Vaiko wants TN ministers to quit for Srilanka’s Tamils

Posted on Wednesday 15 October 2008

இலங்கையில் போர் நிறுத்தம்: தமிழக அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: வைகோ

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை மத்திய அரசு உடனடியாக நிர்ப்பந்திக்கவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்துகொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்துள்ளது.

எனவே, இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட உதவி அல்ல. சிங்கள அரசுக்கு ராணுவ பலத்தைக் கூட்டுவதற்காகவே வழங்கப்பட்ட உதவி ஆகும்.

இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா ராணுவ உதவி செய்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 2ஆம் தேதியன்று எனக்கு எழுதியுள்ள கடிதம், ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாகவே உள்ளது.

இலங்கை விமானப்படைக்கு வழங்கி உள்ள ரேடார்களை, இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இலங்கைக்கு அனுப்பியுள்ள இந்திய ராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும். குறைந்த வட்டியில் மானிய உதவி போல  இலங்கைக்கு வழங்குவதாகச் சொன்ன கடனை, ரத்து  செய்வதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் செய்து கொண்ட தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இலங்கை ராணுவத்துக்கும், விமானப் படையினருக்கும் இந்தியாவில் அளிக்கின்ற பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் சிங்கள அரசு தன்னிச்சையாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒவ்வொரு நாளும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவம் கொடூரத் தாக்குதல்களை நடத்தி, பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

உடனடியாகத் தாக்குதலை இலங்கை அரசு நிறுத்திவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்குமாறும், சிங்கள அரசின் நடவடிக்கைகளால், முறிந்து போன அமைதிப் பேச்சுகளை, ஏற்கனவே நடுநிலைமையோடு கடமை ஆற்றிய நார்வே அரசை நடுவராகக் கொண்டு நடத்த வேண்டும் என்றும் ஐ.நா. அலுவலகத்தைக் கொழும்பில் திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.

இதைச் செய்வதற்கு சிங்கள அரசு முன் வராவிட்டால், இலங்கையுடனான ராஜிய உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ளும் என்றும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன் வராவிடில், அந்த அரசுக்குத் தரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக முதல்வர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களவருக்கு ஆயுதங்களை வழங்கி துரோகம் செய்த இந்திய அரசின் குற்றத்துக்கு, மத்திய அமைச்சரவை தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே, இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்வதற்கு உரிய நிர்பந்தத்தை மத்திய அரசு உடனடியாகச் செய்யாவிடில், அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனபடுகொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும், ஆயத்தமாக உள்ள ம.தி.மு.க. வுக்கு, அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டே அல்ல’ என்று கூறியுள்ளார்.

admin @ 2:01 am
Filed under: news
Centre does not supply weapons to Srilanka: Thangabalu

Posted on Wednesday 17 September 2008

இலங்கைக்கு ஆயுத உதவி: காங்கிரஸ்மீது வீண் குற்றச்சாட்டு: தங்கபாலு

செ‌ன்னை: இலங்கைக்கு மத்திய அரசு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை. காங்கிரஸ்மீது வீண் குற்றச்சாட்டு கூறவேண்டாம் என்று தங்கபாலு கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

மத்திய அரசு இதில் உடனே தலையிட்டு 27 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தவும், அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதைக் குறிப்பிட்டு பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்ற கருத்தை பொறுத்தவரை, இருகட்சி தலைமைகளும் பேசி முடிவு எடுக்கவேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் கருத்தை நான் வரவேற்கிறேன். தமிழக ஆட்சியில் பங்கு குறித்து எங்கள் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில பேசி முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து சோனியா காந்தி முடிவு செய்வார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை தமிழர் மீதான எனது கவலையை தெரிவித்தேன். அதற்கு பாதுகபாப்புத் துறை அமைச்சர் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசிடம்
பேசி வருவதாகவும் சொன்னார்.

இலங்கை அரசுக்கு மத்திய அரசு எந்த நிலையிலும் ஆயுத உதவி செய்யவில்லை. ஆயுதம் வழங்குவதாகக் கூறுவது பொய்யான குற்றச்சாட்டாகும். காங்கிரஸ் ஆட்சிமீது யாரும் வீண் குற்றச்சாட்டு கூற வேண்டாம்” என்றார்.

admin @ 1:55 am
Filed under: news
Tamil Elam will establish when PMK rule TN: Ramadoss

Posted on Saturday 13 September 2008

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும்: ராமதாஸ்
 
சென்னை: பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ‌இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் பேசினார்.

பா.ம.க. சா‌ர்‌பி‌ல் தி.மு.க. கொள்கையும், பா.ம.க. கொள்கையும் என்ற தலைப்பில் செ‌ன்னை ‌வியாச‌ர்பாடி‌யி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்துகொண்டு ராமதா‌ஸ் பேசுகை‌யி‌ல்,

”பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்‌க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பா.ம.க. போ‌ல் எந்தக் கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை.

தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினோம். அதை அவ‌ர்க‌ள் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளவி‌ல்லை.

பா.ம.க.வுக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்கிறார்கள். பா.ம.க. கொள்கை உள்ள கட்சி. இங்கு ரவுடிகளுக்கு இடமில்லை. அவர்களை நாங்கள் சேர்ப்பதும் இல்லை. எங்கள் கட்சிகாரர்களுக்கு ரோஷம் உண்டு. தன்மான உணர்வு உண்டு. தன்மானத்தை மட்டும் விட்டுத்தர மாட்டார்கள்.

இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். அதை கொடுத்தாலே மக்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்கள். ரூ.1 அரிசி யாருக்கு வேண்டும்?

இலங்கையில் ஈழத்தமிழர்களை ராணுவம் அழித்து வருகிறது. அந்தத் தமிழர்களை காக்க வேண்டமா? நம் கண் முன்னே ஓர் இனம் அழிகிறது. தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள். அவர்களை காக்க வேண்டமா? பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும். அதைபோல் 2011இல் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் ஒரு துளி மதுகூட இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” எ‌ன்று கூ‌றினா‌ர். 

admin @ 12:06 am
Filed under: news
Ramadoss condemns Centre to help Srilankan Army

Posted on Thursday 11 September 2008

இலங்கைக்கு ராணுவ உதவி கூடாது: ராமதாஸ்

நெல்லை: தமிழர்களுக்கு எதிராக அட்டூழியம் செய்துவரும் இலங்கைக்கு மத்திய அரசு ராணுவ உதவி அளிப்பது கண்டிக்கத்தக்கது. இதை உடனே நிறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நெல்லையில் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

”இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்னையில் இந்திய அரசின் அணுகுமுறை மாற வேண்டும். இலங்கைக்கு ராணுவ உதவி கிடையாது என்று சொல்லிக் கொண்டே, மறைமுகமாக ராணுவ உதவி அளித்து வருவதை நிறுத்த வேண்டும்.

இலங்கைக்கு இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என்ற பாகுபாடு கிடையாது. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே விரோதிகள்தான்.

இரு தினங்களுக்கு முன் வவுனியாவில் நடந்த தாக்குதலில் இலங்கை ராணுவத்துக்காக ரேடார் கருவியை இயக்கிவந்த இந்திய ராணுவத்தினர் காயமடைந்த செய்திக்குப் பிறகுதான் இந்தியாவின் இன்னொரு முகம் வெளியில் தெரிந்துள்ளது.

இது தமிழர்களுக்கு எதிரான செயல் என்பதிலே எள்ளளவும் சந்தேகமில்லை. உடனடியாக இலங்கைப் போர் முனையில் உள்ள இந்திய ராணுவப் பொறியாளர்கள் மற்றும் இதர பிரிவினரை திரும்ப அழைக்க வேண்டும்.

இந்தியா இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் வழங்காது, எதிர்காலத்தில் வழங்கவும் மாட்டோம் என்று தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.

இதுவரை தமிழக முதல்வர் மெளனமாக இருந்தது போதும். இனியாவது இந்த விஷயத்தில் மத்திய அரசை கடுமையாக நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள அரசுக்கு அவர்களுக்குப் புரிகின்ற மொழியிலேயே பதிலடி தர வேண்டும்.

இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரிசி விலை 1 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பால் சாதாரண மக்களுக்கு மாதத்துக்கு ரூ.20 மட்டும்தான் நிவாரணம் கிடைக்கும். மற்றபடி இது கடத்தல்காரர்களுக்குத்தான் சாதகமாக முடியும்.

தி.மு.க. ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மதுவெள்ளம் ஆறாக ஓடுகிறது.

அரசியல் சட்டம் 47-ஐப் பயன்படுத்தி மதுப் பழக்கத்தை குறைக்கிற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991இல் கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தினாலே போதும்.

அந்த சட்டம், கள்ளச்சாராயம், மது விற்கும் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., உதவி ஆய்வாளர் போன்றோரை முதல் முறை எச்சரிப்பது, இரண்டாவது முறை சஸ்பெண்ட் செய்வது, மூன்றாம் முறை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்துகிறது. இதைக் கடுமையாக அமல்படுத்தினாலே கள்ளச் சாராயப் பிரச்னை தீர்ந்துவிடும்” என்றார்.

admin @ 2:08 am
Filed under: news
2008/09/05 Lenavin Parvayil

Posted on Friday 5 September 2008

fishers-boat.jpgஇருபக்க இடைவெளிகள்!

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என இலங்கை அரசு அளித்துள்ள உறுதி ஆறுதலான விஷயமாகும்.

இந்திய - இலங்கை எல்லைகள் மிக நெருக்கமானவை. காற்றின் ஆதிக்கத்தினாலோ, மீன்பிடிக்கும் ஆசையிலோ பல நேரங்களில் தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும் சுடப்படுவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

நம் கடல் எல்லைகளுக்குள் மீன்வளம் குறைவு. ஆனால் இலங்கையின் தலைப்பகுதியான வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் மீனவளம் அபாரமாக உள்ளது. ஆனால் இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு இலங்கை மீனவர்களே மீன்பிடிக்கக் கூடாது என்கிற தடை இன்னமும் இருந்து வருகிறது.

இலங்கை மீனவர்களால்கூடப் பயன்படுத்தப்படாத பகுதி என்பதால் நம் மீனவர்கள் இப்பகுதிவரை சென்று தங்கள் உயிரைப் பணயம் வைக்கவும் முன்வருகின்றனர்.

இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை நம் கப்பற்படை காத்து வருவதால், இந்த எல்லைகளுக்குள் இலங்கைக் கடற்படை உள்ளே நுழைந்து நம் மீனவர்களைத் தாக்கும் சம்பவம் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம்.

இரவு நேரங்களில் எல்லை தாண்டி வரும் படகுகள் மீன்பிடி படகுகளா அல்லது விடுதலைப் புலிகளின் படகுகளா என்று அறியாத நிலையில், பாதுகாப்புக் கோணத்தில் இலங்கைப் படைகள் சுடுவதும், நெருங்கி வந்து கைது செய்வதும் உண்டு. இச்சம்பவங்களின்போதுதான் அத்துமீறல்கள் நடப்பதாக நம் மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் மாத இறுதியில் தனுஷ்கோடி அருகே உள்ள 3ஆம் தீடைப்பகுதியில் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடந்த தாக்குதல் இத்தகைய இரகத்தைச் சேர்ந்ததுதான். இதில் மனிதாபிமானமற்ற செயல்கள் நடந்துள்ளதை நம் மீனவர்கள் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்திய இலங்கைப் பிரதமர்களின் சந்திப்பின்போது, தமிழன மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விரிவாக அலசப்பட்டதும் இதன்பிறகு இருநாட்டு அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளும் இப்பிரச்னையை நல்ல தீர்வை நோக்கி நகர்த்தியிருக்கின்றன என்று நாம் நம்ப இடமிருக்கிறது.

இது வெறும் மீன் சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல, இலங்கையின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், இலங்கை அரசு தீவிரம் காட்டியது. இப்போதுதான் பிரதமர்களின் அளவில் பேசப்பட்ட விஷயமாகியிருப்பதால் இனி இதில் உலக நாடுகளே உன்னிப்பாகப் பார்க்கும் நிலைமை உருவாகியிருக்கிறது.

எனவே, இலங்கைக் கடற்படை, இலங்கை அரசு அளித்துள்ள உறுதி மொழியை கண்ணியத்துடன் காக்கும் என நம்பலாம்.

தமிழக மீனவர்களும் தங்கள் பங்கிற்கு நம் கடல் எல்லைகளைத் தாண்டாதிருப்பதே பாதுகாப்பானது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 12:03 am
Filed under: Uncategorized
Tamil fishermen attacked by Srilankan’s navy

Posted on Monday 25 August 2008

மீனவர்களை நிர்வாணமாக்கி அடித்து உதைத்த இலங்கை கடற்படை

ராமேசுவரம்: தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் தாக்கினர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் பல படகுகள் தனுஷ்கோடி 3ஆம் தீடை  அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தன.

அப்போது திடீரென இலங்கை கடல் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி, அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ராமேசுவரம் மீனவர்களை நெருங்கினார்கள்.

பின்னர் படகுகளுக்குள் புகுந்த அவர்கள் மீனவர்களை நிர்வாணமாக வைத்து ‘இந்த பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது’ என்று கூறி மிரட்டினர். பின்னர் அவர்களை உருட்டுக் கட்டைகளால் தாக்கிவிட்டு மீன் வலைகளையும் அறுத்ததோடு, பிடித்து வைததிருந்த மீன்களையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். இதனால் தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் சோகத்துடன் ராமேசுவரம் திரும்பினர்.

தாக்குதலில் காயம் அடைந்த ராமேசுவரம் கடற்கரை மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனவர் ஜோசப் கூறியதாவது:

”நாங்கள் தனுஷ்கோடி அருகே 3-ம் தீடை பகுதியில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் இலங்கையில் இருந்து ஊதா நிற பிளாஸ்டிக் படகு வந்தது. அதில் கடற்படையினர் அரைக்கால் டிரவுசர் மற்றும் ஊதா நிறத்தில் சட்டை அணிந்து இருந்தனர். அவர்களது கையில் துப்பாக்கி, அரிவாள் மற்றும் கட்டைகள் இருந்தன. எங்களது படகில் ஏறிய அவர்கள் நாங்கள் மீன்பிடிக்க கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து எரிந்தனர்.

பின்னர் நாங்கள் அணிந்திருந்த லுங்கி, சட்டைகளை அவிழ்த்து ஜட்டியுடன் நிற்க வைத்து எங்களை தாக்கினர். பின்னர் படகில் இருந்த, ‘வீல்ஹவுஸ்’ என்ற இடத்தில் நாங்கள் வைத்திருந்த செல்போன், டார்ச்லைட், பீடி, தீப்பெட்டி ஆகியவற்றை எடுத்துக் கொண்டதோடு நாங்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன் மற்றும் காரல் மீன்களை அள்ளிக்கொண்டு எங்களை கடுமையாக தாக்கினர். இதில் எனக்கு இடது முழங்காலுக்கு மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதன்பின் என்னுடன் வந்த மற்ற 3 பேரின் உடைகளையும் தூக்கி வீசினர். எனது லுங்கியை தரும்படி கேட்டதற்கு அதனை கடலில் வீசிவிட்டனர். இந்த பகுதியில் இனிமேல் மீன்பிடிக்க வந்தால் வெட்டிக்கொலை செய்துவிடுவோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். உயிர் பிழைத்தால் போதும் என நாங்கள் ராமேசுவரத்திற்கு திரும்பி விட்டோம். எங்களை தாக்கியவர்கள் தமிழில்தான் பேசினார்கள்’ என்றார்.

admin @ 3:28 am
Filed under: news
Jayalalitha moves SC over Kachativu

Posted on Friday 8 August 2008

கச்சத்தீவை திரும்பப் பெற ஜெயல‌லிதா வழ‌க்கு

jayalalithaa.jpg

சென்னை: இலங்கைக்கு தரப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயல‌லிதா உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாவது:

‘கச்சத்தீவை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே 26.6.1974 இல் ஓர் ஒப்பந்தமும், அதன்பிறகு மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் இந்தியா இலங்கையின் கடல் எல்லையை நிர்ணயிக்க 23.3.76இல் ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன.

இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவித்து அதனை ரத்து செய்து உத்தரவிடவேண்டும். இலங்கை அரசிடம் இருந்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இந்திய  மீனவர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து, அவர்களின் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இந்திய நிலப்பரப்பை மற்றொரு நாட்டுக்கு விட்டுத்ருவதால் இந்திய யூனியனின் நிலப்பரப்பு குறைகிறது.

எனவே இத்தகைய ஒப்பந்தங்கள் அரசியல் சட்ட திருத்தம் மூலமாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றிருக்கவேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 368ஆவது பிரிவை வலியுறுத்தி, பெருபாரி யூனியன் மற்றும் நிலப்பரப்பு பரிமாற்றம் தொடர்புடைய இந்திய - பாகிஸ்தான் உடன்பாடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இலங்கையுடன் 2 ஒப்பந்தங்களிலும் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லை. எனவே கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்’ எனக் கூறியுள்ளார்

admin @ 4:57 am
Filed under: news
Srilankan Tamils arrested in Chennai

Posted on Wednesday 6 August 2008

கைதான விடுதலைப்புலிகள் பரபரப்பு வாக்குமூலம்:
மனைவியாக நடித்த கல்லூரி மாணவி எங்கே?

amalan-uma-ramanan.jpg

சென்னை: சென்னையில் வெடிப்பொருட்களுடன் பதுங்கி இருந்த மேலும் 2 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு வெடிகுண்டு பொருட்களை கடத்திச் செல்லும் அவர்களுடைய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இலங்கையில் போர் காரணமாக விடுதலைப்புலிகளுக்குத் தேவையான வெடிப்பொருட்கள், உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, இதை தடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவின்பேரில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இலங்கைக்கு தொலைதொடர்பு சாதனங்களை கடத்த முயன்றதாக விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு செல்வக்குமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலும் 2 விடுதலைப்புலிகள் சென்னையில் சிக்கினர்.

சென்னை திருமங்கலம், திருவள்ளீஸ்வரர் நகர், இளங்கோ தெருவில் ரகசியமாக தங்கியிருந்த அப்பாதுரை என்கிற அமலன்(29) உமாரமணன் என்கிற தணிகைவேந்தன்(23) ஆகிய விடுதலைப்புலிகளை சென்னை காவல்துறையினர் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் படை வீரர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கள்ளத்தோனி மூலம் ராமேஸ்வரம் வந்த அமலன் கடந்த 4 மாதமாக அகதிகள் என்ற பெயரில் வசித்துவந்தார். உமாரமணன் விமானம் மூலம், சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ளார்.

பின்னர் இந்த இருவரும் சந்தித்துப் பேசி திருமங்கலத்தில் வாடகைக்கு வீடுபிடித்து தங்கியுள்ளனர். அவர்களிடம இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் நைட்ரேட் என்ற வெடிப்பொருள் 11/2 கிலோவும் பென்சில் பேட்டரிகள் 12ம், ரூ.23ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் சென்னையில் தங்கியிருந்து, விடுதலைப்புலிகளின் பயன்பாட்டிற்காக வெடிபொருட்களை வாங்கி, இலங்கைக்குக் கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தனர். தமிழக காவல்துறையினர் தக்க சமயத்தில் தடுத்துவிட்டனர்.

மேலும் அமலனின் மனைவியாகவும் கல்லூரி மாணவியாகவும் நடித்த பெண்ணை சென்னை காவல்துறையினர் தேடிவருகின்றனர். அகதிகள் போர்வையில் சென்னை நகருக்குள் மேலும் விடுதலைப்புலிகள் நுழைந்துள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை  நடந்து வருகிறது.

admin @ 9:02 pm
Filed under: news
Agent of LTTE held in Chennai

Posted on Wednesday 6 August 2008

அதிநவீன கருவிகளுடன் விடுதலைப்புலி ஏஜெண்டு கைது

சென்னை: சென்னையில் விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு கைது  செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இலங்கைக்குக் கடத்தவிருந்த தொலைதொடர்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவிரவாதிகளைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ள காவல்துறையினருக்கு நேற்று ஒரு தகவல் வந்தது. அந்தத் தகவலில், சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடத்தல் ஏஜெண்டுகள் நடமாடுவதாகக் கூறப்பட்டது.

காவல்துறையினர் மாறுவேடமிட்டு அந்தப் பகுதியில் கண்காணித்து வந்தனர். மடிப்பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் விடுதலைப்புலிகளுக்காக தொலைத் தொடர்பு தகவல் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது.

உடனே அந்தக் கடையில் கியூ பிரிவு காவல்துறை சோதனையிட்டது. அந்தச் சோதனையில் செல்போன் மூலம் மோட்டார்களை இயக்கும் ஸ்டார்டர் கருவிகள், 50 கி.மீ. தூரம்வரை பேசக்கூடிய சக்தி வாய்ந்த தொலைபேசி இணைப்புக் கருவிகள் (பவர் ஸ்டேஷன், நானோ ஸ்டேஷன்), இண்டர்நெட் போன் அடாப்டர் 9 போன்றவை  கைப்பற்றப்பட்டன.

இந்தப்பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தவிருந்த விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு செல்வம் என்ற செல்வக்குமார் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,

இலங்கை, கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த செல்வக்குமாருக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களோடு தொடர்பு உண்டு. இலங்கையில் போர் பெரிய அளவில் வெடித்தபோது கள்ளத்தோணி மூலம் அடிக்கடி தமிழகம் வந்து சென்றிருக்கிறார். சென்னை கேளம்பாக்கத்தில் பாஸ்ட் கடைகூட நடத்தியிருக்கிறார். அகதிகளுக்கு உதவும் அமைப்புகளில் அலுவலராய் பணியாற்றியுள்ளார். அப்போது  காவல்துறை தொல்லை அதிமாக இருந்தபடியால் இலங்கைக்கு திரும்பி சென்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் அகதியாக மண்டபம் வந்திருக்கிறார். அங்கிருந்து கேளம்பாக்கம் வந்திருக்கிறார். அங்கே பாஸ்ட்புட் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வக்குமாருக்கு, இலங்கையைச் சேர்ந்த விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் இனியவன், சென்னைக்கு பிரான்சில் இருந்து வந்திருக்கும் தொலைதொடர்புக் கருவிகளை  இலங்கைக்கு கடத்தி வரும்படி கட்டளையிட்டார். அப்படிச் செய்யாவிட்டால் செல்வக்குமாரின் குடும்பத்தினரை கொன்று விடுவோம் என்று மிரட்டியதால் இந்தக் கடத்தலைச் செய்ய ஒப்புக்கொண்டேன். அதற்கு முன்பாக காவல்துறையினர் கைது விட்டார்கள்’  என்று கூறியுள்ளார்

பின்னர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

admin @ 3:12 am
Filed under: news
15th SAARC summit ended in Colombo

Posted on Sunday 3 August 2008

சார்க் மாநாடு முடிந்தது:
தீவிரவாத ஒழிப்பு உள்பட 4 ஒப்பந்தம் கையெழுத்து

maldives.jpg

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் 2 நாட்கள் நடந்த சார்க் (SAARC) உச்சி மாநாடு நேற்று முடிவடைந்தது. இம்மாநாட்டில் தீவிரவாதிகள் ஒழிப்பு உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 41 அம்ச கூட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்தது.

இம் மாநாட்டிற்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் அப்துல் ரசாக் கிலானி, வங்கதேச ராணுவ சட்ட தலைமை நிர்வாகி பக்ருதீன் அகமது, நேபாள இடைக்கால பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, பூடான் பிரதமர் ஜிக்மி தின்லே, மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடைசி தினமான நேற்று தீவிரவாதம், கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக சார்க் நாடுகளிடையே பரஸ்பரம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், சட்டப்பூர்வமாக உதவி அளிக்கவும் வகை செய்யயும் ஒப்பந்தம், சார்க் நாடுககள் வளர்ச்சி நிதி அமைப்பதற்கான ஒப்பந்தம், சார்க் தடையற்ற வர்த்தக அமைப்பில் புதிய உறுப்பினராக ஆப்கானிஸ்தானை சேர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம், தெற்கு ஆசிய பிராந்திய தர கட்டுப்பாடு நிறுவனம் அமைக்க வகை செய்யும் ஒப்பந்தம் ஆகிய 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சார்க் நாடுகளிடையே போதைபொருள், ஆயுதம் மற்றும் மனிதர்களை சட்ட விரோதமாகக் கடத்துவதை தடுத்தல், தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச மற்றும் சார்க் நாடுகளின் தீர்மானங்களை நிறைவேற்றல், சார்க் நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை முழுமையாக நிறைவேற்றல், பிராந்திய தொடர்பை மேம்படுத்த நேரடி தொலைபேசி தொடர்பு வசதி, பலநோக்கு நவீன போக்குவரத்து வசதியை செய்தல், நீர்வள ஆதாரம், சுற்று சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானம், சுற்றுலா கலாசாரம், கல்வி, பெண்கள், குழந்தைகள் நிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 41 அம்ச கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

அடுத்த சார்க் மாநாட்டினை நடத்த மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் முன்வந்தார். இதை சார்க் நாடுகள் ஏற்றுக்கொண்டன. அடுத்த சார்க் (16ஆவது) மாநாடு, மாலத்தீவு தலைநகரான மாலியில் நடைபெறும்.

admin @ 11:40 pm
Filed under: news