Friday 28 March 2008

Junior Kelvi Pathil
ஜூனியர் கேளவி-பதில்- லேனா தமிழ்வாணன்

எம்.அன்பு, காஞ்சிபுரம்.

மதவெறியர்களையும், தீவிரவாதிகளையும் அடக்க என்ன வழி?

அடுப்பு நெருப்பாய் இருந்தபோதே அவர்களை அணைத்து இருக்க வேண்டும். இப்போது எரிமலை குழம்பாக்கிவிட்டு, அதைக் கரண்டியால் மொண்டு காலி செய்ய வேண்டுமென்றால் அது சாத்தியப்படுமா? அப்படிச் செய்தால் கரண்டியும் இருக்காது. கரண்டியைப் பிடித்த அந்தக் கைக்கும் ஆபத்து.


ஆர்.சீதாபதி, சென்னை.

சீட்டாட்டத்திலும் கலைஞர் கெட்டிக்காரராமே?

1950ஆம் ஆண்டு ரிசல்டை 2008இல் சொல்கிறீர்? 1950லேயே சீட்டாட்டத்தில் வெற்றி பெற்று கலைவாணரிடம கார் வாங்கியவர் கலைஞர். இந்த விவரம் பல கழகக்காரர்களுக்கே தெரியாது.


எஸ்.ஸ்ரீநிவாஸன், சென்னை.

டி.ராஜேந்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

அந்த அடுக்கு மொழி ஸ்பெஷலிஸ்டுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. அந்தக் காரிலேயே சென்னையைச் சுற்றிச் சுற்றி வந்து தனது வீட்டுப் பணத்தைச் சேமித்து வருகிறார். சேமிப்புத்துறையில் இருந்துகொண்டு இவரே சேமிக்காவிட்டால் எப்படி?


ஆர்.ராமன், விழுப்புரம்.

மாநிலங்களவைத் தேர்தலில் ம.தி.மு.க. ஏன் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது?

வீடு இருந்தால்தானே ஓடு மாற்ற முடியும்? வீட்டுக்கே அல்லவா வந்திருக்கிறது ஆபத்து? என்பதைக் கடைசி நேரத்தில் புரிந்துகொண்டார் வை.கோ. அந்தக் கடைசி புரிதல்தான் இந்தக் கைவிடல்!


என்.சுப்பு, செங்கல்பட்டு.

நாங்கள் தரும் இலவசத் தொலைக்காட்சிகள் மூலம் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறாரே ஸ்டாலின்?

அப்படியானால் காசு கொடுத்து வாங்கியவர்களை என்ன இரகத்தில் சேர்ப்பது?


எஸ்.பி.ராஜா, மூலக்கடை.

நம்மைப் போன்றவர்களுக்கு அரசியல்?

நிச்சயமாக அத்தை மகள் போல பேசலாம், பழகலாம், சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால் தொடக்கூடாது.


ஜே.கிள்ளிவளவன், குரோம்பேட்டை.

காக்கைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

துப்புரவுப் பணிகளுக்குக் காக்கைகள் தேவைதான்! ஆனாலும் அவை கழுகுகளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஆர்.பார்த்திபன், சென்னை-33.

தே.மு.தி.க. விஜயகாந்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? அவரிடம் கட்சிக் கணக்கு கேட்கலாமா?

இவர் கட்சியா நீங்கள்? ஒருவர் கட்சிக் கணக்கு கேட்டாலே, அவர் அக்கட்சியிலிருந்து வெளியேற மூட்டை கட்டிக்கொண்டுவிட்டார் என்று அர்த்தம். பெரியாரும் அப்படித்தான், சம்பத்தும் அப்படித்தான். எம்.ஜி.ஆரும் அப்படித்தான். நீங்களும் அப்படித்தானா?


எல். பவானி, சென்னை-60.

உங்கள் பதில்களுக்கு சென்சார் தடை விதித்தால்?

‘பதில் தரமுடியாத கேள்விகள்’ என்று தலைப்பிட்டு அவற்றை அச்சேற்றி விடுவேன். எமர்ஜென்சி காலத்தில் கலைஞர் செய்த சில சூசகங்கள் மாதிரி.


டி.சந்திரன், வாலாஜாபாத்.

‘ரெய்டு’ என்றால் என்ன?

வேண்டாத ஒருவரின் ஜாதகத்தை ஆதியோடந்தமாகக் கணித்துப் பார்ப்பது என்று அர்த்தம்.


கே.மனோகரன், திருப்பூர்.

இன்று காங்கிரஸ் - தி.மு.க. உறவு?

காங்கிரசுடன் தி.மு.க.விற்கு ஃப்ரெண்ட்ஷிப் மட்டும்தான். ரிலேஷன்ஷிப் கிடையாது.


ஜி.லோகநாதன், மணலி.

மன்மோகன்சிங்கின் அரசு எப்படியிருக்கிறது?

வெறும் சப்தமாகத்தான் இருக்கிறது. சகாப்தமாக இல்லை.


ஆர்.ராஜேந்திரன், தருமபுரி.

இன்றைய ‘மாடர்ன்’ தம்பதிகள் எப்படிப்பட்டவர்கள்?

பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு அனாதை இல்லங்களுக்கு அன்னதானம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் வழித்தோன்றல்களும் இதைச் செய்யும்போதுதான் இவர்களின் முதுமை விழிக்க ஆரம்பிக்கும்.


எஸ்.சபேசன், சென்னை.

இன்று நாடாளத் தேவையானது?

தேர்தலுக்கு முன் மைக்குகள். தேர்தலுக்குப்பின் மைக்டைசன்கள்.


எம்.பொன்னையா, திருவள்ளூர்.

ஒரு நடிகையின் கணவனுக்கு என்ன மரியாதை இருக்கும்?

எல்லாம் ஒரு சிங்கம் மார்க் பட்டாசுக்கு இருக்கிற மரியாதை! கடைசியாகப் பட்டாசு சாம்பலானாலும் அதன் லேபிள் என்னவோ சிங்கம்தானே?


ஏ.வல்லபன், கரூர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணித் தேர்வில் என்ன குளறுபடி?

தென்னாப்பிரிக்காவை இப்போது ஆள்வது கறுப்பர் இனம். இந்த இனம் தென்னாப்பிரிக்க அணியில் இத்தனை சதவிகிதத்திற்குக் கறுப்பர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என்பதில் குறிப்பாக இருக்கிறது. இதனால் நெல் என்ற வெள்ளையர் நீக்கப்பட்டு ஒரு கறுப்பர் உள்ளே கொண்டு வரப்பட்டார். என் நண்பரை எப்படி நீக்கப் போயிற்று என ஒரு வெள்ளையர் குரல் கொடுத்ததுடன் தாமும் வெளியேறினார். போய்க்கோ என்று சொல்லிவிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.தள்ளியிருந்து பார்த்தால் குளறுபடி. உன்னிப்பாகத் கவனித்தால் படுதெளிவு.


ஆர்.வசந்தா, சேலம்.

ரகுவரன் மரணம் உங்களைப் பாதித்ததா?

சில படிப்பினைகளை நினைவூட்டியது. தம் உடல்நலத்தின் மீது இவர் அக்கறை காட்டாதிருந்தது மனத்திற்கு வருத்தம் தந்தது. பிரிந்து வாழ்ந்தபோதும் முன்னாள் கணவரின் மரணத்தை அறிய நேர்ந்து (ரோகினி) உடன் வந்து கலந்து கொண்டு கதறியது நெகிழ்ச்சியான பாடம்!


எஸ்.பழனியப்பன், திருச்சி.

பங்கு மார்க்கெட் ஏன் சரிகிறது?

பங்குகளை வாங்காதபோதும் எனக்குத் தலை சுற்றுகிறது. பங்குச்சந்தை குதிரைப் பந்தய உலகைவிட மோசமான உலகமாக இருக்கிறது!


பி.எஸ்.இராமச்சந்திரன், கொடைக்கானல்.

பாராளுமன்றத் தேர்தல் நிச்சயம் 2009இல்தான் என்று சோனியா அடித்துக் கூறுகிறாராமே?

இடது சாரிகளின் அரசியல் மிரட்டல்களைப் பார்க்கும் போது, நாங்கள் இவற்றிற்குப் பணிந்து விடுவோம் என்று சொல்லாமல் சொல்வதுதான் 2009இல்தான் தேர்தல் என்பது. ஆட்சிக்காக நாட்டு நலனை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் துணிவது வேதனைதான்.

21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
Related Post

Leave a Reply