Friday 4 July 2008

2008/07/04 Lenavin Payna Katturai

shanghai.jpgசீனம் சென்று வந்தேன்

சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

சீனக் கல்விமுறையில் மேலும் வித்தியாசமான செய்திகள் இருக்கின்றன.

சீனாவில் படிக்கும் பிள்ளைகள் எவருமே வருங்காலத்தில் நான் இன்ஜினீயர் ஆவேன் என்றெல்லாம் முடிவு செய்யவே முடியாது. என்னது இது? அவரவரின் முடிவுப்படிதானே அவர்களது எதிர்காலக் கல்வி? இதில் யார் இவர்களது தலைவிதியை நிர்ணயிக்க முடியும் என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்வி. ஆனால் சீனாவில் ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் சீனக் கல்வித்துறை மூக்கை நுழைக்கிறது.

70 சதவிகித மதிப்பெண்களும், 60 சதவிகித மதிப்பெண்களும், இதற்கு மேலும் எடுப்பவர்கள் அனைவரும் இன்ஜினீயர்கள். அது சரி என்கிறீர்களா?

70-க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்துவிட்டு நான் இன்ஜினியரிங் படிக்கப் போகிறேன் என்கிற சீன மாணவன் - மாணவியைச் சீன அரசு சும்மா விடாது உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நீ டாக்டராகத்தான் ஆக வேண்டும் என்று தரத்தர எனப் பிடித்து இழுத்து வந்து மருத்துவக் கல்லூரிக்குள் தள்ளிவிட்டுவிடும்.

சீனாவில் தனிமனித உணர்வுகளுக்கெல்லாம் மதிப்போ மரியாதையோ கிடையாது. இது இதற்கு இன்னின்ன விதி. இதைக்கொண்டு நீ படித்தால் படி, இல்லை, பாழாய்ப்போ என்பதுதான் சீன அரசின் சித்தாந்தம்.

வேறு வகையில் சொன்னால், நான் இன்னவனாக ஆக விரும்புகிறேன் எனறெல்லாம் எவரும் முன்னதாக முடிவு செய்யாமல், வரிசைக் கிரமத்தில் உங்கள் முறை வரும்போது உம்! இந்தாபிடி என்று அரசு கொடுப்பதுதான் அவனது அல்லது அவளது தலைவிதியை, வருங்காலத்தை நிர்ணயிக்கிறது.

சீனாவிலும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு முறை உண்டு. ஆனால் அடிக்கடி உண்டு. இதிலிருந்து ‘பிசி’யான அப்பாக்கள் தப்பவே முடியாது. அதுவும் வாரவாரம் வந்தாக வேண்டும். என்னது! வருஷம் ஒரு முறை நடக்கும் கவுன்சிலிங்கிற்கே எங்க வீட்டுக்காரரு வரமாட்டாரு! நீ போ நான் வரலை! அவுங்க என்ன சொன்னாங்கன்னு வந்து சொல்லு போதும். இதுக்கு நான் எதுக்கு? எனக்கு ஆபிசுல ஏகப்பட்ட வேலை இருக்கு. அதுதான் ஒருத்தர் வந்தால் போதுன்னு விதி இருக்கே! நான் வேற என்னத்துக்கு அப்படீங்குறாரு என் வீட்டுக்காரரு என்று கவுன்சிலிங் முறையில் தன் முறை வருவதற்காகக் காத்திருக்கும் அம்மாக்களின் புலம்பல்களைச் சீனாவில் கேட்கவே முடியாது.

தந்தை உள்ளூரில் வேலை செய்தால், அத்தனை வேலையையும் போட்டுவிட்டு கல்வி நிறுவனத்திற்கு வாரம்வாரம் வந்தே ஆக வேண்டும். அலுவலகத்திலேயே கூட கவுன்சிலிங் தினத்தைச் சொல்லிவிட்டால், வாரந்தோறும் அதற்கு ஏற்றபடி வேலை நேரத்தை மாற்றித் தருவார்கள்.

ஆனால் தந்தை வெளியூரில் வேலை செய்தால், விதிவிலக்கு உண்டு. ஆனாலும் எப்போதாவது சிலமுறைகளாவது வந்தாக வேண்டும். அதே நேரத்தில் வெளியூரில் பணிபுரிகிறார் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து கவுன்சிலிங்குகளின் எண்ணிக்கைகளைக் குறைத்துக் கொள்ள முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

வெளியூரில் வேலை செய்யும் அம்மாக்களுக்கும் இது பொருந்தும்.

ஏற்கனவே நம் வாசகர் - வாசகிகளுக்குத் தெரிந்த ஒன்றை மறுபடி இங்கே நினைவூட்டுகிறன். சீனாவில் கணவன் ஓர் ஊரிலும் மனைவி ஓர் ஊரிலும் வேலை செய்வது மிகவும் சகஜமான விஷயம்.

பல பிள்ளைகள் தாத்தா பாட்டிகளிடம்தான் வளர்கிறார்கள். இப்படி வளரும் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்கைப் பொறுத்தவரை என்னென்ன விதிகள்? தாத்தா பாட்டி வந்தால் போதுமா? இவர்கள் மிக வயதானவர்களாக இருந்து வரமுடியாத நிலை நிலவினால் என்ன ஆகும்?இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோர் பறந்து வந்தாக வேண்டுமா என்பது பற்றியெல்லாம் நான் அதிகம் குடையவில்லை. நான் என்ன சீனக்கல்வி முறை பற்றி பி.எச்.டி செய்யவா சீனா போயிருந்தேன்?

சீனாவின் கல்வி உலகில் கைதட்டிப் பாராட்ட வேண்டிய விஷயம். ‘ராகிங்’ என்பதே அடியோடு இல்லை என்பதுதான். மூத்த மாணவர்கள் புது மாணவர்களை அன்போடு நடத்துவார்களாம். மிரட்சியுடன் வரும் புது மாணவர்களை அழைத்துப் பேசி தாங்கள் கடந்து வந்த கடினப் பாதை இப்போது எப்படி மலர்ப் பாதையாக ஆகிவிட்டது என்று விளக்கி மலைப்பை அடக்குவார்களாம்.

உணவகத்திற்கு அழைத்துப் போய் உபசரிப்பார்களாம். இந்தப் பண்பாடு நம் மாணவர்களிடம் எப்போது வரும்? இதை எப்படித்தான் உருவாக்கப் போகிறோம்? இவ்வளவு கடுமையான விதிகள் இருந்தும் இன்னும் இதற்கு அடங்காமல் ஆட்டம் போடும் சில ‘அராத்து’களை எப்படி அடக்கப் போகிறோம்! ஊம்! ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.

பள்ளிக்குப் பல்லை விளக்கிவிட்டு வந்துவிட்டால் போதும். காலை உணவு, மதிய உணவு இரண்டும் மாணவர்களுக்குக் கட்டாயமாகத் தரப்படும். இது எல்லாக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இது நம்மூர் சத்துணவு போல இருக்குமாக்கும் என்று எவராவது கற்பனை செய்தால் அது தவறு.

உணவகங்கள் மிக அழகாக, மிக வசதியாக இருக்கும். புபே உணவு போல இல்லாவிட்டாலும் சில வகை உணவுகள் விதவிதமாக, தட்டு நிறையத் தரப்படும். ஆரோக்கியமான முறையில் இது தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு மிகக் குறிப்பாக இருக்கிறது.

உணவில் கண்டிப்பாகக் கீரையும் அசைவமும் இருக்கும். உணவு முறை ஆயுர்வேத அடிப்படையில் அமைவதால் பெரும்பாலும் எவ்விதத் தொல்லையும் தருவதில்லை. உணவைக் கிட்டத்தட்ட மருந்தாகவே அமைத்துக் கொண்டுவிட்டதால், சீனர்கள் மிகக் குறைவான அளவிலேயே உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள்.

சிகரெட், அசைவம் போன்ற கெடுதல்களை இவர்கள் பின்பற்றினாலும் இவர்களது உணவு முறை இவர்களைக் காப்பாற்றிவிடுகிறது.

”சீனாவில் வேறு என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? வேறு என்ன பார்க்க விரும்புகிறீர்கள்?” கேட்டவர் செந்தில்குமார்.

தங்கிய வீட்டில் வந்த விருந்தினர் வாயைத் திறந்து ஏதும் கேட்டுவிட்டால், ஏதும் விருப்பப்பட்டுவிட்டால், நம் வேலைகள் கெட்டுவிடுமே என்று எண்ணாத பெருந்தன்மையை இவரிடம் கண்டேன்.

”சிறுவயதிலிருந்தே எனக்குள் ஒரு விவசாய உள்ளம் உண்டு. இன்னமும் சிறிய அளவில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்.”

”அப்படியா?” கண்கள் அகல, விரித்து வியந்து கேட்டார்.

”ஆமாம். எங்கள் வீட்டிற்குத் தேவையான அரிசி முதல் பல பொருள்கள் எங்கள் விவசாயப் பண்ணையிலிருந்துதான் வருகின்றன.”

”ஆச்சரியம். உங்கள் வீட்டில் வேறு யாருக்கு விவசாயத்தில் யாருக்கு ஆர்வம்?”

”எனக்கு மட்டும்தான். விவசாயத்தைப் பார்த்துக்கொள்வது நான்தான்.”

”எங்கே விவசாயம் செய்கிறீர்கள்?”

”மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையிலேயே தந்தையின் பெயரால் உள்ள ஒரு பண்ணையில் எளிய அளவில் செய்துவருகிறேன்.”

”புரிந்துவிட்டது. உங்களுக்குச் சீன விவசாய முறைகளைப் பற்றி ஆர்வம். நேரில் பார்க்க வேண்டும் அவ்வளவுதானே?”

”ஆமாம்.”

”ஷாங்காய் நகரம் மிகப் பெரியது. நகர வாடையைத் தாண்டி கிராமப்பக்கம் போகவே நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.”

”பரவாயில்லை. எவ்வளவு தூரம்?”

”சுமார் 60 கிலோமீட்டர் டாக்சியில்தான் போகிறோம். அதுதான் நமக்கு செளகரியம். பஸ், இரயில் ஆகியவை நாம் போகும் இடத்திற்குச் சரிப்பட்டு வராது.”

”சரி. எப்போது போகிறோம்?”

”நாளைக்கு காலையில்.”

“ஒரே ஒரு குற்றஉணர்வு. வந்த இடத்தில் எனக்கு உங்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர வேற வழியில்லை. முற்றிலும் புதிய இடம். புதிய மனிதர்கள். புரியாத மொழி. புதிரான உலகம். உங்கள் வேலைகளையெல்லாம் கெடுத்துக் கொண்டு தொழிலைப் பார்க்கவிடாமல் தடையாக இருந்து கொண்டிருக்கிறேனே என்கிற குற்றஉணர்வு ஒரு மூலையில் மனத்தில் செல்லரிப்புப்போல் நடந்து கொண்டிருக்கிறது.”

இப்படி நான் சொன்னதற்கு செந்தில்குமார் சொன்ன பதில் வித்தியாசமானது.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Post

Leave a Reply