Thursday 10 April 2008
சீனம் சென்று வந்தேன்
நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
லியைச் சந்திப்பது அரிதிலும் அரிது என எண்ணிக்கொண்டிருக்க அவரே எங்களை நோக்கி வர முத்துசங்கரை நெருங்கிச் சென்று அவரைச் சுரண்டினேன்.
”லியை இப்போது சந்திக்கக் கேளுங்களேன்!”
முத்துசங்கர் படுபக்குவமான ஆள். எவ்வித உணர்ச்சியையும் அதிகம் காட்டாதவர். அவரே சற்று மிரண்டுதான் போனார். சற்று நெளிந்தார் என்றும் சொல்லலாம்.
”லேனா சார் உங்களுக்குத் தெரியாத நாகரிகமா? வெள்ளைக்காரர்களை அதுவும் இவரைப் போன்ற பெரிய முதலாளிகளையெல்லாம் முன் அனுமதி இன்றி எளிதில் பார்க்க முடியாது. அதுவும் வெளிநாடுகளிலிருந்து வியாபாரம் பேசப் பலர் வந்திருக்கும் இந்த நேரத்தில் நாம் சந்திப்பது மிகக் கடினம். ஒரு ஹலோ சொல்வார். நீங்களும் பதிலுக்கு ஹலோ சொல்லுங்கள்”
”அறிமுகமாவது செய்து வைப்பீர்களா?”
”கஷ்டம் லேனா சார். அவர் மிகுந்த பரபரப்பில் இருக்கிறார் என நினைக்கிறேன்”
சட்டென்று என் முகம் வாட்டம் காட்டியதை முத்துசங்கர் கவனிக்கத் தவறவில்லை.
”ஹாய்! ஹலோ!” என்றபடி ‘லி எக்ஸ்பிரஸ்’ எங்களிடம் நிற்காமல் கடந்துபோனது.
”ஒரு வெற்றிகரமான தொழிலதிபரைச் சந்தித்தால் வெற்றியின் முகவரிகள் கிடைக்கும். அவற்றைக் கொண்டு சற்று ஊக்கம் பெறுவேன் நான். மற்றபடி எந்தக் கோரிக்கையும் இல்லை என்வசம்” என்றேன்.
”அது நன்று தெரியும். சில விநாடிகள் நின்று பேசுவதைக் கூட லி விரும்பமாட்டார்”
”இவர் வெற்றியின் ஒரு முகவரி கிடைத்துவிட்டது” என்று அர்த்தப் புன்னகையுடன் பதில் சொல்ல,
முத்து சங்கர் நிம்மதிப் பெருமூச்சுடன் சிரித்தார்.
”லி’ என்ற பெயர் சீனப் பெயர். இவரோ வெள்ளையர். இந்த இணைப்பு எப்படி? ஒன்றும் புரியவில்லையே!”
”எனக்கும் தெரியலை”
”லி-க்குச் சீன மனைவியோ?”
”நமக்கு என்னத்திற்கு அதெல்லாம்?” என்று சொன்ன முத்துசங்கரும் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை விசாரித்து என்ன ஆகப்போகிறது நமக்கு? என்கிற வெற்றியின் முகவரி இன்னொன்றையும் தந்தவர்போல் என் மனத்திற்குப் பட்டார்.
டிரைட்டன் சோபா நிறுவனம் நடந்து பார்க்கும்படியான நிறுவனமே அல்ல. அதுபாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் இருக்கிறது.
சோபாவின் உள் கட்டைகளை ஸ்டாப்லர்களால் இணைக்குமுன் சற்று வெள்ளைச் கோந்து தடவுகிறார்கள்.
என்னது! சோபாவை இணைக்க ஸ்டாப்லர்களா? என்கிறீர்களா? அப்படி ஒரு முரட்டு ஸ்டாப்லர்கள். பார்க்கத் துப்பாக்கிபோல் இருக்கிறது. காது கிழிபடுவது போன்ற சத்தத்துடன் ஏ.கே.47 துப்பாக்கி உமிழ்வதுபோல் பின்களை கக்கித் தள்ளுகிறது.
படுக்கைவசப் பலகை சமதளப் பலகை இருஅணைப்புப் பலகைகளை இணைக்கும் வேகம் அபராம். அடிக்கப்பட்ட ஸ்டாப்லர்களின் ஒழுங்கை ஸ்கேல் கொண்டு அளக்கலாம். சற்றும் விலகாமல் துல்லிய இடைவெளியில் இவ்வளவு நேர்த்தி இப்படிப்பட்ட வேகத்துடன் எப்படிச் சாத்தியம்?
செந்தில்குமாரிடம் இதை வியந்து சொன்னபோது, ”அதெல்லாம் பழகினால் நீங்கள்கூட இவ்வளவு துல்லியமாகச் செய்து காட்டுவீர்கள்” என மிகச் சாதாரணமாகச் சொன்னார்.
பக்கத்தில் ஒரு ஜென்மம் பார்வையாளனாய் வந்து நிற்கிறதே என்று என் பக்கம் ஒரு விநாடி திரும்பி பார்க்க வேண்டுமே? ஊகும்! ஓர் எறும்பு ஈக்குத் தரப்படுகிற முக்கியத்துவம்தான் எனக்கு. ஒரு திரும்பல்? ஒரு சிறு புன்னகை? ஊகும். ஒன்றும் இல்லை.
ஏதாவது சந்தேகம் கேள். உன்னிடம் உரையாடுகிற சாக்கில் சற்று இளைப்பாறுகிறேன். ஒடிந்துபோகும்படியான வேலையைச் செய்துவிட்ட கைகளுக்கு ஒரு சிறு ஓய்வு தருகிறேன் என்கிற சிறு எதிர்ப்பார்ப்புக்கூட அந்தச் சீன உழைப்பாளியிடம் இல்லை.
பெண்கள் பிரிவிலோ ஒரு சிறு பேச்சுக்கூட இல்லை. எங்கும் அரட்டை இல்லை. இந்தக் கதையடிக்காத சீனர்களின் உழைப்பு என் சீனப் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சங்களுள் ஒன்று என்று சொல்வேன்.
”இவ்வளவு வேகமாக இவ்வளவு இயந்திரமாக எவ்வளவு நேரம்தான் செயல்பட முடியும்? அயர்வும் சோர்வும் வராதா?”
முத்துசங்கர் சொன்னார்: ”என் அனுபவத்தில் சீனர்களைப் போல் நான் பார்த்ததே இல்லை. தொடர்ந்து இதே வேகத்துடன் உழைப்பார்கள். அயரவே மாட்டார்கள். கதையடிப்பது என்பது சீனர்களுக்கு கைவராத கலை”
முத்துசங்கரை வியப்போடு பார்த்தேன். இப்படிக்கூட ஓர் இந்தியர் சீனர்களை மனம் திறந்து பாராட்ட முடியுமா என!
மூலப்பொருள் தேக்கப்பட்டுள்ள அறையில் ஆரம்பித்து முடித்து வைக்கப்பட்ட சோபாக்களின் கண்காட்சி வரை எல்லாத் துறைகளையும் எல்லா அறைகளையும் போய்ப் பார்த்தோம்.
எங்கும் உழைப்பு உழைப்பு உழைப்பு. எதிலும் நேர்த்தி; காணுமிடமெல்லாம் அந்த உணர்வு. இவற்றைப் பார்த்தபோது சீனா இப்படி ஏன் முன்னேறாது என்பதற்கு விளக்கம் ஓரளவு கிடைத்த மாதிரி இருந்தது.
கைகால்கள் சோர்ந்து போகவே, ஓர் அறையில் எங்களை அமர்த்தி, டீ, காப்பியை வரவழைத்து விட்டார் முத்துசங்கர்.
”நான் காப்பி, டீ, பால் எதுவுமே சாப்பிடுவதில்லை” என்று சொன்னதைக் கேட்டு அசந்துபோனார்.
”எழுத்தாளர்னா நிறைய டீ, காப்பி குடிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க என்னாடான்னா?” என்று நிறுத்தினார்.
”சங்கமம் விருந்திலேயே கவனிக்கலையா நீங்க? வெறும் பழச்சாறுதானே குடிச்சார் இவர்!” செந்தில்குமார்.
”ஆமா இல்லே?”
”இங்கே பழச்சாறு வரவழைக்க வெகுநேரம் ஆகும். வேறு ஏதும்?”
”ஒன்றும் வேண்டாம். தண்ணீர் போதும்”
”தண்ணீர்க்கூட ரொம்பக் குடிச்சிடாதீங்க. மதிய உணவு உண்ணப்போறோம். இடம் வச்சுக்குங்க”
அதன்படி கூட்டிப் போனார் பாருங்கள்! இப்படிஓர் உணவகத்தை நான் பார்த்ததே இல்லை.
ஊர்வன, பறப்பன, நீந்துவன என அனைத்தும் உயிரோடு!
சாப்பிட உட்காரப் போனால், ஊகும்! உள்ளே போய் இன்னின்ன வேண்டும் என்று நீங்கள் நேரிடையாகக் காட்டிவிட்டுத்தான் சாப்பிட உட்கார வேண்டும் என்றார்கள். அந்தப் பகுதிக்கு அழைத்துப் போனால் ‘கிறுகிறு’ என்று வந்ததுதான் மிச்சம்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!









































