Friday 18 April 2008

Lenavin Parvayil

lenavin.jpgகாம்ரேடுகள்; முரண்பாடுகள்!

கோவையில் நடந்த 19ஆவது தேசிய மார்க்சிஸ்ட் மாநாட்டின் வெற்றி பற்றி காம்ரேடுகளுக்கு மகிழ்வையும் பொது மனிதர்களுக்கு வியப்பையும் தந்திருக்கிறது என்றால் என்னைப் போன்றவர்களுக்குக் கவலை தந்திருக்கிறது.

மாநாட்டில் எவ்விதத்திலும் எளிமை இல்லை. எங்கும் ஆடம்பரம்தான்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த பெரிய தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வசதி மிகுந்த ஓட்டல்களில் தங்கியிருந்தார்கள்.

மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் தொழில் வளர்ச்சி என்ன அழகில் இருக்கிறது என்பது நாடறிந்த விஷயம்.

மேற்குவங்கத்தின் நந்திகிராம வண்டவாளமோ இன்னும் உலகப் பிரசித்தம்.

இத்தகையவர்களின் பெருமைகளைப் பேசக் கோவைதானா கிடைத்தது? கோவை தமிழகத்திற்குக் கிடைத்த தொழிற்கொடை நகரம். நூல் மற்றும் இயந்திர உற்பத்தியில் இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கி வருகிறது.

கோவை மக்களின் உழைப்பு அபாரமானது. பெண்களின் பங்களிப்பும் இங்குள்ள தொழிற் சாலைகளில் மிக உருப்படியானது.

வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் அப்பாவிகளை இழுத்துப்போட்டுப் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தி மார்தட்டிக் கொள்ளும் மார்க்சிஸ்டுகள் இந்த எண்ணிக்கைப் பலத்திற்காகக் குழந்தைகளையும் பள்ளிப் பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டது ஜீரணிக்க முடியாதது.

ஜீரணம் என்றதும் நினைவிற்கு வருவது காம்ரேடுகளின் உணவுச் செலவு. 25 இலட்ச ரூபாய் செலவாகியிருக்கும் என்று கணக்கிடுகிறது தினமலர். இவர்கள் எளிமையின் தோழர்களாம்.

காம்ரேடுகளின் ஒரு பெரும் பிரிவு மருதமலைக்குப் போய் சாமி கும்பிட்டிருக்கிறது. கடவுள் பக்தி என்பது அபின் மாதிரியான கெடுதல் விஷயம் என்றவர்கள் இவர்கள்தாமே?

கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குத் திருஷ்டி ஏற்பட்டுவிடாமல் இருக்க எலுமிச்சம் பழங்களையும், பச்சை மிளகாய்களையும் சேர்த்து கோவை மாநாட்டில் மாலைகளாக அணிவித்தார்களாம்.

பாலஸ்தீனத்தையும், ஈராக்கையும் பற்றி அக்கறைப்படும் இவர்களுக்கு ஒகேனக்கல் பற்றிய கருத்தை வெளியிடக்கூடப் பயம். கேட்டதற்கு ”நோ கமெண்ட்ஸ்” என்கிறார்கள். உள்ளூர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்ல முடியாத இவர்கள் உலக அளவில் கவலைப்படுவது நல்ல வேடிக்கைதான்.

நான்கு வருடங்களாக மத்தியஅரசைப் பூச்சாண்டிக் காட்டியே பயமுறுத்தி அணு ஒப்பந்தத்தை ஆகவிடாமல் செய்துவிட்டதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவுடன் கைகுலுக்கினால்கூடக் குற்றம் காணும் இவர்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டால் பொறுக்குமா? எழுதிய விஷயத்திற்கே மீண்டும் வருகிறேன். மார்க்சியம் சரியான பாதையில் சென்றிருந்தால் இன்று எவ்வளவோ வளர்ந்திருக்கும். ஆனால் மார்க்சியம் உலக அளவில் தோற்று வருகிற கொள்கையாகிவிட்டது. இந்தியாவிலேயேகூட மார்க்சீய அரசுகள் முன்னுதாரண அரசுகளாக இல்லை; இம்மாநிலங்களும் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில் கோவையின் உழைக்கும் வர்க்கம், கோவையில் நடந்த ஆட்டபாட்டங்களைப் பார்த்து அவற்றிற்கு இரையாகிவிடக்கூடாது என்பதே நம் அக்கறை.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

நாள்பட்ட நன்மைக்கு வழி!

அரசு இயந்திரம் எப்போது உருளும்?

நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

ஏன் இந்த இருட்டு நிலை?

Related Post

Leave a Reply