Friday 4 April 2008
சீனம் சென்று வந்தேன்
பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
செந்தில்குமாரின் பாகிஸ்தானிய தொழிற் பங்குதாரர் ஹாசன் மெட்லா, நான் சொன்ன ஒன்றிற்குப் பிரமாதமாக இப்படி ஒரு பதிலைச் சொன்னார்.
”செந்தில் நேரம் காலம் பாராமல் உழைக்கிறார். சமயங்களில் அவர் அலுவலகத்தில் வெகுநேரம் வரை வேலை செய்துவிட்டு விசிட்டர்களுக்கான சோபாவில் உறங்கியதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். நான் குடும்பத்தோடு இங்கு வசிக்கிறேன். அவர் குடும்பத்தை விட்டுவிட்டுத் தொலைதூரத்தில் வசிக்கிறார். அவர் பிறந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் வரப்போகிறீர்கள்; வந்து கொண்டிருக்கிறீர்கள்; வந்துவிட்டீர்கள் என்று உங்களைப் பற்றி அவர் தொடர்ந்து தகவல் தந்ததை வைத்தே அவர் உங்கள் மீது கொண்டிருந்த பிரியத்தை நான் நன்கு உணர்ந்தேன்”
”உங்களை வரவேற்பதில், உங்களுக்கு சீனாவைச் சுற்றிக் காட்டுவதில், உங்களைக் கவனித்துக் கொள்வதில் செந்தில் காட்டிய ஈடுபாட்டைப் பார்த்தபோது அவருக்கு எதில் மகிழ்ச்சியோ அது நன்று நடக்க வேண்டும் என நான் விரும்பினேன். நல்லவேளையாக எனக்கு அமையவேண்டிய தொலைவுப் பயணம் தள்ளிப் போய்விட்டது. எனவே கம்பெனி விவகாரத்தை நான் கவனித்துக் கொண்டு நீங்கள் சீனாவில் இருக்கும் அத்தனை நாட்களும் உங்களோடு அவரை இருக்கச் சொல்லிவிட்டேன். என் பங்குதாரர் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம்”
என்று எழுதி வைத்துப் படித்ததைப் போல் அட்டகாசமாக கோர்வையாக நல்ல ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னார்.
கொள்கைகளில் முரண்பட்ட இரு நாடுகளைச் சேர்ந்த இருவர் ஒன்றாக இணைந்து தொழில் செய்ய முடியும்; அதுவும் இப்படிப்பட்ட புரிந்துணர்வோடு நன்கு செயல்பட முடியும் என்று ஹசன்மட்லாவும், செந்திலும் ஷாங்காயில் நிரூபித்துக் கொண்டிருப்பது சற்று வித்தியாசமான விஷயமாகப் பட்டது.
ஹசன்மட்லாவின் உடல்மொழி, வாய்மொழி இரண்டையும் எனக்குள் இருக்கும் ஸ்கேனரில் முன்னும் பின்னும் இழுத்துப் போட்டு அலசிப் பார்த்ததில் அவை மனப்பூர்வமான எண்ணங்கள் என்றே தோன்றின. மாறாக பொய்மை கலந்தவையாகவோ, சம்பிரதாயமானவையாகவோ எண்ணத் தோன்றவில்லை.
இந்த நட்புணர்வும் வெற்றியும் என்றும் தொடர வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்தினேன்.
ஹசன்மட்லா புறப்பட்டுப் போனதும் ”செந்தில் சார் உங்களுக்குக் கிடைச்ச பார்ட்னர் மாதிரி மத்தவங்களுக்கும் கிடைச்சிட்டா, தொழில்ல எவரும் ஒண்ணும் அசைச்சுக்க முடியாது” என்றேன்.
”உண்மைதான் லேனா சார்! நான்கூட முதலில் பாகிஸ்தானியாக இருக்கிறாரே, நமக்கு இது சரிப்பட்டு வருமா; நாடுவிட்டு நாடு வந்து ஏதும் நடந்திட்டா என்ன பண்றதுன்னு யோசிப்பேன். ஆனால் ஹசன்மட்லா அருமையான மனிதர்னு புரிஞ்சுக்கிட்டேன்”
”இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து சீனாவில் வெற்றிகரமாகத் தொழில் செய்யுறது அட்டகாசமா இருக்கு” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, அந்தப் பகுதியில் இரவின் அமைதியைக் குலைக்கிற அளவிற்குப் பெரிதாகச் சிரித்தோம்.
மறுநாள், நான் விரும்பியபடி தொழிற்சாலை விஜயம். உலக நாடுகள் பலவற்றை மிஞ்சுமளவு சீனாவில் எப்படித் தொழில் உலகம் இவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆர்வப்பட்டதன் விளைவு இது.
இதற்கு உதவியாக இருந்தது ஷாங்காய் சங்கமத்துடன் எனக்குக் கிடைத்த சந்திப்பு. ஷாங்காய் சங்கம நிகழ்வில் நான் சந்தித்த முத்துசங்கர் டிரேட்டன் பர்னிச்சர் எனும் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
இவரிடம் என் விருப்பத்தைச் சொல்லப்போக ”வாங்க எங்க நிறுவனத்திற்கு! நல்லாப் பார்க்கலாம்; 1200 ஊழியர்கள் பணிபுரிகிற பெரிய நிறுவனம்” என்றார். மகிழ்ச்சி தந்த செய்தி இது.
தொழில் மயமான நாடான சீனாவிற்கு வந்தவிட்டு ஒரு தொழிற்சாலைக்குள் நுழையாமல் போவதா?
சீனத் தோல்பொருள்களைக் கொண்டே இந்நிறுவனத்தில் சோபாக்களைக் தயாரிக்கிறார்கள். நாங்கள் வந்திருப்பதை அறிந்து முத்துசங்கர் வரவேற்பறைக்கு வந்து என்னையும் செந்தில்குமாரையும் அழைத்துக் கொண்டார்.
”உரியவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டீர்களா?” இது என் கேள்வி.
”அதெல்லாம் முறைப்படி நடந்துவிட்டது. நீங்கள் காணவிரும்பும் எந்த ஒரு பகுதிக்கும் போகலாம்”
”ஒரு சோபா எப்படி உருவாகிறது என்பதில் ஆரம்பித்து அது முடித்து விற்பனைக்கு அனுப்பப்படும் நிலை வரைக்கும் பார்க்க விருப்பம்”
”சரி போகலாம்” என்றவர் ஓர் அழகிய ஓடையை நோக்கி அழைத்துப் போனார்.
நான் புருவங்களைச் சற்று உயர்த்தவே, ஓடையைத் தாண்டித்தான் என் தயாரிப்புப் பகுதி இருக்கிறது என்று விளக்கம் தந்தார். ”ஓரு சோபா தொழிற்சாலைக்கு ‘ஓடையா?’ படு சுவாரசியமாக இருக்கிறதே” என்றவன் ஓடையின்மீது இருந்த பாலத்தின் மையப்பகுதிக்கு வந்ததும் அங்கேயே நின்றுவிட்டேன். ஓடை அமைந்திருந்த இடம் அப்படி ஓர் அழகு. ஓடை நீர் தெளிவாக இல்லையே தவிர, சலசல என்று அது ஏற்படுத்திய சத்தத்தை இன்னும் சற்றுக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
”என்ன நின்றுவிட்டீர்கள்?”
”இங்கிருந்து நகர மனமே இல்லை”
”ஓ! நீங்கள் இயற்கை விரும்பியாக்கும்?”
”ஆமாம்”
நாங்கள் நடக்க ஆரம்பித்தபோது தம் நிறுவனம் பற்றிப் பல தகவல்களை முத்துசங்கர் கொட்டினார்.
”இந்த டிரேட்டன் நிறுவனத்தை ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகளே ஆகின்றன. இதற்குள் உலகப் புகழை ஈட்டியாயிற்று. சோபா உலகத்தை நன்கு அறிந்தவர்களுக்கு டிரேட்டனைத் தெரியாமலிருக்க முடியாது. இதன் உரிமையாளர் பெயர் சைமன் லி. டென்மார்க்கைச் சேர்ந்தவர். 1997இல் சாதாரண பர்னிச்சர் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். பிறகு 1999இல் டிரேட்டனைத் தொடங்கினார்”.
”டென்மார்க்காரருக்கு சீனாவில் ஏன் ஆர்வம்?”
”சைமன் லி பதினைந்து ஆண்டுகளாகச் சீனாவில்தான் வசிக்கிறார். சீனா, தொழில் தொடங்க ஒரு நல்ல நாடு என நம்பினார். அது சரியாகிவிட்டது. இன்று மூன்று இலட்சம் சதுர அடித் தொழிற்சாலையாக வளர்ந்துள்ளது”
”மூன்று இலட்சம்?”
”ஆமாம். 80,000 சோபாக்களை மாதம் தோறும் தயாரிக்கிறோம்”
”யப்பா! ஒரு நாளைக்கு 2700 சோபாக்களா?”
”சாதாரணமாக இன்னும் அதிகப்படுத்த இருக்கிறோம். மாதம் 2,40,000 சோபாக்கள் தயாரிப்பது எங்கள் பாஸ் சைமன் லியின் திட்டம்”
”தினமும் 8000 சோபாக்களா? யப்பா சாமி!”
”ஆமாம். இங்கெல்லாம் திட்டமிட்டால் முடிக்காமல் விடமாட்டோம். தாளில் எழுதுவதைச் செயலில் காட்டுவோம்”
”எங்கு விற்கிறீர்கள்?”
”ஷாங்காயிலும் அமெரிக்காவில் அட்லாண்டா நகரிலும் விற்பனை நிலையங்கள் உள்ளன. மற்றபடி கட்டடம் கட்டி எங்களிடம் கொடுத்துவிட்டால் கட்டட அமைப்பு, அதன் நிறம், தேவைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப நாங்களே சோபாக்களைத் தயாரித்துக் கட்டடத்தை நிரப்பிவிடுவோம்”
”பலே! நீங்கள் சொல்லச் சொல்ல சைமன் லியைப் பார்கக வேண்டும்போல இருக்கிறது. பார்க்க முடியுமா?”
”முன்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும். படுபிசி மனிதர். ஆனாலும் எளியவர். இன்று வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் சோபா வாங்க ஒரு குழு வந்துள்ளது. இன்று அவரைச் சந்திக்க முடியாது”
தொழிற்சாலைக்குள் நுழைந்தால் - அப்படி ஒரு பெரிய தொழிற்சாலை. தேடித் தேடிப் பார்த்தும் ஒருவர்கூடத் கதையடிக்காமல் வேலையில் படு மும்முரமாக இருந்தார்கள். வேலை என்றால் அப்படி மாக்குமாக்கு என்று செய்கிறார்கள். இப்படி வேலை செய்தால் உடம்பு களைத்துப் போகுமே. சில மணி நேரத்திலேயே!”
“சீனர்கள் களைக்கமாட்டார்கள். இயந்திரம்போல! அசராமல் வேக வேகமாய் வேலை செய்வார்கள்”.
ஏதோ இரயில் பிடிக்கிறவர்கள் துரித கதியில் இயங்குவார்களே, அப்படி இயங்கினார்கள். வியப்பாக இருந்தது. ”எனக்கு சைமன் லி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது சொல்லுங்களேன்” என்று கேட்க, ”அவரைப் பற்றிய முதல் தகவலே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்தியக் கலையான யோகா என்றால் அவருக்கு மிகப் பிடிக்கும்”
”வாவ்!”
சட்டென்று திரும்பிப் பார்த்த சங்கர் ”லேனா சார்! நீங்கள் அதிர்ஷ்டக்காரர். அதோ சைமன் லியே வருகிறார்”
என் மனத்தில் உருவான திடீர்க் கதாநாயகன் லியைத் திரும்பிப் பார்த்தேன்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்









































