Friday 18 April 2008
சீனம் சென்று வந்தேன்
சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
முத்துச்சங்கர் அழைத்துச் சென்ற சீன உணவகம் ஒரே மிரட்டலாக இருந்தது. பாம்புகள்தாம் நெளியவில்லை மற்ற எல்லாம் இருந்தன.
நத்தைகள்; சிப்பிகளில் நெளிந்த உயிரினங்கள்; இதுவரை பார்த்திராத கடல்வாழ் சமாசாரங்கள் என இரகம் இரகமாக வரிசை வரிசையாக இருந்தன. உவ்வே! இதையெல்லாம் கூடவா சாப்பிடுவார்கள் என்று நம் முகத்தை நாமே எட்டுக் கோணலாக்கிய உயிரினங்களும் இதில் அடக்கம்.
பாம்புகள் இல்லையே தவிர, பாம்பு போன்ற நீள நீளமான உயிரினங்கள் கொசகொசவெனத் திரிய அவற்றில் சிலவற்றை நான் பார்க்க ஒரு வலையில் அள்ளிக்கொண்டு போனார் ஒரு தொப்பிக்காரர்.
கூடவே வந்த இரு அழகான சீனப் பெண்மணிகள் நம் திருவாய் மலர்ந்தருளக் காத்திருக்கிறார்கள் ஒரு குறிப்பு நோட்டுடன்.
‘கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பது பெரிதல்ல. அவற்றை உயிரோடு இந்த இடத்திற்கு நகர்த்துகிற சாமார்த்தியம் வியக்கத்தக்க விஷயமே. ஆழ்கடலில் பிடித்து வலையில் தூக்கும் போதே இவை செத்துவிட வாய்ப்பு அதிகம். ஆனால் அனைத்தையும் உயிருடன் தருகிறோம். வேண்டுமென்பதைத் தேர்வு செய்து உண்ணுங்கள்’ என்று சொல்கிற விதமே அலாதிதான்.
முத்துசங்கருக்குக் கடலளவு மனது. ஆர்டர் செய்தார் பாருங்கள் ”சார்! இவ்வளவெல்லாம் சாப்பிட முடியாது. நான் மிகவும் அளவோடு சாப்பிடுகிறவன். செந்தில்குமார் பற்றி உங்களுக்குத் தெரியும். பார்த்துக் கொள்ளுங்கள்” என்ற என் வேண்டுகோள் முத்துசங்கரிடம் சுத்தமாக எடுபடவில்லை.
எங்கள் மூவருக்குப் பத்து வகையான உணவுகளை ஆர்டர் செய்து குவித்தார்.
”வாருங்கள் மேலே போகலாம்”
”உணவு அறை இங்குதானே இருக்கிறது. ஏன் மேலே போக வேண்டும்?”
”வாருங்கள், பாருங்கள் மேலே!”
போனால் ஏதோ அரண்மனையின் அறைபோல இருந்தது. நிச்சயம் இங்கு கூடுதல் விலை வைத்துத்தானிருப்பார்கள் என்பதை அங்கிருந்த ஆடம்பரமே சொல்லியது. மூன்று பெண்கள் அழகழகாய் வணங்கி எங்களை வரவேற்று ராஜமரியாதை செய்தார்கள்.
அங்கிருந்து அழைத்துப் போக ஒரு ராஜகுமாரன் போன்ற சீன அழகன். போய் அமர்ந்தால் அங்கு இருபெண்கள் எங்களுக்காக நாற்காலிகளை நகர்த்திப் போட்டார்கள்.
எங்களைத் தேவகுமாரர்கள்போல் நடத்தினார்கள்.
முதலில் ஒரு சில வகை உணவுகள் வந்தன. முரட்டு முரட்டுப் பீங்கான் பாத்திரங்களில் ஏக ஜோடனைகளுடன் உணவு வந்ததைப் பார்த்ததுமே வயிறு நிரம்பி விட்டதைப்போல் உணர்ந்தேன். வந்தவை நான்கு. ”இன்னும் ஆறு வரபோகின்றனவா? சார்!” என்றேன்.
”அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா சாப்பிடுங்க. வயித்துக்குள்ள போறதே தெரியாது” என்றார் முத்துசங்கர்.
அட, சீனாவில் உள்ள சீனர்கள்தாம் கன்னாபின்னாவென்று ஆர்டர் செய்து முடிந்ததைச் சாப்பிட்டு, மீதம் வீணாவதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுந்து செல்கிறார்கள் என்றால் இங்கு வந்து வாழும் நம்மவர்களுமா இப்படி?
உணவு வகைகள் வந்துவந்து வயிற்றை முட்டவைத்தன. வீணாக்கக்கூடாதே என்று வயிற்றை நிரப்புவது என் குணமே அல்ல. ஆனால் இங்கு நான் அப்படி நடந்து கொள்ளவில்லை.
என் நினைவு தெரிந்து இப்படி ஓர் ஓட்டல் விருந்தை நான் உண்டதே இல்லை. முத்துசங்கர், நாங்கள் உணவு உண்டு எழுமுன் ”இன்னும் என்ன சொல்லட்டும்” என்றாரே பார்க்கலாம்!
”அலுவலக நேரத்தில் வெளியில் வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் எங்களுடன் இருக்கிறீர்களே, உங்களை எவரும் கேட்கமாட்டார்களா?”
”மாட்டார்கள். ஆச்சரியப்படுவார்கள்”
”என்னது! ஆச்சரியப்படுவார்களா?” ”ஆமாம்! முத்து சங்கராவது சாப்பாட்டிற்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வதாவது என்று ஆச்சரியப்படுவார்கள்”
”அட! அலவலகத்தில் இவ்வளவு நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்களே!”
“ஒரு வெளிநாட்டவர் சீனாவில் நடத்தும் நிறுவனத்தில் பல்லாண்டுகளாகப் பணிபுரிவது என்றால் சாதாரணமா என்ன?”
முத்துசங்கரிடம் விடை பெற்றோம். முகமறியாத ஒருவர் இப்படி மனம் வந்து பெரும்பணம் செலவழித்து மறக்க முடியாத விருந்தைக் கொடுத்ததில் நான் நெகிழந்து போயிருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
அவரோ, இதமாக மறுத்து உங்களுக்கெல்லாம் விருந்து கொடுக்க எனக்குக் கொடுத்து வைச்சிருக்கணும் என்றவர்.
”நாளை காலை எங்கள் வீட்டிற்கு வருகிறீர்கள்” என்று தீர்மானமாகப் பேசினார்.
”ஐயோ! தாங்காது! எனக்கு நிறைய வேலை இருக்கிறது”
”அதெல்லாமில்லை. உங்கள் வருகை, மதிய உணவு பற்றிச் சொன்னேன். நீங்கள் ஓட்டலில் விருந்து கொடுத்தால் போதுமா? நம்வீட்டில் ஒரு வேளையாவது சாப்பிட வேண்டாமா அவர்? என்று மனைவி கேட்கிறாள். அவளைச் சமாதானப்படுத்த முடியலை” ஏதடா இது வம்பாய் போச்சு! சீனாவுக்கு வந்ததே ஏதோ சாப்பிடத்தான் போலிருக்கிறதே!
செந்தில் குமாரைப் பார்த்தேன். அவரோ ”எங்கே உங்க வீடு?” என்று தம் கேள்வியின் மூலம் சம்மதமே தெரிவித்து விட்டார்.
மறு நாள் ஷாங்காயின் ஒரு பரபரப்பான தெருவுக்குப் பின்னால் உள்ள நூற்றுக் கணக்கான குடியிருப்புகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய அடுக்ககத்திற்குப் போனோம்.
வீட்டைக் கண்டுபிடிக்க சற்றுத் திணறியபோது செந்தில் குமார், முத்துசங்கருக்கே பேசினார்.
”கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க செந்தில். நீங்கள் இருவரும் நிற்பதை என்னால் பார்க்க முடிகிறது என்றார்”
நிமிர்ந்து பார்த்தால் உயரே இருந்து கையைக் காட்டினார். செல்போன் சனியன் பல நேரங்களில் படுத்தினாலும் இத்தகைய வேளைகளில் மிக உபயோகமாக இருப்பதை உணர்ந்தேன். திருமதி உமாசங்கர் சிரித்த முகத்துடன் மிரட்சி ஏதுமின்றி நன்கு வரவேற்றார். ”இப்பத்தான் வீடு மாறினோம். எனவே சரிவர செட்டில் ஆகலை. அது அது அப்படியே கிடக்குது. பையனுக்கு வேறு உருட்டுற வயது. எனவே வீடே ஒரு மாதிரியாக இருக்கும். கண்டுக்காதீங்க” என நன்கு அறிமுகமாகிவிட்டவர்போல் பழகினார்.
”எனக்கு வீட்டு விருந்து தர வேண்டும் என்றீர்களாம். மகிழ்ச்சி. எழுத்தாளர்கள் என்றால் உங்களுக்குச் சற்று நன்மதிப்பு என்று நினைக்கிறேன்”
”உண்டு. ஆனால் என்னைவிட என் அப்பாவுக்கு எழுத்தாளர்கள் என்றால் இன்னும் பிடிக்கும். எழுத்தாளர்கள் மீது உள்ள நன்மதிப்புக் காரணமாக எனக்கே ஓர் எழுத்தாளர் பெயரை வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!”
”என்னது! உங்கள் பெயர் ஓர் எழுத்தாளரின் பெயரா? உங்கள் பெயர்?”
”இந்துமதி! இந்துமதி எழுத்து என்றால் அப்பாவுக்கு மிகப் பிடிக்கும் எனவே அவர் பெயரையே வைத்துவிட்டார்!”
”அட! இந்துமதிக்குத் தெரிந்தால் அவ்வளவு சந்தோஷப்படுவார்! இந்துமதியைச் சந்தித்திருக்கிறீர்களா?”
”இதுவரை இல்லை. என்றாவது ஒரு நாள் பார்த்துவிட வேண்டும்”
”உங்கள் சந்திப்பிற்கு நானாச்சு”
செந்தில்குமார் ஒன்று சொன்னார். ”லேனா சார்! இந்துமதி மகிழ்வார் என்றீர்கள். தம்மீது கொண்ட அபிமானத்தால் தம் பெயரில் இவ்வளவு பெரிய பெண் இருப்பது தெரிந்தால், தம் வயது தெரிந்துவிடும் என்று இந்துமதி சற்று வருத்தம் கூட அடையக் கூடும்”
”ஓ! அப்படி ஒரு கோணம் இருக்கிறதோ!” நால்வரும் பெரிதாய்ச் சிரித்தோம்!
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!









































