Thursday 26 June 2008

2008/06/27 Lenavin Payna Katturai

shanghai.jpgசீனம் சென்று வந்தேன்

சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

சீனா தன்னைச் சந்தைப்படுத்திக்கொள்ள அதிக முயற்சி செய்யாதபோதும் சீனப் பொருள்கள் உலக அளவில் அதிகம் பரவியிருக்கக் காரணங்கள் மலிவான விலையும் பொருள்களின் நேர்த்தியும்தாம் என்பேன்.

செந்தில்குமாரிடம் பேசிக் கொண்டிருந்தால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். பத்திரிகையாளர்களைப் போல் கண்களையும் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக் கொள்ளும் மனிதர் இவர்.

”சார்! எத்தனையோ வருடங்களாகச் சீனாவில் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் குடும்பத்தை அழைத்துவர மாட்டேன் என்கிறீர்கள்?” என்கிற தனிப்பட்ட கேள்வியைச் சற்று உரிமையோடு கேட்டேன்.

”என் மகன் ஜெய்ஹரீஷ் இப்போது தமிழகத்தில் யு.கே.ஜி. படிக்கிறான். அவனை இங்கு படிக்க வைக்கவேண்டுமானால் வருடத்திற்குச் சுமார் ஒன்றரை இலட்சம் இந்திய ரூபாய் செலவாகும்.”

”என்னது! ஒன்றரை இலட்சமா?” சோபாவின் விளிம்பில் அமர்ந்திருந்த நான் அப்படியே பின்னோக்கிச் சாய்ந்து அமர்ந்தேன்.

”என்ன சார் இது! என்னவோ கல்லூரிக் கட்டணம் போல இருக்கிறதே! டொனேஷன் ஏதும்?.”

”டொனேஷனே இல்லாமல்தான் இந்தத் தொகை!”

”அது சரி!”

”பள்ளியில் இடம் கிடைப்பது கடினமோ?”

”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சொல்லப்போனால் ஒரு சிரமமும் இல்லை. ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். தனியார் பள்ளியில்தான் இவ்வளவு கட்டணம். இங்கே நம்மூர் கார்ப்பரேஷன் பள்ளிகள்போல் நிறைய பள்ளிகள் இருக்கின்றன. உதாரணமாக ஷாங்காய் நகர் பன்னிரண்டு பகுதிகளைக் கொண்டது. இதில் 30 பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் இலவசக் கல்விதான்.”

”இதில் சேர்க்கலாமே உங்கள் மகனை?”

”முழுக்க முழுக்க சீனத்தில்தான் பாடம் நடத்துவார்கள். அது சரிப்பட்டு வராது.”

”ஒப்புக்கொள்கிறேன். இங்கே ஆங்கிலமே கிடையாதா?”

”வாரத்தில் சில நாள்கள் மட்டும் ஆங்கிலத்தைக் கற்றுத் தருகிறார்கள். இது போதாது.”

”தனியார் பள்ளிகளில் எப்படி?”

”ஆங்கிலத்திலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றன. இது சென்ட்ரல் போர்டு கல்வி முறை போன்றது என்று வைத்துக் கொள்ளுங்களேன்!”

”அரசு கார்ப்பரேஷன் பள்ளிகளில் என்ன கல்வி முறை?”

”ஒரே மாதிரியான கல்வி முறைதான் நம்மூரில் இருப்பதுபோல் ஸ்டேட், மெட்ரிகுலேஷன் என்பதெல்லாம் கிடையாது.”

”பள்ளி நிறுவனங்களில் ஒழுக்கம், கட்டுப்பாடு எப்படி?”

”ஒழுக்கமா?” பெரிதாகச் சிரித்தார் செந்தில்குமார். தொடர்ந்து சொன்னார். ”பள்ளியில் படிக்கும் பருவமடைந்த பெண் ஒவ்வொரு பெண்ணின் பையிலும் காண்டம் இருக்கும்.”

”ஐயோ! காண்டமா?” எனக்கு ‘கிர்ர்’ என்றது தலை!

”உண்மையில் லேனா சார்! பிள்ளைங்க பள்ளி வளாகத்திற்குள் கட்டுப்பாடா இருப்பாங்க. சரியா நடந்துக்குவாங்க. ஆனா பள்ளியை விட்டு வெளியில வந்தா அவித்துவிட்ட கழுதைங்கதான். நம்ம ஊர்ல ஒரு பள்ளி மாணவன் பள்ளிக்கு வெளியில சிகரெட் பிடிச்சா வாத்தியார் கண்டிப்பார் இல்லையா?”

”நிச்சயமா!”

”பெற்றோர்கிட்ட புகார் செய்வாரா மாட்டாரா?”

”நிச்சயமா!”

”இங்க அப்படி இல்லை. பள்ளிக்கூடத்துக்குள்ள சரியா இருந்தாப் போதும்னு நினைப்பாங்க. வெளியில என்ன செஞ்சாலும் கண்டுக்கவே கண்டுக்கமாட்டாங்க ஆசிரியருங்க.”

”ஏன் இப்படி?”

”அது தனிமனித சுதந்திரத்துல கையை வைப்பதாக இரு தரப்பாரும் நினைக்கிறாங்க.”

”என்னங்க இது அநியாயமா இருக்கு?”

”சிகரெட் பிடிச்சாக்கூடவா கேட்க மாட்டாங்க?”

”கண்டுக்கவே மாட்டாங்குறேன்ல?”

”ஏன்?”

”சிகரெட் என்பது சீனர்களின் வாழ்வில் ஒன்றிணைந்த விஷயம். ஓர் ஆச்சரியமான விஷயம் சொல்லட்டுமா?”

”சொல்லுங்க.”

”ஒரு சீனக் கிராமத்துக்குப் போறீங்கன்னு வச்சுக்குங்க.”

”சரி.”

”உங்களை சிகரெட் கொடுத்துதான் வரவேற்பாங்க்.”

”அடப்பாவிகளா! நான் பிடிக்கமாட்டேன்னு சொன்னா?”

”வற்புறுத்தமாட்டாங்க. அதுமட்டும் இல்லை. அந்த சிகரெட்டை வாயில வச்சு உங்களுக்கு அதைப் பத்த வைக்கிற வேலையை அந்த வீட்டுச் சிறுவர் சிறுமிங்கதான் செய்வாங்க.”

”என்னங்க இது! ரொம்ப அக்கிரமமா இருக்கே!”

”சந்தேகமா இருந்தா வாங்க கிராமத்துப் பக்கம் போயிட்டு வரலாம்.”

”சிகரெட் பிடிக்கிற ஆசை இருந்தால்தானே, அது சரி! சிகரெட் இவுங்க கலாசாரத்தோட இவ்வளவு ஒட்டிப் போயிருக்கே! அதுவும் இல்லாம உலகத்திலேயே சிகரெட்டுக்குன்னு தனிக்கடைகளைத் தெருவுக்கு மூணு திறந்து வச்சிருங்காங்களே! இந்த நாட்டில் புற்றுநோய் ரொம்ப அதிகமா இருக்கணுமே!”

”அதுதான்னு இல்லை!”

”அதெப்படி?”

”சத்தான உணவால சரிகட்டிடறாங்க.”

”புரியலை.”

”சீனர்களோட உணவே ஒரு வகையில் ஆயுர்வேத மருந்துபோல இருக்கும். கீரைகள், பச்சை காய்கறிகளை நிறைய எடுத்துக்கிட்டு சாதத்தைக் குறைச்சிடுவாங்க. மூலிகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்குவாங்க.”

”அதனால புற்றுநோய் பாதிப்பு வராம இருக்குமா என்ன?.”

”வராமே இருக்கே. சீனாவில் புற்றுநோய் இறப்பு ரொம்பக் குறைவு.”

”கல்வியிலேர்ந்து ரொம்ப விலகிட்டோம். சீனக் கல்வி முறை பற்றி இன்னும் சொல்லுங்க.”

”சீனக் கல்விமுறையில் உடற்பயிற்சிக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம்.”

”விளக்கமாகச் சொல்லுங்க.”

”பள்ளிப் புள்ளைங்க யூனிஃபார்மைப் பார்த்தாலே டிராக் சூட் போலத்தான் இருக்கும்.”

”புரியலை.”

”நீல டிராயர் கவுன், வெள்ளைச்சட்டையெல்லாம் யூனிபார்ம் கிடையாது.”

”பின்னே?”

”சொன்னேனே! டிராக் சூட்தான்.”

”அதாவது விளையாடப் போற பிள்ளைங்க போட்டுக்குறாங்களே, அதை உடைங்குறீங்க.”

”ஆமாமா!”

”அந்த அளவுக்கா இங்கே விளையாட்டுக்கு முக்கியத்துவம்?”

”நிச்சயமா! காலையிலே பள்ளியில் நுழைஞ்சதுமே உடற்பயிற்சிதான். மாலையில் தினமும் டிரில் உண்டு.”

“தினமுமா?”

”ஆமாம்! உலகத் தரம் வாய்ந்த கோச்சுகளை ஒவ்வொரு பள்ளியும் இங்கே கொண்டிருக்கும். உலகின் சிறந்த வீரர்களின் விளையாட்டுப் போட்டிகளை போட்டுக் காட்டி இவர்களை மாதிரி நீங்க வரணும்னு பள்ளியிலிருந்தே தூண்டுவாங்க. ஒவ்வொரு மாணவனும் மாணவியும் விளையாட்டில் சிறந்து விளங்கியே ஆகணும்னு இங்கே எழுதப்படாத விதியே இருக்கு.”

”சீனா தங்கப் பதக்கங்களை எப்படி அள்ளிக்குவிக்குதுன்னு இப்பத்தான் செந்தில் சார் புரியுது.”

”நல்லாப் படிக்கலைன்னாக் கூடப் பள்ளியில் விட்டுடுவாங்க. ஆனா நல்லா விளையாடாட்டா இங்கே சாமானியத்துல விடமாட்டாங்க.”

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Post

Leave a Reply