2008/10/31 Punch Balu

Posted on Friday 31 October 2008

punch-balu

‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

தேர்தல்கள் நடத்தி நாங்கள் களைத்துப் போய்விட்டோம். சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்படுவதைத் தவிர்க்க 5 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கட்டாயமாக்க வேண்டும்.
- தேர்தல் ஆணையர் கோபால்சாமி
அதெப்படிங்க அரசியல்வாதிகளுக்கு ஏற்றாற்போலவே நீங்களும் யோசிக்கிறீங்க? அரசியல்வாதிகள் படுத்தும் பாட்டில் இருந்து தப்பிக்க, மக்களுக்கு இருக்கிற ஒரே ஒரு இடைக்கால நிவாரணத்திலும் கைவைக்கச் சொன்னா எப்படி? அப்புறம் என்ன சொல்றீங்க…உங்களுக்கே இவ்வளவு களைப்பா இருக்குன்னா, காலங்காலமாக ஓட்டுப்போட்டு போட்டு கட்டை விரல் தேய்ந்துபோன மக்கள் எவ்வளவு களைப்பாக இருப்பார்கள் நினைச்சுப் பாருங்க. அது சரி, அரசியல்வாதிகளுக்கு சாதகமான இந்த கோரிக்கை நிச்சயம் கைகூடிவிடும் கவலைப்படாதீர்கள்.

கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று 25 ஆண்டுகளாகக் கோரப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசியல் தலைவர்கள்கோரிக்கை வைத்ததும், உடனடியாகத் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
- கர்நாடக முதல்வர் எடியூரப்பா
‘50 வருட காவிரிப் பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்யமாட்டோம்’ என்று ஒருமித்த குரலில் கன்னடத்தில் எப்போது  கன்னடர்கள் சொல்கிறார்களோ அப்பதான் அது செம்மொழி என்று நீதித் தேவன் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா?

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு 12000 கோடி ரூபாய் செலவாகும்
- இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தகவல்
மனிதன் நினைத்த உடனே நெஞ்சில் வந்து நிற்கும் சந்திரனுக்குச் செல்ல இவ்வளவு செலவு செய்துதான் ஆகவேண்டுமா? 12000 கோடியை இந்திய மக்கள் தொகையான 110 கோடியில் கோடிஸ்வரர்களை தவிர்த்துவிட்டு, சுமார் 100 கோடி பேருக்கு பிரித்துக் கொடுத்தால்கூட தலா 120 கோடி ரூபாய் கொடுத்து அவர்களையும் கோடிஸ்வரர்களாக்கி விடலாமே! இல்லாதவன், இருப்பவன் என்ற பேதமாவது ஒழியுமே?

ஜெயலலிதாவிடம் அரசியல்ரீதியாகப் பேசுகிறேன் என்பதற்காக, கூட்டணி விஷயத்தில் அவருக்கு ஆலோசனை சொல்ல மாட்டேன். ஏனேன்றால், யாருடைய ஆலோசனையும் அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை.
- ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி
எப்படீங்க ஜெயலலிதா விஷயத்தில் நீங்ககூட உண்மையை சொல்றீங்க? இதுக்கு ஆதாரம் ஏதாச்சும் புளூட்டோ கிரகத்தில் இருக்கிறதா என்று கேட்க மாட்டோம். நல்ல காலம், நீங்க உண்மையைச் சொல்லலேன்னா போயஸ் கார்டன் பக்கம் நீங்க மழைக்குக் கூட ஒதுங்க முடியாம போயிருக்கும்.

நாற்பது ஆண்டுகளாக இருந்து வரும் இலங்கைப் பிரச்னைக்கு நான்கு  நாட்களில் தீர்வு காண முடியாது.
- கருணாநிதி
அது ச(தி)ரி! நான்கு நாட்களில் இலங்கைப் பிரச்னையை தீர்க்குமாறு யார் கேட்டது? நாற்பது வருடங்களாக ஏன் தீர்க்கவில்லை என்று தான் அப்பாவித் தமிழ் மக்கள் உங்களை கேட்கிறார்கள்!

இலங்கைப் பிரச்னையில் முதல்வரின் நாடகம் அம்பலமாகி விட்டது. சர்வ கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ராஜிநாமா முடிவை, கருணாநிதி தானாக விலக்கிக் கொண்டது சரியல்ல.
- பா.ஜ.க., மாநிலத் தலைவர் இல. கணேசன்
முட்டைப் போட்ட கோழிக்குத்தானே வலி தெரியும். உங்களிடம் ஆட்சியும், 40 எம்.பி. க்களும் இருந்திருந்தால் உங்கள் பவுசு தெரிஞ்சிருக்கும்.

Punch Balu’s Old punches

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 5:45 am
Filed under: Uncategorized
Thangabalu attacks K’nataka CM

Posted on Friday 22 August 2008

எடியூரப்பா தமிழகத்தின் இடையூரப்பா!: தங்கபாலு தாக்கு
 
சென்னை: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குழப்பம் விளைவிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழகத்தின் இடையூரப்பா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழகத்திற்கு வந்திருந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீண்டும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழர்களின் உரிமைக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களின் குடிநீர் திட்டமான அத்திட்டம் தமிழக எல்லைக்குள் தமிழ்நாட்டிற்கு உரிமையான தண்ணீரில் நிறைவேற்றப்படும் திட்டம் என்பதை கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனவே இத்திட்டத்தை தமிழகம் நிறைவேற்ற கர்நாடகாவிடம் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. இரு மாநில எல்லைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தலையிடும் உரிமை அம்மாநிலத்துக்கு எள்ளளவும் கிடையாது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவரது கட்சிக்கு விசுவாசத்தை காட்டிக்கொள்வதற்காக தமிழக பிரச்னையில் இவ்வாறு தலையிடுவதற்கு முன் அவரது கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

பிரச்னை எதுவுமில்லாத தமிழக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னையில் பிரதமர் தலையிடவேண்டும் என்றும், அதற்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் எடியூரப்பா மிரட்டல் விடுத்திருப்பது இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கே விடுக்கும் சவாலாகும்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இவ்வாறு தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூரப்பாவாக இருந்து செயல்பட்டு வரும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எ‌ன்று கூறியுள்ளார். 
 

admin @ 11:20 pm
Filed under: news
Karnataka threatens to move SC on Hogenakkal issue

Posted on Wednesday 20 August 2008

ஓகேனக்கல்: பிரதமர் தீர்வு காண உதவவேண்டும்: எடியூரப்பா
தீர்வு ஏற்படாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பசவராஜ்

சென்னை: ஓகேனக்கல் பிரச்னையைத் தீர்க்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் கூறினார். இதற்கிடையில் பெங்களூருவில் பேட்டியளித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ், ஒகேனக்கல் பிரச்னையில் தீர்வு கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என எச்சரித்துள்ளார்.

கர்நாடக முதல்வராகப் பதவியேற்றப் பின் முதன்முறையாக நேற்று சென்னை வந்தார் எடியூரப்பா. சொந்தக் காரியமாக சென்னை வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

”கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே ஏற்பட்டுள்ள ஒகேனக்கல் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடு்த்துள்ளேன்.

இரு மாநில முதல்வர்கள் முன்னிலையில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண உதவவேண்டும். ஒகேனக்கல் திட்டத்தில் சுமூகத் தீர்வு காணப்பபடவேண்டும். அண்டை மாநிலங்களுடன் நல்ல உறவு வேண்டும் என்று கர்நாடகா விரும்புகிறது” என்றார்.

ஒகேனக்கல் திட்டத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி பெறவேண்டும் என்றும், இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்தவேண்டும் என்றும் எடியூரப்பா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், எடியூரப்பாவின் இந்தக் கருத்தை நிராகரித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ஒகேனக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீ்ர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ்,
 
”ஒகேனக்கல் பிரச்னையில் கூட்டு சர்வே நடத்துவது, குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீரை பகிர்ந்து கொள்வது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசுக்கு அவகாசம் கொடுத்திருந்தோம். இந்நிலையில் தமிழக அமைச்சர் துரைமுருகன் கூட்டு சர்வே குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி யிருக்கிறார். இவ்விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கவலை அளிக்கிறது.

ஒகேனக்கல் விஷயத்தில் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால் கர்நாடகா தரப்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசு ஒத்துழைக்காவிட்டால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்.

கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் பொறுத்தவரை கூட்டு சர்வே நடத்தும் வரை, தமிழக அரசு திட்டத்தைத் தொடங்கக்கூடாது என்பதே  எங்கள் நிலை” என்றார்.

admin @ 11:39 pm
Filed under: news
Hogenekkal scheme need our permission, yeddyurappa says

Posted on Wednesday 13 August 2008

ஒகேனக்கல் திட்டம்: கர்நாடகத்தின் அனுமதி தேவை - எடியூரப்பா

டெல்லி: கர்நாடகா மாநிலத்தின் அனுமதி இன்றி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழகம் செயல்படுத்தக்கூடாது என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறினார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

”ஒகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்பது பற்றி தமிழகம், கர்நாடகம் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு, கர்நாடகா மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ கடிதம் அனுப்பத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
ஆனால் கர்நாடகத்தின் அனுமதியின்றி இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது என்று பிரதமரிடம் கூறியுள்ளேன். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்துடன் எல்லைப் பிரச்னை உளள்து. அதனால் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வு காணவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

admin @ 1:54 am
Filed under: news
Clasical Kannada…TN not in the way: TN govt.,

Posted on Sunday 10 August 2008

கன்னடம் செம்மொழி அந்தஸ்து பெற தடையா?:
கர்நாடகா புகாருக்கு தமிழக அரசு மறுப்பு

yeddyurappa.jpg

சென்னை: கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவதில் தமிழக அரசுக்கு தனிக் கருத்து எதுவும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் மொழியைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இதனால் கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க தமிழகம் முட்டுக்கட்டைப் போடுவதாகக் கூறி கர்நாடகத்தில், தமிழக பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், ‘கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதை தடுக்க முயல்வது சரியல்ல’ என்று கருத்து கூறினார்.

இந்நிலையில் கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பதில் தமிழக அரசுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘செம்மொழி அந்தஸ்து வழங்க, மத்திய அரசு அதற்கென்று நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் வழக்கு  தொடுத்துள்ளார். அவருக்கும் தமிழக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பதை தமிழக அரசு எதிர்ப்பது போல் ஒரு நாளேட்டில் செய்தி வந்தது கண்டிக்கத்தக்கது.

ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பது நிபுணர்குழு அளிக்கும் பரிந்துரையின்படி மத்திய அரசு எடுக்கும் முடிவாகும். இதில் தமிழக அரசுக்கென்று தனியாகக் கருத்து ஏதும் இல்லை.

admin @ 9:48 pm
Filed under: news
Bangalore blast: Leaders condemns

Posted on Friday 25 July 2008

பெங்களூரு குண்டுவெடிப்பு: குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் தலைவர்கள் கண்டனம்

பெங்களூரு: பெங்களூருவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் பெங்களூருவில் மதியம் ஒரு மணி அளவில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நகரில் உள்ள 7 இடங்களில் 8 குண்டுகள் தொடர்ந்து வெடித்தன. இதில் ஒரு பெண் உடல் சிதறி பலியானார். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்:

நாட்டடின் அமைதியை குலைப்பதற்காக திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி:

அமைதியை குலைக்கும் வகையில் நடத்தப்பட்டிருக்கிறது இந்தத் தாக்குதல். அமைதி, ஒற்றுமையை காப்பதன் மூலம் இதை நாம் முறியடிக்கவேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங்:

தீவிரவாதிகளின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. இதன்மூலம் மக்களிடம் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்தக் கொடிய எண்ணத்திற்கு மக்கள பலியாகி விடாமல் அமைதி காக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
 
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்:

அப்பாவி மக்களின் உயிர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு கடும் கண்டனத்திற்கு உரியது. குற்றவாளிகளைப் பிடிக்க கர்நாடக அரசிற்கு, மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். இதுபோன்ற சம்பவங்களால், மத்திய அரசு எடுத்து வரும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கமுடியாது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா:

கர்நாடகத்தில் நிலவும் அமைதியைக் கெடுக்கவும், பொதுமக்களிடையே குழப்பத்தை உண்டாக்கவும் நடந்த திட்டமிட்ட சதியாகும். இதனால் பீதி அடையத் தேவையில்லை. மக்கள் வதந்திகளை நம்பாமல், அமைதி காக்க வேண்டும். மடிவாளா பஸ் நிலையப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:

பெங்களூரு குண்டுவெடிப்பு நிகழ்வுகளைக் கேட்டு திடுக்கிட்டேன். இத்தகையச் சம்பவங்கள் நடக்க உளவுத்துறை சரிவர இயங்காததே காரணம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சென்னையில் நடக்கும் தென்னிந்திய டி.ஜி.பி.க்கள் மாநாட்டிற்காக நேற்று சென்னை வந்த கர்நாடக மாநில காவல்துறை டி.ஜி.பி. ஸ்ரீகுமார் கூறுகையில்,

”இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மக்கள் தாங்கள் அறிந்ததை காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். அது விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.

admin @ 10:19 pm
Filed under: news
2008/06/07 Yeddyurappa Govt., wins trust vote

Posted on Friday 6 June 2008

கர்நாடகா: எடியூரப்பா அரசுக்கு வெற்றி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றிபெற்றது.

மேலும்…

admin @ 8:55 pm
Filed under: news
2008/06/03 No compromises for Hogenakkal: Yeddyurappa

Posted on Tuesday 3 June 2008

yeddyurappa.jpgஒகேனக்கல்: சமரசத்துக்கு இடமில்லை!- எடியூரப்பா திட்டவட்டம்

தில்லி: ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தமிழகத்துடன் சமரசத்துக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும்…

admin @ 4:51 am
Filed under: news
2008/05/31 Yeddyurappa sworn in…

Posted on Saturday 31 May 2008

ஒகேனக்கல்: மந்திரிசபை கூடி முடிவெடுக்கும்:- முதல்வரானதும் எடியூரப்பா பேச்சு

பெங்களூர்: தென் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் அரசு நேற்று பதவி ஏற்றது. முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டார். எடியூரப்பாவின் மந்திரி சபையில் 29 பேர் மந்திரிகளாக நேற்று பதவி ஏற்றனர்.

மேலும்…

admin @ 2:21 am
Filed under: news
2008/05/31 MK greets Yeddyurappa!

Posted on Friday 30 May 2008

எடியூரப்பாவுக்கு கருணாநிதி வாழ்த்து!
 
சென்னை: கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்…

admin @ 9:11 pm
Filed under: news