Thursday 19 June 2008
சீனம் சென்று வந்தேன்
வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
செந்தில்குமாரை ஒரு சீனப் பற்றாளர் என்று நான் குற்றம் சாட்டிவிட்டேனோ என்று நான் ஐயுற்ற போது எனக்கு நானே தலையில் மானசீகமாகக் குட்டிக் கொண்டேன்.
ஒரு நாட்டில் நாள்படத் தங்கி, அந்த மண்ணின் விளைபொருள்களை உண்டு, அதன் நீரைக் குடித்து, அந்நாடு தனக்குச் செய்த பலன்களை உணர்ந்து, அது தந்த பொருளாதார உயர்வை நன்றியுடன் எண்ணிப் பார்த்து, சில வார்த்தைகளைப் பிரியமாக உதிர்த்தாலோ, அல்லது சீனத்தைப் பற்றி நான் கொண்டிருக்கிற தவறான எண்ணத்தை உடைக்கும் முயற்சியில் இறங்கினாலோ அதை நாம் வேறு விதமாகக் கணித்து விடக்கூடாது என்கிற மகத்தான உண்மை செந்தில்குமார் சொல்லாதபோது தாமாகவே எனக்குள் தாமதமாக உதித்தது.
இந்த உணர்வு என்னைத் திரும்பத் திரும்ப அலைக்கழிக்கவே காட்சியையும் களத்தையும் மாற்றிக்கொள்ள விரும்பினேன்.
”செந்தில் சார், கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வருகிறேனே!” என்றேன். இருந்த சூழ்நிலைக்கு வேறு எவருமாக இருந்திருந்தால் காயப்பட்டு, ‘எங்காவது போய்த் தொலை’ என்று சொல்லாமல் ”சரி சரி” என்றிருப்பார்கள்.
செந்தில் பண்பாளர், ”இந்தக் குளிரிலா?” என்றுதான் திரும்பிக் கேட்டார்.
”இதெல்லாம் ஒரு குளிரல்ல. கடுமையான உறைபனிகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறேன். தாங்குவேன் சார்” என்றேன்.
”கையில் பாஸ்போர்ட் நகல் எடுத்துக் கொள்ள வேண்டுமா செந்தில் சார்?”
”பக்கத்தில் தானே? அவசியமில்லை” என்றார்.
நாங்கள் இருந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலம். ஒரு ப்ளாட்டின் நுழைவாயிலில் கூட எண்களால் அழுத்தப்பட வேண்டிய பூட்டு முறை உண்டு.
‘அண்டாகாகசம் அபூகாகசம் திறந்திடு சீசே!’ என்பது போல் சரியாக எண்களை அழுத்தினால்தான் திறக்கும். கையில் செல் இருந்தால் நம் Flatக்குப் பேசிச் சொன்னால் அங்கிருந்தும் திறக்க வசதி உண்டு. இரண்டும் இல்லாவிட்டால் வெளியில் நின்றுவிட வேண்டியதுதான்.
நான்கு இலக்க எண்கள் என்பதால் செந்திலிடம் எழுதி வாங்கிக் கொண்டேன். கீழ்க்கதவைச் சாத்துமுன் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். எண்களை எழுதிய சீட்டு இருக்கிறதா என்று.
உள்ளே கார் நிறுத்துமிடத்தைக்கூட முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அந்தந்த Flat காரர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கார்களை நிறத்த முடியாதபடி பூட்டு வசதி ஒன்றை தரைப் பகுதியிலேயே எளிமையாக அமைத்திருக்கிறார்கள்.
தீயணைப்பு வாகனங்கள் வந்தால் நிற்க வசதியாக ஒரு பொது இடத்தை ஒதுக்கிச் சீனத்தில் ஏதோ எழுதியிருக்கிறார்கள்.
சீன மொழி (மாண்டரின்) கடினமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது ஓர் உருவமொழி. சூரியன் என்றால் ஓரளவு அதன் வடிவத்தை நினைவுபடுத்துவதுபோல் இருக்கும். ஆனாலும் தீ என்பதற்கு அடையாளமாக சுவாலைப் பாணியில் ஏதும் தெரிகிறதா எனத் தேடினேன். அப்படி ஒன்றும் இல்லை. செக்யூரிட்டிகள் பகலிலும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பார்க்கப் பால் முகம் மாறாப் பச்சைப் பையன்களாக இருக்கிறார்கள். எவரேனும் அறைந்தால் கூட எழுந்திருக்கத் தெம்பில்லாதவர்களாய்க் காட்சி அளிக்கிறார்கள். உடையோ உடலுக்குச் சம்பந்தமற்று, தொளத் தொள என்று இருக்கிறது. ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி அணிந்திருப்பது போல் மகாச் சுத்தம்; அழகு.
என்னை இருவரும் விநோதமாகப் பார்த்தார்கள். ஏதும் விசாரிப்பார்களோ? என்னிடம் இருப்பது எல்லாம் அந்தக் கதவு திறக்கும் எண் உள்ள சீட்டு மட்டும்தான். கேட்டால் அதை மட்டும் காட்ட வேண்டியதுதான். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்களே தவிர, ஏதும் கேட்கவில்லை. இதுவே இரவாக இருந்திருந்தால் நிச்சயம் மறித்திருப்பார்கள்.
செந்திலின் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் நடந்தால் ஒரு மிகப் பெரிய சந்திப்பு வருகிறது. மிக அண்மையில் உருவாக்கப்பட்ட பகுதி என்பதால் சாலைகள் மிக அகலமாக இருக்கின்றன. கட்டடங்கள் எல்லாம் புதிதாகத் தெரிவதால் மிக அழகாக இருக்கின்றன.
சாலையில் பாதசாரிகள் கடக்கும் பாதையில் சிவப்பு விளக்கு எரியவே நான் நின்றபடி காத்திருந்தேன். ஆனால் மூன்று சீனர்கள் இதைப்பற்றியெல்லாம் கண்டுக்காமல் கடந்து கொண்டே இருந்தார்கள். புது இடம், பிடித்து அபராதம் போட்டுவிடப் போகிறான் என்று நான் தயங்க உள்ளூர் மக்களோ ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா கட. இங்கே எவனும் ஒண்ணும் கேக்கமாட்டேன்’ என்று எனக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல சிக்னலை மதிக்காமல் கடந்தார்கள்.
சாலையின் இருபுறமும் பார்த்துவிட்டு, துள்ளலாய் ஓடிக் கடந்தேன். பாம்புக்கறி சாப்பிடுகிற ஊரில் நடுத்துண்டு எனக்கு என்று கேட்கவேண்டியதுதான் என்கிற பழமொழியே என் நினைவிற்கு வந்தது.
நான் நடந்து சென்ற வரிசையில் என்னை மிகவும் ஈர்த்தது ஒரு பழக் கடை.
சீனா விவசாய உலகில் செழிப்பதை இங்குதான் கண்டேன். காயாத, கசங்காத, அழுகியிராத விதவிதமான பழங்கள். பல வகைகளை நான் இதுவரை பார்த்ததே இல்லை. கடையில் அவ்வளவாகக் கூட்டமில்லை. சிலரே வாங்கிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் தனிப் பெண்கள். இதுவரை பார்த்திராத பழங்களை மட்டும் தொட்டு திருப்பி, உருட்டி, அழுத்திப் பார்த்தேன்.
இவை எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது.
ஒவ்வொரு பழக்குவியலின் நடுவிலும் மஞ்சள் அட்டையில் சிவப்பு வண்ணத்தில் சீன மொழியில் எழுதியிருந்தார்கள். பழங்கள் பலவும் ஜி.டி.நாயுடுவின் தோட்டத்துத் தயாரிப்புகளைக் போல மெகா அளவுகள். கொய்யா இருந்தது பாருங்கள் ஓர் அளவு! ஒன்று சாப்பிட்டால் போதும். வேறு உணவே வேண்டாம்.
வலம் வந்தேதேன தவிர, செந்திலுடன் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்ற உணர்வே அதிகம் மேலோங்கி நின்றது.
‘ஐயோ! இந்தப் பழமா? என் வாங்கினீர்கள். சகிக்காதே!’ என்று ஏதேனும் சொல்வார். எனவே அவர் உடன் இருப்பது நல்லது என்று தோன்றியது.
ஓர் ஐந்தடி எட்டங்குல ஜென்மம் நம் கடைக்குள் நுழைந்திருக்கிறதே, எதை வாங்குவது என்ன செய்வது என்று தெரியாமல் இப்படித் திருத்திரு என விழிக்கிறதே, நம்ம நாட்டுக்குப் புதியதான நிறமாக இருக்கிறதே, எதுவும் வாங்காமல் ஏதோ கண்காட்சி நடப்பதுபோல் பார்த்தபடி வலம் வருகிறதே, இதனிடம் என்ன வேண்டும் உனக்கு என்று கேட்போமே என்று கடை ஊழியர்களுக்கு ஏன் தோன்றவே இல்லை?
வாடிக்கையாளரின் அருகில் வந்து பயங்கரமாக (!) கவனிப்பது ஒருவகை நாகரிகம் என்றால், ‘வாங்குனா வாங்கு. வாங்காக் காட்டிப் போ! உன்னை எதற்கும் சீண்டக்கூட மாட்டோம்’ என்று அவரவர் போக்கிற்கு விட்டுவிடுவதும் ஒருவகை வியாபார நாகரிகம் போலும்.
உண்ணுகிற பொருள்கள்தானே? இதில் வியாபார உத்தி என்ன இருக்கிறது என்று எண்ணுகிறார்களா? அல்லது மொழி தெரியாத இவனிடம் என்ன பேசிவிட முடியும் என்று யோசிக்கிறார்களா? ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை. ஆனால் அவர்கள் வந்து பேசாததும் எதையும் தலையில் கட்ட எண்ணாததும் எனக்கு மனச் செளகரியமான விஷயமாகவே பட்டது.
சீனாவில் என் ஷாப்பிங் அனுபவத்தில் நடந்ததும் இதுதான். எவரும் நம்மை அதை வாங்கு இதை வாங்கு எனக் கட்டாயப்படுத்தக் காணோம். துணிக்கடைக்குப் போனால் கேட்டதை எடுத்துப் போடுகிறார்கள். ஆனால் வியாபாரப் பிரசாரம் இல்லை. ‘வாங்குனா வாங்கு. வாங்காக்காட்டிப் போ’ என்கிற அணுகுமுறைதான் இங்கு அதிகம். ஆனால் எடுத்துப் போடச் சொன்னால், காட்டச் சொன்னால் சளைக்காமல் காட்டுகிறார்கள்.
ஓட்டலில்கூட ஆர்டர் எடுக்கும்போது அது நல்லா இருக்கும், இது நல்லாருக்கும் சாப்பிட்டுப் பாருங்க என்கிற நீட்டி முழக்கல்கள் இல்லை.
‘கேட்டாக் கேட்டதைக் கொண்டு வந்தேன்’ என்கிற கொள்கைதான்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…









































