Posted on Wednesday 8 October 2008
யாருடன் கூட்டணி? எப்போது தேர்தல்?:
நிருபர்களுடன் விஜயகாந்த் மோதல்

சென்னை: சென்னையில் 18ஆம் தேதி நடைபெறுவதாக உள்ள தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நிருபர்களைச் சந்தித்த விஜயகாந்த்,
தே.மு.தி.க. வின் 4 ஆண்டு தினம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா ஆகியவற்றையொட்டி, அக்டோபர் 18ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதாகவும், ஆளும்கட்சி்த் தரப்பில் இருந்து இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கொடிக்கம்பம் கட்டுவதில் தொடங்கி சுவர் விளம்பரம், பஸ், வேன் பதிவு வரை தொல்லைகள் தொடர்வதாக அவர் கூறினார்.
ஆனால், எத்தனை இடையூறுகள் வந்தாலும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம் என்றவர், இலங்கைத் தமிழர் பிரச்னையில் பிரதமருக்கு தந்தி அடிக்கச் சொல்வது கருணாநிதி போடும் அரசியல் நாடகம் என்றும், தொலைத்தொடர்புத் துறையில் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜா பதவி விலகவேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு அந்த ஊழலை விசாரிக்கவேண்டும் என்றும், தே.மு.தி.க. சார்பில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தமைக்கு நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகம் முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் குவிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிய விஜயகாந்தை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு, ‘யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்?’ என்று குடைந்தார்கள். அதற்கு அவர், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சொல்கிறேன்’ என்றார்.
நிருபர்கள் விடாமல், ‘மக்களுடன்தான் கூட்டணி. கட்சிகளுடன் இல்லை என்றீர்கள். இப்போது உங்கள் நிலைப்பாடு மாறுவதுபோல் இருக்கிறதே? என்று கேட்டனர். அதற்கு விஜயகாந்த் குறிப்பிட்ட நிருபரைப் பார்த்து, ‘நீங்கள் எந்தப் பத்திரிகையைச் சேர்ந்தவர் என்பது தெரியும். எப்படி கேள்வி கேட்பீர்கள் என்பதும் தெரியும். என் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்காதீர்கள்’ என்று பதிலளித்தார்.
அப்படியும் நிருபர்கள் விடாமல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, ‘அப்படியா?’ என்ற தோரணையில் பார்த்த விஜயகாந்த், ‘நீங்கள் தேர்தல் எப்போது வரும் என்று கூறுங்கள். நான் கூட்டணி பற்றி சொல்கிறேன்’ என்றார் விடாப்பிடியாக.
உடனே நிருபர்கள் ‘தேர்தல் வரும் போது வரும்’ என்றனர். அதைக் கேட்ட விஜயகாந்த், ‘அது வரும்போது நானும் சொல்கிறேன்’ என்றார். அப்பவும் நிருபர்கள் நகருவதாக தெரியவில்லை என்றதும் ‘மக்களுடன்தான் கூட்டணி’ என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புறப்பட்டார் விஜயகாந்த்.










































‘பஞ்ச்’ பாலு















