Friday 11 April 2008

Junior Kelvi Pathil
ஜூனியர் கேளவி-பதில்- லேனா தமிழ்வாணன்

ஏ.கண்ணன், சூளை.

சென்னையில் மேம்பாலங்கள் விரைந்து திறக்கப்படுகின்றனவே?

காலத்தைவிடக் கலைஞரும், ஸ்டாலினும் வேகமாகப் பறக்கிறார்கள். தாங்கள் பறப்பதைப் போல் மக்களையும் பறக்க வைக்க நினைக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களிடத்தில் பறக்காமல் இருப்பதை நாம் மறக்காமல் இருக்க வேண்டும். சென்னை மக்கள் இந்த இருவருக்கும் நன்றி செலுத்த வேண்டும்.


மு.சையது, சேலம்.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடக அரசின் போக்கைத் தடுக்க வேண்டும் எனத் தமிழகச் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதே?

எல்லாம் கத்தி போய் வாலு வந்தது டும் டும் டும் என்ற கதை! காவிரி போய் இப்போது ஒகேனக்கல் வந்துள்ளது தண்ணீருக்கு இன்னும் எவ்வளவு காலம் கத்தணுமோ? தொண்டை உள்ள வரைக் கத்துவோம். இதுவே இங்குள்ள தமிழர்களின் தொண்டு.


எல்.பத்ரிநாதன், ஹைதராபாத்.

வினோபாவேவைப் போன்ற தேசியவாதிகள் தற்போது இந்தியாவில் யார் உள்ளார்?

அவரோ பூமிதானம் செய்தவர். இன்றுள்ளவர்களோ ஏரி, குளங்களையும் தனது பூமியாக்கிக் கொள்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களிடத்தில் தேசியவாதம் எப்படி வரும்? பொருத்தமில்லாத இந்தக் கேள்விக்கு ‘மாங்கல்ய’ பலமில்லை.


பி.சிவராஜ், புதுக்கோட்டை.

மூன்றாவது அணி?

இப்போதுதான் ரீ-மிக்ஸ் பண்ணுகிறார்கள். கலவை ரெடியானதும் சொல்கிறேன். அரசியலும் இப்போது ரீ-மிக்ஸ்தான்! சினிமா மாதிரி!


மு.ரகுமான், மேட்டுப்பாளையம்.

இன்று வெற்றிகரமான எழுத்தாளர் என்று எவரைக் குறிப்பிடலாம்?

அத்வானியை. இவரது 1000 பக்க நூல் வெளிவந்த அன்றே விற்றுத் தீர்ந்துவிட்டது. நன்கு விற்கும் என்று ரூபா பதிப்பகம் எதிர்பார்த்ததாம். ஆனால் இவ்வளவு வேகமாக விற்று ரூபாயைக் குவிக்கும் என ரூபாவே எதிர்பார்க்கவில்லையாம். புகழ்மிக்க எழுத்தாளர்கள் எழுதினால் கூட விற்கச் சில வருடங்கள் ஆகின்றன. அத்வானியோ சாதிக்கிறார். ஓர் இரகசியம் சொல்லவா? அரசியல்வாதிகள் பெரும்பாலும் எழுதுவதில்லை. விவரிக்கின்றனர். அவ்வளவே. யாரோ இவர்களுக்காக எழுதிக் குவிக்கிறார்கள்.


பெ.ராமசாமி, கரூர்.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவேறுமா?

நாம் தண்ணீர் குடிக்கத்தான் போகிறோம். கர்நாடகத்திற்குத் தண்ணீர் காட்டத்தான் போகிறோம்.


கே.ஆர்.தர்மாம்பாள், மதுரை.

செல்போன் கட்டணங்கள் மேலும் குறையுமாமே?

தனியார் சேவை நிறுவனங்கள் ‘டிராய்’ அமைப்பிற்குச் செலுத்தவேண்டிய ஆண்டுக் கட்டணம் ரூபாய் 600 கோடியை ‘டிராய்’ தள்ளுபடி செய்துவிட்டது. இந்தத் தள்ளுபடியால்தான் நமக்கு இந்தத் தள்ளு! இதனால் பல இளசுகளின் இரண்டு கைகளுமே இனி என்கேஜ்டாக இருக்கும்.


டி.அற்புதராஜ், கோயமுத்தூர்.

வெறிநாய்க்கடி சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் குடும்ப அட்டையைக் கேட்கிறார்களாமே?

எது எதற்குதான் குடும்ப அட்டை என்ற கணக்கே இல்லை? தமிழகத்தைச் சேராதவர்கள் மற்றும் வெளியூர்க்காரர்களை இந்த வெறி நாய்கள் கடித்தால், வந்த இடத்தில் குடும்ப அட்டைக்கு அவர்கள் எங்கே போவார்கள்? மருத்துவத் துறைக்கு இது விஷயத்தில் சிகிச்சை தேவை!


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

சென்னைப் போட்டியில் சேவாக் ஒரே நாளில் 300 ரன்கள் எடுத்து விளாசிவிட்டாரே?

சேப்பாக்கத்தில் அன்று கிரிக்கெட் தீபாவளிதான் போங்கள்! இளம்பெண்கள் என்னமாயக் குதிக்கிறார்கள். என்னமாய் விசில் அடிக்கிறார்கள். வாயில் விரல் வைத்து? நான் கூட அன்று முதல் முயற்சி செய்கிறேன். ரன் எடுக்க அல்ல; விசிலடிக்க.


ஆர்.வைதேகி, முசிறி.

காதல் திருமணம் நல்லதா, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நல்லதா?

இரண்டு சாராருமே திருமணத்திற்குப்பின் இதில் மாற்றுக் கருத்துக்களையே கொண்டிருக்கிறார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் இந்த விஷயத்தில் மணக்கிறது.


ஏ.சமிராபானு, திருச்சி-2.

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது காவல்நிலையங்களில் புகார் கொடுக்கலாமா?

கொடுக்கலாம். ஆனால் உங்கள் புகார் புகைஞ்சு போகும். புகை பிடித்தவர் ஒரு காவல் எல்லையில் இருப்பார். புகை பரவியது இன்னொரு காவல் எல்லையாக இருக்கும். காவல் துறையோ இந்த எல்லைப் பிரச்னையால் உங்கள் புகாரைப் பதிய யோசிக்கும். கடைசியில் உங்களுக்கு எரிச்சல்தான் மிச்சம்.


கே.சந்திரன், மும்பை.

உத்தரப்பிதேசத்தைச் சேர்ந்த ரிங்குசிங் என்ற 19 வயதுக்காரர், பேஸ்பால் விளையாட்டில் வேகமாகப் பந்து எறிந்ததற்காக அமெரிக்காவிடமிருந்து ரூபாய் 40 லட்சம் பரிசு வாங்கினாராமே?

விஷயம் தெரிந்தால் தமிழகக் கட்சிகள் இவரைத் தத்து எடுக்கும். வேகமாகப் பந்து எறிவதற்கு எப்போதுமே இங்கு ஆட்கள் தேவை! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்தப் பரிசை வாங்கியபோது பணத்தை வங்கியில் போட இவருக்கு வங்கிக் கணக்கே இல்லையாம். இந்த பேஸ்கூட இல்லாமல்தான் இவர் பேஸ்பால் ஆடியிருக்கிறார்.


ஆர்.குமார், வந்தவாசி.

இந்த ஆண்டு ப்ளஸ் டு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் ஏதாவது சிறப்பு அம்சம் கண்டீர்களா?

காணாமல் இருப்பேனா? இரண்டு தேர்வுகளிலுமே இந்த ஆண்டு படுத்துக் கொண்டே ஜெயிப்பவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். மாணவர்கள் (படுக்கையில்) படுத்திருக்க அவர்களுக்காக ஆசிரியர்கள் எழுதுவது அதிகமாயிருந்தது.


ஏ.மணிவண்ணன், தேனி.

1989 முதல் 1994 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையால் பணப்பயன் ஏதும் கிடைக்கவில்லையாமே?

அடடே, இவர்கள் சுண்டல் கிடைக்காத பக்தர்களாகிவிட்டார்களா? இவர்களுக்காக யாராவது சிறப்பு வழிபாடு செய்து, அதில் சுண்டல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.


ஆர்.முருகானந்தம், வேலூர்.

கடனில்லா வாழ்க்கை பற்றி மகிழ்பவர்களுக்கு உங்கள் பதில் ?

கடன் என்பது எல்லையோடு இருப்பின் அதுவே வளர்ச்சிக்கு வித்து. கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதெல்லாம் இலக்கிய நயமே தவிர வாழ்க்கைக்குப் பொருந்தாது. ஏமாற்றும் நோக்கில் கடன் பெறுவது ; சக்திக்கு அப்பாற்பட்ட கடன்கள்; ஆடம்பரத்திற்காக வாங்கும் கடன்கள்; திட்டமிடா வரவு செலவுகள் ஆகியவை ஒருவரைப் படுகுழியில் தள்ளவல்லவை. ஏற்கிறேன். ஆனால் கடன் இல்லாமல் உயர்வு இல்லை. கடனில்லா வாழ்க்கை என இந்தியர் எவரும் மகிழ முடியாது. இந்தியா உலகநாடுகளிடம் வாங்கியுள்ள கடன் 8 லட்சம் கோடி. இதை இந்திய ஜனத் தொகையால் வகுங்கள். உங்களுக்கும் எனக்கும் உள்ள கடன் தொகையோடு இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.


ஆர்.விஜய், முகப்பேர்

கன்னடர்கள்; கன்னட அமைப்புகள் தமிழகத்தில் தாக்கப்படுவது பற்றி?

நிலைமைகளை மோசமாக்கும். கன்னடர்களையோ, கன்னட நிறுவனங்களையோ, கர்நாடக வானகங்களையோ தாக்குவது இம்முறைதான் அதிகரித்துள்ளது. தமிழர்கள் மற்ற மாநிலத்தினர்மீது வன்முறை காட்டாதவர்கள் என்பது இதுவரை உள்ள நற்பெயர். இதைக் கெடுத்துக் கொள்வது தமிழகத்திற்குப் பெரிய அவமானம் என்பதோடு ஒன்றிற்குப் பத்தாக கர்நாடகத் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படவே வழிவகுக்கும். வேண்டாம் இந்த விபரீதம்.


கோ.வளவன், சிதம்பரம்.

புதிய தலைமைக் காவல்துறை அதிகாரி ஜெயின் தமிழகத்தை அமைதி மாநிலமாக்குவாரா?

ஜெயினர்கள் சாதுவானவர்கள். ஆனால் தமிழகத்திற்கு இன்று தேவைப்படுவது இரும்புக் கரம். காவல்துறை என்பது தண்டிக்க மட்டும் அல்ல, பொது மக்களுக்கு உதவவும் கூட. காவல் துறையில் உள்ள 99% பேர் இதை உணராமல் நடந்து கொள்கிறார்கள். ஜெயின் இதை இரண்டையும் நடைமுறைப்படுத்துவாரேயானால் உச்சாணிப் புகழுக்கு உயர்த்தப்படுவார்.


வி.பரஞ்சோதி, மதுரை.

திருட்டுபுத்தி இளவயதோடு ஒழிந்துவிடுமா?

திருடர்கள், கொள்ளையர்கள் எவர் பிடிபட்டாலும் நான் உடனே வயதைக் கவனிப்பேன். 20கள் 30களுக்குமேல் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் திருட்டுபுத்தி வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. மும்பையில் எண்ணெய்க் குழாய்களிலிருந்து எண்ணெய் திருடும் ஒரு கூட்டத்தைப் பிடித்தார்கள். இவர்களின் தலைவி பாபிக்கு வயது 60. பாட்டி பாபிக்குத் திருட்டுபுத்தி பிடிபடாதவரை தொடர்ந்திருக்கும் என்றே படுகிறது.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

சோயப் அக்தரைத் தண்டிக்கும் நோக்கில் பாக்., கிரிக்கெட் போர்டு நடந்து கொள்வதாகக் கூறப்படுவது உண்மையா?

ஐந்து வருடத் தடை, மன்னிப்புக் கேட்டபின்பும் தண்டிக்கும் போக்கு; பாகிஸ்தானில் எந்தவிதமான போட்டிகளிலும் ஆடக்கூடாது என்கிற காட்டமெல்லாம் தனிப்பட்ட காழ்ப்பின் அடிப்படையில் எழுந்தவையே என்று தோன்றுகிறது. புதிய பிரதமரின் ஆதரவு இவருக்கு உண்டு என்பதால் தப்பிப் பிழைக்க வாய்ப்பு உள்ளது.

4 April 2008 ஜூனியர் கேளவி-பதில்

28 March 2008 ஜூனியர் கேளவி-பதில்

21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்



Related Post

One Response to “Junior Kelvi Pathil”

  1. C.Satheesh Kumar

    Dear Sir,
    :-))

    How do u do?

    Have translated ‘ BONCO’ - the autobigraphy - the further Adventures of ‘ Papillon ‘ in Tamil? U know that autobiography of ‘ PAPILLON ‘ came in Kumadam in early 80’s.

    If not, whether it will be translated by Mr.RKR. or you or others soon?

    Bye! Bye!

    Have nice days along.

    Thank U.

    With regards,
    C.Satheesh Kumar

Leave a Reply