Friday 18 April 2008

Junior Kelvi Pathil
ஜூனியர் கேளவி-பதில்- லேனா தமிழ்வாணன்

ஏ.கருப்பையா, சேலம்

ப.ம.க.வின் நிழல் பட்ஜெட் பற்றி?

ஊதுற சங்கை ஊதுகிறார்கள். ஆனால் கேட்க ஆளில்லை, வாடகைக்குக் காக்கி உடை எடுத்துப் போடுகிறவர்கள் எல்லாம் ஐ.பி.எஸ்., என்றால் எப்படி? அதற்கொரு பொருத்தம் வேண்டாம்?


டி.எஸ்தர், பாளையங்கோட்டை.

பதில் தராததின் மூலம் எங்களில் பலரை நீங்கள் உதாசீனப்படுத்துகிறீர்களே?

அப்படியில்லை. எல்லோரும் களத்தில் இருக்கிறீர்கள். யாரும் களப்பலி ஆகவில்லை. மின்வெட்டு மாதிரிதான் இந்த வெட்டும்! உங்களுக்கும் ஒரு நாள் வெளிச்சம் வரும்.


எஸ்.மாணிக்கம், விருத்தாச்சலம்.

இனி ராமதாஸின் நிலைமை?

இடப் பெயர்ச்சிதான்! ஆண்டுதோறும் ஒரு குருப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுக்கு ஒரு சனிப்பெயர்ச்சி. அது போல் தேர்தல் தோறும் ஒரு இடப்பெயர்ச்சி. இதுதான் இவரது இப்போதைய நிலைமை.


ஆர்.பாலகுமாரசுவாமி, திருச்சி.

பாலியல் கல்வி தேவையா?

இராமநாதபுரத்துச் சிறுவர்கள் இப்போதே அதைப் படிக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘நான் செஞ்சுக்கிட்டேன்! நீங்க எப்போ?’ என்ற நவீன வாசக்டமி பிரசார ரதத்தின் முன்பு தான் வருங்கால இந்தியாவே இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.


ஆர்.சாதிக்அலி, பரமக்குடி.

பாகிஸ்தான் பார்லிமெண்ட்டின் புதிய சபாநாயகராக பெமிதா மிர்சா என்ற பெண் டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரே?

இந்த டாக்டராவது பாகிஸ்தானைக் குணப்படுத்தட்டும்!


எஸ்.மாரியப்பன், சிங்காநல்லூர்.

பள்ளிகளுக்கான தமிழக அரசின் ‘புத்தகம் பூங்கொத்து’ திட்டம் பற்றி?

மாணவர்களைத் தேடிப் புத்ததங்களே போகும் இத்திட்டம் ஒரு தலைசிறந்த திட்டம். ஒவ்வொரு நூலகத்திற்கும் 176 புத்தகங்கள்! இப்படியாக 37,463 பள்ளிகளின் நூலகங்களுக்குப் புத்தகங்கள். உண்மையில் கலைஞரின் மூளை இனி தமிழகம் முழுவதும் பரவப் போகிறது.


எஸ்.ரத்னவேலு, விருதுநகர்.

தொடர் மழையால் உப்பு விலை கூட அதிகரித்து விட்டதே?

வள்ளுவர் சொன்ன அந்தப் பெய்யெனப் பெய்யும் மழையால் உப்பு கூட கரிக்க ஆரம்பித்துவிட்டது. ரூபாய் நாற்பதுக்கு விற்ற மூட்டை ரூபாய் இருநூற்று ஐம்பதாமே? இனி உப்பிட்ட வரை உள்ளளவு என்ன, அதற்குப் பின்னாலும் நினைக்க ஆரம்பிப்பார்கள்.


வசந்தா பாஸ்கர், புதுக்கோட்டை.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பகங்களில் அதைப் பதிவு செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டதாமே?

இவர்களின் முட்டல், மோதல்களால் ஆங்காங்கே சிலருக்கு மூச்சுத் திணறல்களே வந்தள்ளதைச் செய்திகளாய்ப் பார்த்தபோது பதிவுக்கே இப்படி. வேலை கிடைக்க இன்னும் என்னென்ன முட்டல்களோ, மோதல்களோ என்று யோசிக்கலானேன். இன்று ஆசிரியர்கள்தாம் மூர்ச்சையாகிறார்கள். மாணவர்கள் பாடு ஜாலி.


டி.அமானுல்லா, பெங்களூர்.

இன்றைய உண்ணாவிரதங்களைப் பற்றி?

அவற்றை ‘வடக்கிருத்தல்’ என்று நினைத்தீர்களா? ஒரு டயட்டீஷினியானல் கூடத் தர முடியாத அளவிற்கு உணவில் சரியான ‘டிப்ஸ்’ கொடுத்து அன்றைக்குத்தான் அவர்கள் வயிராறச் சாப்பிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை அன்று தான் அவர்களுக்குச் சரியான சரிவிகித உணவு நாள்!


அருள்அழகன், கன்னியாகுமரி.

ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளைப் பார்த்தீர்களா?

பார்த்தேன். பார்த்தேன். மலைத்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாதந்தோறும் எங்காவது ஒரு பத்தாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கினால் போதும். மாதந்தோறும் அவர்கள் லட்சாதிபதிதான்!.


ஜி.எஸ்.ஏகாம்பரநாதன், கொடுங்கையூர்.

வாழ்க்கைக்குத் தேவையான அழகின் அளவீடு என்ன?

நம்ம வீட்டுக் கரண்டி அடுத்த வீட்டுக்குப் போகாமலிருந்தால் போதும். அதுவே அழகுதான்.


எம்.பார்த்திபன், கரூர்.

திரையுலக உண்ணாவிரதத்தை அர்த்தமற்ற போராட்டம் என பாரதிராஜா வருணித்தது ஏன்?

உண்ணாவிரதப் போராட்டம் அர்த்தமுள்ளதுதான். ஆனால் திரையுலகினர் பேசிய விதம்தான் அர்த்தமற்றதாகி விட்டது. ஏதோ மாநிலப் போர் தொடுக்க வேண்டும் என்பதுபோல் பேசி மொழி வெறியையும் இனவெறியையும் தூண்டி விட முயற்சி செய்து தோற்றுப் போயினர். பேசியவர்களிலேயே பக்குவமாக, அர்த்தமுள்ளதாக, நாகரிகமாகப் பேசியவர் கமல்தான். மற்றவர்கள் உணர்ச்சியின் கொப்பளிப்பு, இது நன்மை செய்யாது.


ஏ.பாபுராவ், ஹைதராபாத்.

அமிதாப் சிவசேனையைச் சமாளிப்பாரா?

அமிதாப்பின் நடிப்பை நான் வியந்ததைவிட, கடனாளி ஆக, அதிலிருந்து மீண்டதைவிட, இந்திய அளவில் பிக் பாஸாகத் திகழும் சாமர்த்தியத்தைவிட, இன்னமும் மார்க்கெட்டைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் திறமையை விட, ஐஸ்வர்யா என்கிற பெண்ணை மருமகளாக்கிக் கொள்ள முன் வந்த சாமர்த்தியத்தைவிட சிவசேனைக்கு எதிராக இவர் விடும் சிம்ம முழக்கத்தையே நான் அதிகம் வியக்கிறேன். சிவசேனை பணிந்ததாக வரலாறே இல்லை. ஆனால் அமிதாப்பிடம் அது பணிந்துதான் ஆகவேண்டி வரும். பார்த்துக் கொண்டே இருங்கள்!


டி.ராஜூ, கும்பகோணம்.

தனுஷ் இயக்குநராகிறாராம், உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?

யார் பையினுள் என்ன இருக்கும் என்று கணிக்க முடியாது. நடிப்புத் திறமையைவிட இயக்கும் திறமை இவரிடம் உள்ளடங்கிக் கிடக்கலாம் யார் கண்டார்கள்? தனுஷைத் திரையில் பார்த்துச் சலிப்புத் தட்டும் இந்நேரத்தில் திரைக்குப் பின்னால் பார்க்க மனம் விழைகிறது வரட்டும்; தரட்டும்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவிக்குப் பேச மைக் தராதது எந்த விதத்தில் நியாயம்?

சட்டமன்ற விதிகளின்படிதான் சபாநாயகர் மறுத்திருக்கிறார். நுழைந்து அமர்ந்தவுடன் சபாநாயகரின் முன் அனுமதியின்றி ஜெயலலிதா பேச முயன்றது சபை விதிகளின்படி தவறு. கேள்வி நேரம் முடிந்த பின்பே தின நபர்களின் பேச்சு. சபாநாயகர் மறுத்தது சரியே. ஒரு வேளை ஜெயலலிதா பழைய ஞாபகத்தில் தம் ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு விட்டாரோ? அதற்குக் கூட மாண்புமிகு அவைத் தலைவரின் அனுமதி தேவையாச்சே?


ஆ.நாச்சிமுத்து, தர்மபுரி.

கர்நாடகத் தேர்தல் முடிவிற்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஆறப்போடுவதற்கும் என்ன சம்பந்தம்?

வென்று வெளிவருகிற எந்தக் கர்நாடகக் கட்சியும் ஒகேனக்கல் விஷயத்தில் பெருந்தன்மை தாங்கும் என எதிர்பாக்க முடியாது. ஆனால் மொழிக் கலவரத்தை, மாநிலக் கலவரத்தை அடக்க வேண்டுமென்றால் ஆறப்போட்டு ஊறப்போட்டு பிறகுதான் அணுக வேண்டும். கலைஞர் எடுத்த முடிவு சரியே!


ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.

இயக்குநர் சூர்யா திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லையாமே?

இவரது தனிப்பட்ட முடிவை எவரும் விசாரிக்க முடியாது. இது அவரவர் விருப்பம். ஆனால் திருமணம் என்பது சாதனைக்குத் தடையான விஷயம் என இவர் கருத்துக் தெரிவித்திருப்பதை ஏற்க இயலாது. இல்லத்தார் சாதித்த அளவு துறவறத்தார் சாதிக்கவே இல்லை.


கே.முருகானந்தம், வேலூர்.

ஜிம்பாப்வே பயணத்தை இந்தியா இரத்து செய்தது ஏன்?

துட்டு சார் துட்டு! ஜிம்பாப்வே தரும் காசு சொற்பம் சார். இந்திய அணிக்கு அள்ளிக் கொட்டுது சார் பணம். ஆனால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத கிரிக்கெட் வாரியம் பெரிய இழுக்கைத் தேடிக் கொண்டுவிட்டது.


க.பத்மனாபன், திருவரங்கம்.

புதுக் கதாநாயகர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்?

இனிமேல் வரப்போகும் நாயகர்களைக் கேட்கிறீர்கள் என அனுமானிக்கிறேன். இயக்குநர் வாசுவின் மகன் ஷக்தி என்னைக் கவர்ந்தவர்களுள் ஒருவர். புயலாகப் புறப்படுவார் என் எதிர்பார்த்தேன். தென்றலாக இருக்கிறார். புத்தம் புதுசு என்று தொலைக்காட்சியில் வரப்போகும் படங்களின் முன்னோட்டங்களைப் பார்க்க நேரிடும்போது பல புதுக் கதாநாயகர்களைக் காண நேர்ந்து வெறுத்துப் போனேன் வெறுத்து. என்னதான் பணம் கொட்டிக் கிடந்தாலும் இப்படியா தீக்குழிக்குள் குதிக்க முன்வருவார்கள்? இந்த நாயகர்களை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களைத்தான் குறிப்பிடுகிறேன்!


எஸ்.மணிமொழி, மதுரை.

ஒகேனக்கல் பிரச்னையாக ஆளுக்கு ஆள் வேலை நிறுத்தம், கதவடைப்பு என்று இறங்குபவர்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

அவசியமில்லை. விஷயத்தைக் கிடப்பில் போட்ட உள்நோக்கத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். இப்பழமொழி இவர்களுக்கு அப்படியே பொருந்தும். எள், எண்ணெய்க்குக் காய்கிறது, எலிப் புழுக்கை என்னத்திற்குக் காய்கிறது?

11 April 2008 ஜூனியர் கேளவி-பதில்

4 April 2008 ஜூனியர் கேளவி-பதில்

28 March 2008 ஜூனியர் கேளவி-பதில்

21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்



Related Post

Leave a Reply