Friday 4 July 2008

2008/07/04 Lenavin Parvayil

river.jpgதமிழகம் முன் உதாரணமாகட்டும்!

எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் எதிர்ப்பு; ஆட்சேபம்; குற்றம்; குறை; குறுக்கே விழுந்து படுத்துக் கொள்ளுதல் ஆகியவை இந்தியாவில் நடப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

எதிர்க்கட்சிகள் என்றில்லை; கூட்டணிக் கட்சிகளேகூட ஆளுங்கட்சியின் அறிவிப்புகளுக்குத் தடை சொல்லும் கலாச்சாரம் இன்றைய அரசியலில் புதிதல்ல என்று ஆகிவிட்டது.

மிக நல்ல திட்டமான சேது சமுத்திரத் திட்டத்திற்குக்கூட அப்படி ஓர் எதிர்ப்பு. நம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வெளி எதிரிகள் தேவையில்லை. நம் அரசியலிலேயே பஞ்சமில்லாமல் இருக்கிறார்கள்.

எங்கே இந்தியா வளர்ந்துவிடுமோ என்கிற அச்சம் நம்மை விரும்பாத நாடுகளுக்கு அவசியமே இல்லை.

ஆனால் ஆச்சரியமாக தமிழக நதிகளின் இணைப்பிற்கு இந்நேரம் வரை எதிர்ப்பு ஏதும் கிளம்பவில்லை.

இந்த நல்ல திட்டத்தை எதிர்க் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளும் பாராட்டி வரவேற்கவில்லையே என்கிற ஏக்கம் ஆளுங்கட்சிக்குத் தேவையில்லை. காரணம், அமைதியாக இருந்தால் இதையே பாராட்டாக எடுத்துக் கொள்ளலாம் என்கிற சூழ்நிலையே இன்றைய அரசியலில் நிலவுகிறது.

376 கோடி ரூபாய் செலவு என்கிறார்கள். இந்த எல்லையோடு நிற்காது நாள் ஆக ஆக இத்திட்டச் செலவு பல சதவிகிதங்கள் அதிகரிக்கக் கூடும். இதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

தோண்டப்பட இருக்கும் 225 கி.மீ. வாய்க்காலில் பல எதிர்பாராத குறுக்கீடுகள் வரலாம். ஆனால் தடைப்பட்டு தோண்டப்பட்ட வாய்க்கால் பகுதி தூர்ந்து போகாதபடி கண்காணிக்க ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படலாம்.

ஆட்சி மாறினாலும், அரசியல் சூழல் மாறினாலும் பொது மக்களின் நன்மை கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டே ஆகவேண்டும். இதிலும் அரசியல் கருத்தொற்றுமை தேவை.

தமிழகத்தில் வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி ஏற்படுகின்றன. காவிரியில் பாய்ந்தோடிய காலம் மாறி, கரைபுரண்டு ஓடி, கரையோரக் கிராமங்களைக் காலி செய்யச் சொல்லி, பல மாவட்டத் தலைவர்கள் தண்டோராபோட ஏற்பாடு செய்ததற்கான காட்சிகள் இன்றும் கண்களுக்குள் மங்காமல் மறையாமல் தோன்றித் தோன்றித் பயமுறுத்துகின்றன.

உபரி நீரை வறட்சி மாவட்டங்களுக்கு நகர்த்தினால் வெள்ள அபாயம் நீங்குவதோடு விளைநிலங்களும் பெருகி, நிலத்தடி நீரும் உயர வாய்ப்பு உள்ளது. அக்னி ஆறு, கோரை ஆறு, பாம்பாறு, வைகையாறு, குண்டாறு ஆகியவை இணைக்கப்படும் இந்த அருமையான திட்டம் நடைமுறைக்கு வரும் நாள் தமிழகத்தின் பொன்னாள்களுள் ஒன்று எனலாம்.

பட்ஜெட்டில் அறிவித்ததோடு நில்லாமல், நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்ட தமிழக அரசின் முயற்சிகளைத் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.

தொலைக்காட்சி இலவசங்களும், சிலிண்டர் விநியோகங்களும் அரசியல் சாயம் பூசப்படலாம். ஆனால் இந்திய ஆறுகளின் இணைப்புத் திட்டத்திற்கு முன்னோடியாக தமிழகம் இதைச் சாதித்துக்காட்டினால் தமிழகத்தை இந்தியாவே வியந்து பார்க்க ஆரம்பித்துவிடும்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Post

Leave a Reply