Friday 11 April 2008
‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை’ என்று அந்தக் காலத்துத் திரைப்படப் பாடல்வரியைப் பாட முடியாத குறையாய்ப் பலர் மனத்திற்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு வழியின்றி மைத்துனருக்குக் கொடுத்த வராக் கடன்; உறவினர் பிள்ளையைப் படிக்க வைக்க ஒப்புக் கொண்டுவிட்டு இதனால் எழுந்த சங்கடங்களைச் சமாளிக்க முடியாமல் திணறும் ஒரு குடும்பத் தலைவர்; வேலை வாங்கித் தருகிறேன் என்று நான்கு பேர் மத்தியில் பெருமைக்காகச் சொல்லிவிட்டு, அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ஒரு நண்பர் என்று இப்பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். எல்லா ஆம்களும் ஆம்களல்ல. சில நிர்பந்தங்களால் சொல்லப் பட்டவை; சில ஒப்புக்காகச் சொல்லப்பட்டவை; சில சூழ்நிலை கருதிச் சொல்லப்பட்டவை; சில தவறான கணிப்பீடுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டவை. இவை எல்லாவற்றையும் ஒரே இரகத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது.
போகப்போக இவை வெளுக்கும்போதுதான் புரிய வரும். இதற்குள் விழித்துக் கொண்டு நமக்குச் சொல்லப்பட்ட ‘ஆம்’ எந்த இரகத்தைச் சேர்ந்தது என்று இனம்பிரித்து அறிய வேண்டும்.
இப்படி அறிவதில் ஒரு நன்மை இருக்கிறது. நாம் நாட்டாற்றில் கைவிடப்படுவோம் என்பது நமக்கே தெரிந்துவிட்டால் நாம் ‘மாற்று’களைத் தேடி நடக்கலாம். நம் பயணமும் பாதி வழியில் தடைப்படாமல் நிற்கும். பிறரைப் பாடாய்ப்படுத்தி வாங்கிய ‘ஆம்’கள் நமக்கு நன்மையைச் செய்யா. இதற்குப் பரிகாரம் தேடுவது நல்லது. ‘ஆம்’களைக் கேட்டுப் பெறுவோர் அந்த ஆம்கள் வலிந்து பெற்றவையாக இல்லாதிருக்கக் கூடியவரை பார்த்துக் கொள்வது நல்லது.
‘ஆம்’களின் தொனிகளைக் கூர்ந்து கவனியுங்கள். அவற்றில் சங்கடம் தெரிந்தால் அந்தச் சங்கடம் மாறும்வரை காத்திருங்கள். ஆம்களை மனமுவந்து சொல்லவைக்கும் களங்களாக உருவாக்க என்ன செய்ய முடியுமோ அதிலாவது இறங்குங்கள். வலிந்து பெறும் ‘ஆம்’கள் இனி நமக்கு வேண்டாம் என்கிற முடிவிற்கும் இன்றே வாருங்கள்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?









































