Thursday 19 June 2008
கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
இந்தியப் பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனாவின் செயலை, காங்கிரஸ் கூட்டணி கண்டுகொள்ளாமலும், கோழைத்தனமாகவும் இருக்கக் காரணம், சீனத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்டுகள்தாம் என்கிற பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டு ஒரு பகீர்க் குற்றச்சாட்டு இரகத்தைச் சேர்ந்ததே!
சிக்கிமில் இருக்கும் பிங்கர் பாயிண்ட் என்ற இடம் தனது எல்லைக்கு உட்பட்டது என்று நாட்டாமைப் பாணியில் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் துடுக்குத்தனத்திற்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம். சிக்கிம் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் சீனா, இப்படித் திடீரென்று வாலை அவிழ்த்திருப்பது இந்திய அரசியலில் கம்யூனிஸ்டுகள் பெற்றிருக்கும் முக்கிய இடம் ஆகும் என்பது பாரதிய ஜனதாவின் ஊகம்.
இந்தக் கருத்தை அடியோடு தவறு என்று சொல்லிவிட முடியவில்லை.
லடாக் பகுதியிலும் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதை இந்தியா கண்டிக்கவில்லை. நம் படைகளைக் கொண்டு போய் நிறுத்தவும் இல்லை. இது ஒரு கோழைத்தனமாக நிலை என்கிறது பாரதிய ஜனதா.
கம்யூனிஸ்டுகளின் கை தற்சமயம் ஓங்கியுள்ள நிலையில் சீனாவின் அடாவடிகள் அதிகரித்திருக்கின்றன. இவை மட்டுமல்ல, மலாக்கா ஜலசந்தியில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை சீனா கட்டி வருகிறது. பாகிஸ்தானில் குவாடார் என்ற இடத்தில் சீனத் துறைமுகம் ஒன்று உருவாகிறது.
கோகோ என்ற தீவில் சீன ரேடார் தயார். இலங்கையில் ஹம்பன்தோட்டா என்ற இடத்தில் விமான நிலையம் அமைக்கிறது.
இவற்றை பூகோள ரீதியாகப் புள்ளி வைத்துப் பார்த்தால் இந்தியாவை நான்கு திசைகளிலிருந்தும் அசைக்கக்கூடிய வழிமுறைகளுக்கு அடிகோலிவிட்டது எனலாம்.
இந்தியாவைச் சுற்றி வளைக்கும் இந்தச் சீன முயற்சிகளை இன்றைய மத்திய அரசு தடுக்காதது ஏன்?
பெட்ரோல் விலையேற்றம், பணவீக்கம் ஆகிய விஷயங்கள் தவிர, மற்ற விஷயங்களில் கம்யூனிஸ்டுகளை எப்படித் தாஜா செய்யலாம் என்பதுதான் மத்திய அரசின் ஒரே நோக்கமா?
உலக அரங்கில் இது பற்றிக் குரல் கொடுக்கும் எண்ணம் மத்திய அரசிற்கு இல்லையா என்ன?
பாரதிய ஜனதா எழுப்பியிருக்கும் இந்தப் பிரச்னை மத்திய அரசுக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளுக்கும் ஒரு சரியான சவால்.
எங்கே, இந்த விவகாரம் பற்றி வாய் திறப்பார்களா கம்யூனிஸ்ட்கள்?
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?









































