Posted on Monday 8 September 2008
தமிழகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் முதல்வருக்கு டாக்டர் பட்டமா?: விஜயகாந்த் கேள்வி

கோவை: தமிழகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் முதல்வருக்கு டாக்டர் பட்டமா? என்றும், தமிழ்நாட்டில் மின்வெட்டை உடனடியாக சரி செய்யாவிட்டால் நெய்வேலியில் போராட்டம் நடத்துவேன் என்றும் விஜயகாந்த் பேசினார்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காததைக் கண்டித்தும் கோவையில் தே.மு.தி.க. சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தல் கலந்து கொண்டு, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுகையில்,
”தமிழகத்தில் நிலவிவரும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவையைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் சிறு தொழில், குறுந்தொழில் தொழிற்சாலைகள் இங்கு அதிகம் உள்ளது என்பதுதான்.
மின்வெட்டால் இங்கு தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டை சீராக்கச் சொன்னால், மழை வந்தால்தான் சரியாகும் என்ற அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் தேவையான 10 ஆயிரம் மெகாவாட்டில் 6,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் 3,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில், நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை ஆந்திரம், கர்நாடகம், கேரளத்துக்கு வழங்கிவருவது அரசின் அலட்சியப் போக்கே.
ரேஷன் அரிசி ரூ.2க்கு கிடைக்கும்போதே அதை பெரும்பாலோர் வாங்கவில்லை. இந்நிலையில் ரூ.1க்கு அரிசி கொடுத்தால் யாரும் வாங்க மாட்டார்கள். சலுகை என்ற பெயரில் 1 ரூபாய்க்கு அரிசி தரும் தி.மு.க. அரசு, சமையல் பொருள்களின் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
கவர்ச்சிகரமான திட்டங்களைத் தீட்டுவதை கைவிட்டுவிட்டு வளர்ச்சிகரமான திட்டங்களைத் தீட்டினால் மக்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், விலை உயர்வு, மின்வெட்டு என தமிழகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது முறையல்ல.
தமிழ்நாட்டில் மின்வெட்டை சரி செய்யாவிட்டால், கட்சித் தொண்டர்களைத் திரட்டி நெய்வேலியில் போராட்டம் நடத்துவேன்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விஜயகாந்த் பேசுகையில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் பேசினார்.









































