Friday 21 March 2008

ஏன் இந்த இருட்டு நிலை?
மின்வெட்டு விவகாரம் பூதாகரமாகி வருவது பற்றி அக்கறைப்படாமல் இருக்க முடியாது. காரணம். இது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்ற விஷயம்.
ஆளுங்கட்சிக்கு விளம்பரங்களைத் தேடிக்கொள்கிற அளவிற்கோ, சாதனைகளைப் பறைசாற்றிக் கொள்கின்ற அளவிற்கோ சாதிப்பதில் ஆர்வமில்லை என்கிற குற்றச்சாட்டு வலுவாகி வருகிறது.
தமிழகம் ஒரு மின்வளம் மிகுந்த மாநிலம். இங்கே அணுமின்சாரம், (Automic) அனல் மின்சாரம் (Coal); காற்றாலை மின்சாரம் (Wind), நீர் மின்சாரம் (Hydro) ஆகிய நான்கிற்கும் வசதி உண்டு. தென்னக மாநிலங்களுக்கெல்லாம் மின்சாரத்தைக் கடனாக வழங்கும் மாநிலம் தமிழகம். ஆனால் தமிழகமே இன்று மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்ட நிலை.
மின்சார விடுமுறை தொழிற்சாலைகளின்மீது திணிக்கப்படும் பரிதாப நிலையும் தொடர்கிறது. இதனால் உற்பத்தி பாதிப்பும், மனித உழைப்பு நேரங்களும் பாதிக்கப்படுவது கண்கூடு.
மின்சாரத் திட்டங்களுக்கு அ.தி.மு.க. தடை போட்டதால்தான் இந்நிலை என்கிறார் மின்துறை அமைச்சர். என் ஆட்சியில் மின்வெட்டு என்கிற பேச்சிற்கே இடமில்லை என்ற அடித்துக் கூறுகிறார் செல்வி ஜெயலலிதா.
சுட்டுவிரலை ஆளுக்கு ஆள் காட்டிக் கொண்டு ஊடகப் போராட்டத்தை இவர்கள் நடத்திக் கொண்டிருக்க, பாதிப்பென்னவோ உண்மை நிலவரம் அறியாத மக்களுக்குத்தான்.
உயர்மின் அழுத்தத்தைப் பெற்று பயனடைய வேண்டிய தொழிற்சாலைகளை வாரம் ஒரு வேலைநாளின்போது சுற்றுமுறையில் விடுமுறை விடவேண்டிய நிலை. உலக நிறுவனங்கள் தமிழகத்தில்தான் நல்ல தொழிற்சூழல் உள்ளதாக நம்பி வந்து இறங்கும் தறுவாயில் இப்படி ஒரு பின்னடைவு.
மின்வாரியத்தின் அறிக்கைகளும் மின்துறை அமைச்சரின் பத்திரிகைப் பேட்டிகளும் முரண்படுவதை ஜெயலலிதா நன்கு அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பது மக்களை மேலும் ஓர் இருட்டு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. மின் உற்பத்தியைப் பராமரிக்கவோ பெருக்கவோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இந்த அரசால் எடுக்கப்படவில்லை என்கிற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டினை மேம்போக்கான குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. தம் ஆட்சியின்போது மின்வெட்டுப் பாதிப்பு அதிகம் இல்லாதபடி பார்த்துக் கொண்ட இவருக்கு இந்தக் குறையை அடிக்கோடிட்டுச் சொல்ல நிச்சயம் தகுதி இருக்கிறது.
தனியாரிடம் மின்வாரியத்தைத் தாரை வார்க்கும் எண்ணம்தான் இக்கோளாறுகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்க முடியும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற வேலையை இன்னும் எவ்வளவு நாள்தான் செய்வது.
தமிழக நீர்மின் திட்டங்கள் பலவும் சரிவரக் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. பழைய உற்பத்திச் சாதனங்களை வைத்துக் கொண்டிருப்பதால் மின் உற்பத்தியைப் பெருக்க முடியாத நிலை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
வெள்ளைக்காரன் காலத்து உபகரணங்களை மாற்றினால் நிச்சயம் நீர்மின் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்கிறார்கள் மின்வாரிய ஊழியர்கள். காற்றாலை மின்உற்பத்திக்குச் சரியான ஊக்கம் தரப்படவில்லை என்பது தனியார் பலரின் மனக்குறை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காற்றாலை மின்சக்தியைப் பன்மடங்கு பெருக்க முடியும் என்கிற சாதகமான சூழல் நிலவியும் பாராமுகம் ஏன்? மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்நதெடுப்பதிலும் இவ்விஷயத்தில் கூட்டணிக் கட்சியுடன் போராடிக் கொண்டிருப்பதிலும் செலவிடும் நேரத்தை மின்வெட்டு விஷயத்திலும் திசை திருப்பிப் பார்க்கலாம்.









































