Friday 4 April 2008

Lena Katturai

lena.jpgவறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

உடன்பயின்ற நண்பர்கள் பலரும் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பை (Alumuni) உருவாக்கினோம். அவ்வப்போது கூடுவோம். அரட்டை; விளையாட்டு, பொழுதுபோக்கு; விருந்து இத்யாதிகள்.

வயது கடந்துவிட்டபோதும் வாடா போடாதான். ஒருவரை ஒருவர் ஏகமாய்க் கேலி செய்துகொள்வோம். இதில் எவரும் காயப்பட்டுவிடமாட்டோம்.

ஆனால் இதற்குப் புதிய வடிவில் ஒரு கேடு வந்தது. ஓரிருவர் மெல்ல இச்சந்திப்பைத் தவிர்க்கத் துவங்கினார்கள். முதலில் காரணம் பிடிபடவில்லை.

பிறகு அலசி ஆராய்ந்ததில் சில வகைக் கேலிகளுள் இருவர் காயப்பட்டுப் போனார்கள் என்பதுதான்.

அந்த நேரம் சிரித்துவிட்டுப் பின்னர் அழுதிருக்கிறார்கள் இவர்கள். காரணம் இச்சந்திப்புகளின்போது இவர்களது வறுமை சுட்டிக்காட்டப்பட்டதுதான்.

எவ்வளவு நெருக்கம் இருப்பினும் கேலிகளுக்கு என்று சில வேலிகள் உண்டு. இவற்றைக் கடந்தால் பெரும் பிரச்னைதான். வேறுபாடுகளை உணராமல் ஒன்றாகப் பயின்றோம். ஆனால் சிலர் பொருளாதார வேறுபாடுகள் என்பவை கேலிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் என்பதைப் பயின்றார்களில்லை. வந்தது வினை.

நுணுக்கமான தவறுகளுள் குறிப்பிடத் தகுந்த தவறு பிறரது வறுமையைச் சுட்டிக்காட்டுவது. சட்டென்று நெஞ்சில் அம்பு பாய்ந்ததுபோல் அடங்கிப் போகிறார்கள் இவர்கள்.

வறுமை என்பது சிலருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சிலரோ விதித்துக்கொள்கிறார்கள். ஒரு சிறு தவறான முடிவு ஒருவரைக் காலப்போக்கில் நடுத்தெருவிற்குக் கொண்டு வந்துவிடுகிறது. அந்த முடிவை நினைத்து ஒவ்வொரு நாளும் அவரே வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, வசதிபடைத்தவர்களைப் பார்த்து நாம் மட்டும் இப்படிப் பின்தங்கிப் போனோமே என்று ஏங்கிக் கொண்டிருக்கும்போது அந்த உணர்வு மிகச் சரியாய்த் தேடிப் பிடிக்கப்பட்டு, அடையாளம் வைத்துத் தாக்கப்படும்போது அந்த வேதனை பன்மடங்காகிப் போகிறது.

அறிவாற்றலின் இயலாமைகள் கேலி செய்யப்படலாம். ஒரு பேச்சு; ஒரு நடவடிக்கை கேலி செய்யப்பட்டலாம். ஒருவரது பலவீனம் கூட விமர்சிக்கப்படலாம். ஆனால் நிச்சயமாகப் பொருளாதார இயலாமைகள் அல்ல! இது மிகவும் விஷமமான செயல்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

இருப்புகள் இருக்கட்டும்

Related Post

Leave a Reply