாளர் மற்றும் பார்வையாளர்கள் காலரியை நோக்கியும் காண்பித்தார். அந்தத் தோல் பையில், ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளாக ரூ.1 கோடி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவருடன் இருந்த விரேந்திரகுமார், பக்கன்சிங் குலாஸ்தே ஆகிய இரு எம்.பி.க்களும் கத்தை கத்தையாக பணக்கட்டுகளை எடுத்து காண்பித்து, ‘வெட்கம், வெட்கம்’ என்று கோஷமிட்டபடி ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக சமாஜ்வாடி கட்சி சார்பில் பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கு அந்தப் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக புகார் கூறினார்கள். 3 எம்.பி.க்களுக்கும் தலா ரூ.3 கோடி தருவதாக கூறி, முன்பணமாக ரூ.1 கோடி கொடுத்தாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், என்ன நடைபெறுகிறது என்பதை பார்ப்பதற்காக மத்திய மண்டபத்துக்குச் சென்றனர். சபை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. விவாத நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத்தை உலுக்கிய இந்த காட்சி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

பணக்கட்டுகளை காட்டியதால் நாடாளுமன்றத்தில் குழப்பம் தொடங்கியதும், உறுப்பினர்களின் ஒலிபெருக்கி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சபைக்கு தலைமை தாங்கிய துணை சபாநாயகர் இருக்கையை விட்டு எழுந்து, சபை தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்காமலேயே தனது அறைக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து துணை சபாநாயகர் இருக்கைக்கு திரும்பி வந்தபிறகும் அமளி நீடித்தது. இதனால், மாலை 5 மணி வரையும் பின்னர் 6 மணி வரையும் சபை நிகழச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.

சபை தள்ளி வைக்கப்பட்ட பிறகும் சிறிது நேரம் மத்திய மண்டபத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. பணக்கட்டுகள் இருந்த மேஜையை பல உறுப்பினர்கள் சூழ்ந்து நின்று பார்த்தனர். சில உறுப்பினர்கள் தங்கள் செல்போன் கேமராவில் அந்தக் காட்சியை படம் எடுத்துக் கொண்டனர். சிறிது நேரத்தில், சபைக்காவலர்கள் அந்தப் பணக்கட்டுகளை கைப்பற்றி அப்புறப்படுத்தினார்கள்.

இரயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அனந்த்குமார் தலைமையிலான பாரதிய ஜனதா உறுப்பினர்கள் பதிலுக்கு ‘திருடர்கள், திருடர்கள்’ என்று குரல் எழுப்பினார்கள்.

சபை நிகழச்சிகள் தள்ளிவைக்கப்பட்டு 20 நிமிடங்கள் வரை, பத்திரிகையாளர்கள் தங்கள் காலரியில் அமர்ந்து நிகழ்வுகளை கவனித்துக்கொண்டு இருந்தனர். அதன்பின்னர் சவை காவலர்கள் பத்திரிகையாளர்களை வெளியே அனுப்பினர்.

admin @ 1:59 am
Filed under: news
Lalu Prasad Yadav speech made the house smile

Posted on Tuesday 22 July 2008

நாடாளுமன்றத்தில் கலகல!: லாலுவின் லொள்ளு

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் நகைச்சுவை பேச்சால் நாடாளுமன்றம் கலகலத்தது. இந்தியில் பேசிய அவர் தன்னுடைய நகைச்சுவைப் பேச்சுக்கிடையே பா.ஜ.க. மற்றும் இடதுசாரி கட்சிகளை புரட்டி எடுத்தார்.

லாலு பிரசாத் யாதவின் பேச்சு  வருமாறு:

”நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கும் (இடதுசாரி) எங்களுக்கும் (ஐ.மு.கூ.) இடையே  காதல் பூத்தது.  இது இப்போது மட்டுமல்ல நாளைக்கும் நீடிக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களை தோற்கடிக்கும்  பொருட்டு பா.ஜ.க., பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்று  சேர்ந்துள்ளன.

இ.கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா டி.வி. ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவையில்லை நாட்டு மக்களுக்கு ரொட்டிதான் தேவை என்றார். அவருக்கு இப்போது பசிக்கிறதா என்ன? ஏன் அவருக்கு ரொட்டி கிடைக்காமல் இருக்கிறதா? ரொட்டி சும்மா வருவதில்லை. அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ரொட்டி தானாக தேடி வரும்.  குருதாஸ் தாஸ் குப்தாவிற்கு இப்போது தலை நரைத்துவிட்டது. ஏன் எனக்கும்தான்!” என்றார்.

அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதை குறிப்பிடும் வகையில், ”இடதுசாரிகள் மரக்கிளை நுனியில் அமர்ந்துகொண்டு கிளையின் அடிப்பாகத்தை வெட்டுகிறார்கள்” என்றார் லாலு.

”இடது சாரிகளின் கொள்கைகள் எல்லாம் பழசாகி விட்டது. இப்போதைய தேவை மகாத்மா காந்தியின் கொள்கைகள்தான். அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு படிக்க அனுப்புகிறார்கள். இடதுசாரிகள் எங்களுடன் கூட்டணி வைக்காவிட்டால் பரவாயில்லை. வேறு யாருடனும் அவர்கள் கூட்டணி வைத்தால் பின்னாடி வருத்தப்பட நேரிடும்.

பா.ஜ.க. வின் மதவாத வைரஸ் நாட்டை இரண்டாக பிளக்க முயல்கிறது. ஈராக்மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அதைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

எல்லோரும் பிரதமராக ஆசைப்படுகின்றனர். எனக்கும்தான் ஆசை. ஆனால் அதற்காக நான் அவசரப்படவில்லை.

ராகுல்காந்தி பேசுகையில் கலாவதி என்று குறிப்பிட்டபோது பகுஜன் சமாஜ் கட்சியினர் அடிக்கடி குறுக்கிட்டனர். கலாவதி என்பது எங்கள ஊர் பெண்ணின் பெயர் அந்தப் பெயர் சரியில்லை என்றால் சொல்லுங்கள் டம்பி, பம்பி என்று வைத்துக்கொள்ளலாம் (பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.பி., யின் பெயர் டம்பி அகமது).

லாலு பிரசாத் யாதவின் நகைச்சுவைப்பேச்சால் அவையில் அவ்வப்போது சிரிப்பலை எழுந்து அடங்கியது. அவருடைய நகைச்சுவைப்பேச்சால் வெறுத்துப்போன பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

admin @ 10:09 pm
Filed under: news
UPA govt., win the Trust of vote

Posted on Tuesday 22 July 2008

நம்பிக்கை வாக்கெடுப்பு: மன்மோகன் சிங்கிற்கு மாலை!:
கட்சி மாறிகளால் காப்பாற்றப்பட்ட அரசு!

டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவாகின. 10 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட இடதுசாரிகளின் அரசை கவிழ்க்கும் எண்ணம் ஈடேறவில்லை.

மத்திய அரசுக்கு ஆதரவு தர பணம் கொடுக்கப்பட்டது என்று 3 பா.ஜ.க. எம்.பி., க்கள் அந்தப் பணத்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்து குற்றம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு அமைதியாக நடந்து முடிந்தது.

பா.ஜ.க. எம்.பி., க்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் கூறியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நல்லபடியாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன.

முதலில் மின்னனு வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவிட்டார். இதில் அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.

பின்னர் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் ஒருமணி நேரத்திற்குப் பிறகு முடிவை அறிவித்தார் சபாநாயகர்.

அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவாகின. 10 எம்.பி.க்கள் வாக்களிக்க வரவில்லை.

இதனால் அரசு வெற்றி பெற்றதாக அறிவித்த சபாநாயகர், பின்னர் மறு தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

இந்தவெற்றி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகையில், ”இந்த வெற்றி திருப்தியளிக்கும் வெற்றியாகும். உலக அரங்கில் தனக்குரிய இடத்தைப் பெற இந்தியா தயார் என்ற மிக முக்கியமாக செய்தியை இந்த வெற்றி உலகிற்கு காட்டியுள்ளது” என்றார்.

ராகுல்காந்தி கூறுகையில், ”இத்தகைய வெற்றிபெற்ற பிரதமர் பற்றி பெருமை கொள்கிறேன். போட்டியில் வென்றோமா தோற்றோமா என்பது பற்றி சிந்திக்காமல் இந்தியாவிற்கு உகந்தது எது என்றுதான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

எதிர்க்கட்சி த்தலைவரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி கூறுகையில், ”எண்ணிக்கை அடிப்படையில் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இது நேர்மையான வெற்றி அல்ல. இந்த வெற்றியை அடைய பணபலம் பயன்படுகிறது என்ற சந்தேகம் மட்டும்தான் முன்னர் இருந்தது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.

பா.ஜ.க கட்சியில் இருந்து 7 பேர் கட்சி மாறி வாக்களித்துள்ளதாகவும் அத்வானி கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இருவர் கட்சி மாறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆக, இந்த அரசு கட்சி மாறிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

admin @ 9:13 pm
Filed under: news
Indian Parliment: Trust of vote at 6pm today

Posted on Tuesday 22 July 2008

மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: கடைசி நிலவரம்…

* நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்திற்கு 5 மணிக்கு பதில் அளித்து பேசுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

* மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறிவிப்பு.

* பிரதமரின் பேச்சு ஒரு மணி நேரத்திற்கு மேலும் நீடிக்கலாம் என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பும் ஒரு மணி நேரம் தள்ளிப்போகலாம்.

* மத்திய அரசுக்கு ஆதரவு- 272, எதிர்ப்பு- 265, முடிவு செய்யாத எம்.பி., க்கள்- 1, வாக்கெடுப்பு புறக்கணிப்பு - 3 என்று தகவல்கள் கூறுகின்றன.

* நாடாளுமன்றத்தில் இன்று  ராகுல் காந்தி பேசுகையில், நான்கு சமாஜ்வாடி எம்.பி., க்களை மாயாவதி கட்சியினர் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பியபடியே இருந்தனர்.  அவர்கள் தொடர்ந்து கலாட்டாவில் ஈடுபட்டதால் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அவையை மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.

* அணுசக்தி ஒப்பந்தம் ஏழைகளுக்கு உதவ தேவையான ஒன்று!:  நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு.

* சமாஜ்வாடி எம்.பி., க்களை கடத்தி வைத்திருக்கிறார் மாயாவதி: அமர்சிங்

* நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற பிரதமர் குடும்பத்தினர் அமிர்தசரஸில் பிரார்த்தனை.

admin @ 3:55 am
Filed under: news
LK. Advani slams the UPA govt on Trust of vote speech

Posted on Monday 21 July 2008

அரசியல் சிக்கலுக்குக் காரணம் மன்மோகன் சிங்!: அத்வானி தாக்கு

டெல்லி: தற்போது நிலவும் அரசியல் சிக்கலுக்கு இடதுசாரிகளோ எதிர்க்கட்சிகளோ காரணமல்ல. பிரதமர் மன்மோகன் சிங்தான் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை  பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த பின்னர் அத்தீர்மானத்தின் மீது எல்.கே. அத்வானி பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில்,

”தற்போது நிலவும் அரசியல் சிக்கலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் காரணம். எதிர்க்கட்சிகளோ இடதுசாரிகளோ இதற்கு காரணமல்ல. இடதுசாரிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள விரும்பினால் அவ்வாறே செய்யட்டும் என்று பிரதமர், கொல்கத்தா பத்திரிகை ஒன்றில் பேட்டி அளித்தார். அதுதான் இன்றைய அரசியல் சிக்கலுக்குக் காரணம்.

அணுசக்தி ஒப்பந்தமானது இந்தியா அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் போலில்லாமல், ஏதோ மன்மோகன் சிங் ஜார்ஜ் புஷ் இடையிலான ஒப்பந்தம் போல் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள ஒப்பந்தம் என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு வெற்றிபெற்றாலும்கூட வரக்கூடியத் தேர்தலில் மக்கள் இந்த அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பளிப்பார்கள்.

அணுசக்தி ஒப்பந்தத்தைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல், நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் அரசை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்வதை நான் எதிர்க்கவில்லை. இந்தியாவுக்கு சம உரிமை அளிக்காத ஓர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்றுதான் எதிர்க்கிறேன். அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாத ஒரு நாடாக இந்தியாவை இந்த ஒப்பந்தம் ஆக்கிவிட்டது

பா.ஜ.க. தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுடன் மீண்டும் பேசுவோம். இந்தியாவுக்கு சம உரிமை  பெறுவோம். நாட்டின் பாதுகாப்பு குறித்து முடிவு செய்வதில் இருக்கும் குறைபாடுளைக் களைவோம்” என்றார்.

admin @ 10:20 pm
Filed under: news
Trust of vote: PM with confidence

Posted on Monday 21 July 2008

நாட்டு நலனுக்காகவே அணுசக்தி ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க, இரண்டுநாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,

”பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலையில் அரசுக்கு நம்பிக்கை கோரும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தொலைநோக்கு சிந்தனையில் உருவான இந்த அரசை இதுவரை வழி நடத்திவந்த ஜோதிபாசு, ஹர்கிஷன் சிங் சுர்ஜித், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு நன்றி.

முதுபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு நாட்டு நலனுக்காகவே ஒவ்வொரு முடிவையும் எடுத்தது.

தற்போது நிறைவேற்ற விரும்பும் அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தமும் நாட்டு மக்கள் நலனுக்காக போடப்பட இருக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் முடிவு செய்திருந்தது.

ஆனால் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றது அதிர்ச்சி அளித்தது. ஜப்பானில் இருந்தபோது தகவல் கிடைத்தது. நாடு திரும்பியதும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கப்போவதாகக் கூறினேன்.

இந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு அணுசக்தி ஒப்பந்தத்திற்காக மட்டுமல்லாமல் கடந்த 50 மாதங்களில் அரசு செய்த சாதனைகளுக்காகவும் கோரப்படுகிறது” என்றார்.

‘கடவுளே நல்ல காரியங்கள் மேற்கொள்ள எனக்கு பலம் கொடு. போர்க்களமாயினும் எனக்கு வெற்றி மட்டுமே கிடைக்கவேண்டும். அதற்கான திடத்தைக் கொடு. அப்போதுதான் மனசஞ்சலம் இன்றி போராட முடியும். போரில் நான் உயிரிழந்தாலும் வெற்றி கிடைக்கவேண்டும்’ என சீக்கிய மத குரு கோவிந்த சிங்கின் வாசகத்தை மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.

admin @ 9:44 pm
Filed under: news
The day of Trust of vote

Posted on Monday 21 July 2008

நம்பிக்கை வாக்கெடுப்பு: வெற்றி மாலை யாருக்கு? இன்று மாலை தெரியும்!

டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்குமா, நீடிக்காதா என்பது இன்று மாலை தெரியும்.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்த்து, மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் இக்கட்டான நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.

அதன்படி ஜூலை 22ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவும் முடிவெடுக்கப்பட்டது.

இதோ அதோ என்ற அந்த நாள் இன்று வந்தே விட்டது.

நேற்று கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுக்கு நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை படித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அதற்கு காட்டமாக பதிலளித்தனர் எதிர்க்கட்சியினர். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தின்படி இன்று  நாடாளுமன்ற விவாதங்கள் முடிவுக்கு வந்ததும் மாலையில் மத்திய அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

மத்திய அரசு பிழைக்க வேண்டுமானால் 272 எம்.பி., க்களின் ஆதரவு தேவை.

நாடாளுமன்றத்தில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில் தங்களுக்கு 276 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகளோ மத்திய அரசு வீழ்வது உறுதி என்கின்றன.

வெற்றி மாலை சூடப்போவது யார் என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

admin @ 8:53 pm
Filed under: news
21/07/08 suruk, naruk saidhigal…

Posted on Monday 21 July 2008

21/07/08 சுருக் நறுக் செய்திகள்…

பாராளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கோரினார் பிரதமர் மன்மோகன் சிங்: அத்வானி கடும் விவாதம்.

ணு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கவேண்டும்: மாயாவதி கோரிக்கை.

காங்கிரஸ் உயிருக்குப் போராடும் நோயாளி ஆகிவிட்டது: அத்வானி தாக்கு.

7 ஆவது நினைவு நாள்: சிவாஜி உருவப்படத்திற்கு தலைவர்கள் அஞ்சலி.

லங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் குழப்பம் விளைவிக்க மாட்டோம்!: விடுதலைப்புலிகள் அறிவிப்பு.

ர்வதேச பீச் வாலிபால் சென்னையில் நடந்த போட்டியில் பிரேசில் (ஆண்கள் பிரிவு), தாய்லாந்து (பெண்கள் பிரிவு) அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.

செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு ரூ.1கோடி வழங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி.

ருத்துவர்களைத் தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!: தமிழக அரசு அவசர சட்டம்.

admin @ 3:46 am
Filed under: news