Friday 21 March 2008

Junior Kelvi Pathil
ஜூனியர் கேளவி-பதில்- லேனா தமிழ்வாணன்

ஏ.அழகு, ராயப்பேட்டை.

‘தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக இருக்கிறது. மத்தியில் சிறப்பான பட்ஜெட்டைத் தந்த சிதம்பரம் தமிழகத்துக்கும் இப்படிப்பட்ட பட்ஜெட்டைத் தரவேண்டும். அதற்கான காலம் வரும்’ என்கிறாரே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

காங்கிரசாருக்கு அசல் மலைத்தேன் எங்கிருந்து கிடைக்கிறது? ஆசைப்படும்போதெல்லாம் அதையெடுத்து நாக்கில் தடவிக் கொள்கிறார்களே?


த.பாபு, அயனாவரம்.

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

பரவாயில்லை. ஆனால் சில சம்பவங்கள் வருத்தத்தை அளிக்கின்றன. தாம்பரத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் எய்ட்ஸ் பாதித்த பெண்களுக்கு ஆதரவாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்கள் பகுதியில் இவர்களைத் தங்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்து, இந்தத் தொண்டு நிறுவனத்தைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எப்படிப்பட்ட அறியாமை! ஏன் இந்தப் பழமைவாதம்? ஏன் இந்த மனிதாபிமானமற்ற செயல்!


டி.மோகன், திருவேற்காடு.

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பெண் ஊழியர் ஒருவர் மதுரை மாநகராட்சியில் கைதாகியிருக்கிறாரே?

என்ன சொல்ல வருகிறீர்கள்? பெண்கள் இலஞ்சம் வாங்குவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கு இது எப்போதோ பார்த்துப் பழகிவிட்டது!


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

பயஸ் தலைமையில் ஆடமாட்டோம் என்று டென்னிஸ் வீரர்கள் மறுப்பது ஏன்?

கங்குலி சந்தித்த அதே பிரச்னைதான். சிடுசிடுப்பும், சலிப்புக் குணமும், கோப அணுகுமுறைகளும் கொண்டவர்கள் தலைமைப் பதவிகளுக்கு இலாயக்கற்றவர்கள்! அன்பும் அரவணைப்பும் தட்டிக் கொடுப்பதுமாய் நடந்து கொள்பவர்களே நல்ல தலைவர்கள். இது அரசியலுக்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கும் மட்டுமல்ல, நிறுவனத்திற்கு மட்டுமல்ல, விளையாட்டிற்கும் பொருந்தும்.


பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

ஒரு பக்கம் முழுமையான மின் தட்டுப்பாடு, ஒரு பக்கம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் தொடர்ந்து வழங்கல், இது என்ன கூத்து?

தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்த இரண்டுமே அவர்களுக்குச் சாதனை! ஏழை மக்களைப் பொறுத்தவரை இந்த இரண்டுமே சோதனை! பற்களைப் பிடுங்கிவிட்டு கரும்பைத் தருகிறார்கள்.


மு.பாஸ்கரன், கோவை-2.

சோனியா காந்தி தொடர்ந்து பத்தாண்டுகள் காங்கிரஸ் தலைவியாக இருந்ததை அக்கட்சியினர் பெருமையாகக் கொண்டாடுகிறார்களே?

நடை வண்டி பழகி, பிறகு நடந்து பழகி, இப்போது ஓடவும் ஆரம்பித்திருக்கிறார். அதனால் அவாகள் கொண்டாடுவதில் தவறில்லை.


தேவராஜ், ராணிப்பேட்டை.

நீங்கள் வியக்கும் பெண்மணி?

பெண்மணியைக் குறிப்பிட்டால் வீட்டில் சிக்கல் எழும். எனவே ஒரு மாணவியைக் குறிப்பிட விரும்புகிறேன். கால் உடைந்த போதும் ஆம்புலன்சோடு சென்று தேர்வு எழுதிய ஷாலினி ஓர் உண்மையான நாயகி. தேர்வு கண்டு அஞ்சும் பெண்களுக்கு நல்ல சவுக்கடி.


வெற்றிகொண்டான், திருச்சி-2.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில் கருணாநிதி செய்தது சரியா?

என்ன சார்! யானைக்குக் கூட அடி சறுக்காதா என்ன?


சொ.வீரப்பன், மதுரை.

பெரிய நிறுவனங்கள் சிறுவியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என்கிற தடை கொண்டுவரப்பட வேண்டும் எனும் மருத்துவர் ராமதாசின் வாதம் எடுபடுமா?

ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் உரிமைகளைத் தட்டிப்பறிக்க முடியாது. சிறந்த சேவையும், குறைந்த விலையும், தரமிகு பொருளும் தருபவர் எவரும் நிற்பர். மற்றவர்களை மக்கள் அழிப்பர். அரசு இதில் தலையிட அதற்கு உரிமையில்லை. மருத்துவர் ராமதாசு சமயங்களில் நடைமுறைக்குச் சரிப்பட்டு வராத பல விஷயங்களைச் சொல்லத்தான் செய்வார்!


கே.ராமசாமி, பெங்களூர்.

இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 1,300 வழக்குகள் உள்ளதாமே?

இதுபோன நிதியாண்டு வரை. இந்த நிதியாண்டில் இன்னும் எத்தனை பேரோ? இனிமேல்தான் சட்ட அமைச்சகம் இது குறித்து ‘ரிட்டன்’ பைல் பண்ணனும். உங்க எம்.எல்.ஏ. உள்ளேயோ வெளியேயா?


ஏ.பலராமன், அயன்புரம்.

இந்திய ஆக்கி அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டது ஏன்?

அரசியலில் விளையாட்டும் விளையாட்டில் அரசியலும் இருப்பது நல்லதல்ல. இந்திய ஆக்கி சீர்செய்யப்பட வேண்டும். 2008 போனால் என்ன, 2012 இல் பார்த்துக் கொள்வோம்!


ஆர்.ஸ்டீபன், வேலூர்.

தி.மு.க.வின் இரண்டு ராஜ்யசபை உறுப்பினர்களுமே புதுமுகங்களாக இருப்பது ஏன்?

எல்லாம் காரணமாகத்தான். ஒருவர் முஸ்லீம், ஒருவர் கிறிஸ்துவர். இவர்கள் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் ஏதாவது இரட்டை இலாபம் பார்க்க கூடும். நமது அரசியல் முதிர்ச்சி இருக்கிறாரே அவர் சும்மா முதிரமாட்டார்.


சேக் தாவூது, பாண்டிச்சேரி.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற லேப் டெக்னீஷியன்கள் தேர்வில் வினாத்தாளுடன் அவற்றுக்கான பதில்கள் அடங்கிய விடைத்தாள்களையும் சேர்த்து வழங்கினார்களோ?

அதையாவது சரியாக எழுதினார்களாமா? எழுதியிருக்க மாட்டார்களே? நல்ல வேளை! தேர்வு ரத்து செய்யப்பட்டது. இல்லாவிட்டால் இவர்கள் பணியில் சேர்ந்திருந்தால், இவர்களிடம் வரும் நோயாளிகளையே அவர்களுக்கான ரிசல்ட்டையும் சேர்த்துக் கொடுக்கச் சொல்லியிருப்பார்கள். காரணம் அந்த வழியில் வந்தவர்கள்தானே இவர்கள்?


டி.பிரேம், கும்பகோணம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக இருக்கிறாரா?

நலமாக இருக்கிறார். அவசரப்பட்டெல்லாம் ஆட்கொணர்வு மனு போட்டுவிடாதீர்.


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

உங்களுக்கு டாஸ்மாக் பிடிக்குமா?

நான் ஒரு குடித்தனக்காரன். குடித்தனக்காரனுக்கு ‘டாஸ்மாக்’ தேவையில்லை. டாஸ்மாக்களுக்கு குடித்தனம் சரிவர அமைவதில்லை.


கே.அறிவுமதி, முசிறி.

இப்போது அரசு அலுவலகங்களில் ஊழல்கள்?

முன்பு காதோடு காது வைத்து! இப்போது அது மலையேறிப் போச்சு. எதுவானாலும் ‘குளோபல்’ டெண்டர்கள்தாம்.


ஆர்.பெத்தபெருமாள், காரைக்குடி.

உங்களுக்கு நான் ஆலோசகராய் வரட்டுமா?

வேண்டாங்க! அ.இ.அ.தி.மு.க.விற்குதான் அது பற்றாக்குறை. தேவைப்பட்டால் எனக்கு நானே பள்ளம் வெட்டிக் கொள்வேன். அதற்கு நானே போதும்.


ஏ.தமிழ்மணி, விழுப்புரம்.

பா.ம.க., வினரிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?

பிடித்தது அவர்களின் தமிழ்ப் பேச்சு! பிடிக்காதது, அவர்களின் பேச்சில் காணப்படும் முரண்பாடுகள். அவர்களுக்கு இப்போதைய தேவை ஓரு சரியான மவுத்வாஷ்!


க.வசந்தமாலா, தஞ்சாவூர்.

உங்கள் வீட்டில் மகளிர் தினம் கொண்டாடினீர்களா?

ம்..! பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நாக்கை உள்ளுக்கு இழுத்துக் கொண்டேன்.

Related Post

Leave a Reply