Friday 4 April 2008

Lenavin Parvayil

அரசு இயந்திரம் எப்போது உருளும்?lenavin.jpg

அடிமேல் அடி அடித்து அம்மியை நகர்த்தியிருக்கிறார்கள் தமிழக எதிர்கட்சியினரும் ஆளுங்கட்சிக் கூட்டணியினரும்.

வெள்ள நிவாரண நிதி விஷயத்தில் மத்திய அரசு விதித்துள்ள விதிகளை மீறிச் சற்று உயர்வான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்.

இரண்டு ஹெக்டேர் நிலத்திற்குமேல் உள்ளவர்களுக்கு பாதிப்பு அடைந்தாலும் உதவி
ஒன்றும் கிடையாது என்கிற தமிழக அரசின் கொள்கையும் சற்றுத் தளர்த்தப்பட்டிருப்பது ஆறுதல். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் உண்டு என்பதும் அரசுத் தரப்பில் நிகழ்ந்துள்ள நல்ல மனமாற்றமே! மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமல் காய்ந்தும் கெடுக்கும் என்று ஒரு பழமொழி உண்டு.

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மார்ச் மாத மழையளவை ஒப்பிடும்போது எட்டு மடங்கு அதிகம் என்கிறது வானிலை ஆராய்ச்சி நிலையம். அறுவடை செய்யும் தறுவாயில் வேர்க்கடலை, சூரியகாந்தி, மிளகாய், நெற்பயிர் என்று பலவிதமான பயிர்கள் ஒன்றிற்கும் உதவாதபடி ஆகிவிட்டன.

ஆடு மாடுகளின் இழப்பு, உப்பளங்களில் உற்பத்திப் பாதிப்பு என்ற பலவித பாதிப்புகளை மழை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

அமைச்சர்கள் பலரும் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுத் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது நல்ல ஆறுதல். இதன் காரணமாகச் சட்டமன்ற நடவடிக்கைகள் கூடப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பரவாயில்லை.

ஆனால் இது போதாது. பயணங்களும் பார்வையிடல்களும் அறிவிப்புகளும் போதா. தேவை நடவடிக்கைகளேயன்றி வேறு அல்ல.

கடந்த மழையின்போது ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய்களில் 56 கோடி செலவழிக்கப்படவில்லை. இத்தொகை அரசிடமே உள்ளது என்பதை முதல்வரே ஒப்புக் கொள்கிறார். வருத்தப்படவேண்டிய விஷயம் இது.

இந்த மழைக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். இதிலும் 25% பணம் அரசிடமே தங்கிவிடுமா?

அமைச்சர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு செயலில் இறங்கிய அளவிற்கு அதிகாரிகள் ஈடுபாடு காட்டவில்லை என்றும் ஒரு வதந்தி உலவுகிறது.

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்காவிடில் எப்படி?

அதிகாரிகள் இயங்காவிடில் அரசு இயந்திரம் எப்படி உருளும்?

விளம்பரங்களும் அறிக்கைகளும் பிரமாதப்படுத்தப்படும் அளவிற்குப் பாதிக்கப்பட்டவர்களுககு உதவிகள் உருப்படியாகவோ ஒழுங்காகவோ போய்ச் சேருவதாகத் தெரியவில்லை.

நம் விவசாயிகளுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் போலிருக்கிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

ஏன் இந்த இருட்டு நிலை?

Related Post

Leave a Reply