Posted on Wednesday 8 October 2008
தமிழனத்தை காக்க தலைமை ஏற்றால் கருணாநிதிக்கு துணை நிற்போம்: ராமதாஸ்
சென்னை: தமிழினத்தை காக்க முதல்வர் கருணாநிதி தலைமை ஏற்றால், அவருக்கு தமிழகமே துணை நிற்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுகின்ற ஒரு விஷயத்திலாவது இங்குள்ள தமிழர்கள் ஒன்றுபட்டிருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்னையை அணுகுவோம் என்று முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோளை முழுமனதோடு வரவேற்கிறேன்.
முதல்வரின் இந்த வேண்டுகோள் பேச்சளவில் நின்றுவிடக் கூடாது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பிரச்னையில் நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களை காக்கும் பிரச்னையில் இப்போது தமிழகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற வகையில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி இலங்கை மண்ணில் தமிழினத்தை ஒழித்துக்கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மூர்க்கத்தனமாக போரிட்டு வரும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் புகட்டுவதற்கான நடவடிக்கைகளை வகுத்து செயல்பட முதல்வர் முன் வர வேண்டும்.
தமிழர்கள் எங்கு செத்தாலும் அவர்களும் தமிழர்கள்தான். அந்த தமிழர்களை காப்பாற்றுகின்ற பொறுப்பு தமிழக முதல்வருக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் இருக்கிறது. முதல்வர் கருணாநிதி அந்த பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற முன்வந்திருக்கிறார் என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது. அதற்காக அவரை மனதார பாராட்டுகிறேன்.
இந்த பிரச்னையில் அதிகாரிகள் மட்டத்தில் பேசி பயனில்லை. பிரதமரே நேரடியாக இலங்கை அதிபரை தொடர்பு கொண்டு இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் நேரில் அறிந்து வர இங்கிருந்து நாடாளுமன்ற குழுவை அனுப்ப வேண்டும். தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அதில் இடம் பெற வேண்டும்.
தமிழர்களின் நிலையை அவர்கள் அறிந்து வர வேண்டும். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மத்திய அரசு மனிதாபிமான உதவிகளை செய்ய வற்புறுத்த வேண்டும்.
தமிழனத்தை காக்கும் பணியில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி தலைமை ஏற்க முன் வர வேண்டும். இதில் தமிழகமே அவருக்கு துணை நிற்கும்’ என்று கூறியுள்ளார்.










































தமிழரைக் காக்க பிரதமரை கருணாநிதி நேரில் சந்திக்க வேண்டும்: ராமதாஸ்
27 சதவிகித இடஒதுக்கீடு சமூகரீதியில் அமையவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
‘பஞ்ச்’ பாலு















