Thursday 12 June 2008

2008/06/13 Lenavin Payna Katturai

shangai1.jpgசீனம் சென்று வந்தேன்

சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

சீனாவில் பணம் சேமிப்பது அர்த்தமற்றது என்று சொன்னதன் பொருள் எனக்கு விளங்கவே இல்லை. சேமிப்பு என்பது எந்த தேசத்திலும் நல்ல விஷயம்தான்.

இதை எப்படி அர்த்தமற்றது என்று சொல்ல முடியும் என்றுதான் எனக்குச் சிந்திக்கத் தோன்றியது.

”சீனாவில் சேமித்து வைத்து அதை வங்கியில் போட்டால் அதற்கு நாம் வட்டி செலுத்த வேண்டும்.”

”அது சரி!”

”அதனால உடனுக்குடன் இந்தியாவுக்குப் பணத்தை நகர்த்திடுவோம். ஓரளவு தேவைக்கு வைத்துக் கொண்டால் போதும் என்று நினைப்போம்.”

”சீனாவில் கறுப்புப் பணம் உண்டா?”

”மிகக் குறைவு. இங்கு ஏதும் ஏமாற்ற முடியாதபடி வரி விதிப்புகள், கட்டுப்பாடுகள் அழகாகக் கொண்டு வந்துவிட்டார்கள்.”

”நம் நாட்டில் உள்ள கறுப்புப் பணம் மட்டும் வெள்ளைப் பணமாக இருந்திருந்தால் உலகில் பொருளாதாரத்தில் நாம் எங்கோ இருப்போம்.”

”உண்மை சார். சுயநலத்திற்காகக் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துகிறோம். இப்பணம் வெள்ளையாக இருந்திருந்தால் வரியாக நிறையப் பணம் வரும். நாட்டு நலன்களுக்குப் பயன்படும்.”

”நம் அரசியல்வாதிகள் பலர் சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணம் எத்தனையோ கோடிக் கோடி என்கிறார்கள். இது எவருக்கும் பயன்படாமல் பெருகாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது.”

”சீனாவில் இலஞ்சம் உண்டா?”

”உண்டு. ஆனால் மிகக் குறைவு.”

”கறுப்புப் பணம்?”

”உண்டு. ஆனால் அதை அதிகம் குவிக்க முடியாது. சாமானியத்தில் பயன்படுத்தவும் முடியாது.”

”புரியவில்லை.”

”எல்லாம் வெளிப்படையாக நடப்பதால் கறுப்புப் பணத்திற்கு அதிகம் வேலையில்லை.”

”கறுப்புப் பணம், இலஞ்சம் ஆகியவை சீனாவில் கட்டுக்குள் இருப்பதுகூடச் சீனாவின் அபார வளர்ச்சிக்குக் காரணம் என்று நினைக்கிறேன். கறுப்புப் பணம் வரியை உற்பத்தி செய்வதில்லை. வெள்ளைப் பணம் அப்படி அல்ல. சுழன்று சுழன்று வரி என்ற வடிவில் அரசுக்கு வருமானத்தைக் குவிக்கிறது. இது அரசிற்குப் போவதால் அது வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்களின் நன்மைக்கும் பயன்படுகிறது. அதே போல் இலஞ்சமும் அரசுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வரிக்குக் குறுக்கே தடையாய் நிற்கிறது. இலஞ்சம் குறையும்போது, வெளிப்படையான வரவு செலவுகள் நடக்கின்றன. 100 ரூபாய் இலஞ்சம் கொடுத்து அரசின் 1000 ரூபாய் வருமானத்தை ஒரு தனிமனிதர் கெடுக்கிறார். இந்தத் தவறு நடக்காதபோது அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.”

”கரெக்ட்.”

”அந்த நாட்டைப் பார் இந்த நாட்டைப் பார். நம் நாட்டில் என்ன இருக்கிறது என்று இளக்காரம் பேசுகிறவர்கள்தான் பிறந்த மண்ணிற்குத் தன்னால் விளைவிக்கப்பட்ட நன்மை என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். சீனத்தின் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் நல்ல தலைமை, பொறுப்புணர்ந்த மக்கள் ஆகிய இரண்டையுமே காரணங்களாகக் சொல்ல வேண்டும்.”

”ஆமாம்.”

”சீனப் பொருள்களின் தரம் பற்றி எனக்கு நல்ல அபிப்பிரயாம் இல்லை செந்தில் சார். மகா மட்டம். எந்தச் சீனப் பொருளும் சரிவர உழைப்பது இல்லை.”

”இந்தியாவில் பலரும் இப்படிச் சொல்லக் கேள்விப்படுகிறேன். ஆனால் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். இந்தியாவுக்கு வருகின்ற சீனப் பொருள்கள் ஏழாந்தரம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

”என்னது? ஏழாந்தரமா? நான் கேள்விப் பட்டது எல்லாம் நாலாந்தரம்தான். அதற்குக் கீழே வேறு இருக்கிறதா என்ன?”

”ஓர் உண்மை சொல்லட்டுமா?”

”சொல்லுங்கள்.”

”இந்தியர்களைப் பற்றி இங்கு உள்ள சீனர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?”

”என்ன?” கண்களை அதிகம் திறந்து ஆர்வமாகக் கேட்டேன்.

”இந்தியர்களுக்கு குவாலிட்டி கான்ஷியஸைவிட காஸ்ட் கான்ஷியஸ்தான் அதிகமாம்.”

”அப்படியா சொல்வார்கள் சீனர்கள்? ஓரளவு உண்மைதான் இல்லையா?”

”ஆமாம். நம்மவர்களுக்குத் தரத்தை விட விலையைப் பற்றித்தான் அதிக அக்கறை. வால்மார்ட் இந்தியாவில் பிரமாதமாக எடுபடும் பாருங்கள்!?”

”எப்படி இப்போதே அப்படி ஓர் உத்தரவாதம் தருகிறீர்கள்?”

”வால்மார்ட்காரர்கள் தரத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத விலையைத் தேடித் தேடிப் புரட்டிப் பார்க்கிறவர்களைக் கவனத்தில் கொண்டே ஆரம்பிக்கப்பட்ட கடை.

தரம் பற்றி அதிகம் அக்கறைப்படும் அமெரிக்காவிலேயே வால்மார்ட் பெரிய வெற்றியென்றால் இந்தியாவில் கேட்கவா வேண்டும்?

”நல்ல வாதம். இந்தியாவுக்கு வரும் சீனப் பொருள்களின் தரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அதிலிருந்து சற்றே விலகிவிட்டோம்.”

”சீனாவில் ஒரே பொருள் ஏழுவிதமான தரங்களில் தயாரிக்கப்படுகிறது.”

”அப்படியா?”

”ஆமாம். உலகிலேயே ஒரு பொருளின் தரத்தைப் பற்றி அதிகம் அக்கறைப்படுகிறவர்கள் ஐரோப்பியர்கள்.”

”அப்படியா? ஜப்பானியர்களில்லையா?”

”இல்லை. ஐரோப்பியர்களுக்குத்தான் இதில் முதலிடம். விலையைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். தரம் சற்றுக் குறைந்தாலும் சண்டைக்கு வருவார்கள்.

அல்லது அந்தப் பொருளருகே வரவே மாட்டார்கள்.”

”ஓ! அப்புறம்?”

”அமெரிக்கர்கள், கனடாக்காரர்களை அடுத்துச் சொல்லலாம்.”

”அப்புறம்?”

”தென்னாப்பிரிக்கர்கள். பிறகு ஆசிய நாட்டினர் என்று பிரிக்கலாம். இது பற்றி எனக்குப் புள்ளி விவரமாகத் தெரியாது. பத்திரிகையாளர் நீங்கள். உங்களிடம் தவறாகத் தகவல் தர, அதை நீங்கள் எழுதிவிட தவறான கருத்தைப் பரப்பிய குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன். நான் அறிந்ததை, கேள்விப்பட்டதையே உங்களிடம் சொல்கிறேன்.”

”சமூக உணர்வு உங்களுக்கு நிறைய.”

”இந்தப் பட்டியலில் சொல்ல வருத்தமாக இருக்கிறது. ஏழாவதாக வருபவர்கள் இந்தியர்கள். இந்திய இறக்குமதியாளர்கள் சீனத் தயாரிப்பாளர்களிடம் கேட்கும்போதே இப்படித்தான் கேட்பார்களாம். நல்ல, நாள்பட உழைக்கணும் என்பதில்லை. ஆனால் விலை எவ்வளவு குறைவாகத் தரமுடியுமோ தாருங்கள்

என்பார்களாம். சீனப் பொருள்கள் எல்லாமே தரக் குறைவானவை அல்ல. நம்மவர்கள் அப்படிக் கேட்பதால் வேண்டுமென்றே தரம் குறைக்கப்படுகிறது.”

”ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சீன நிறுவனம் பூகோள எல்லைகளுக்கு ஏற்பவும் அங்கு வாழும் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும் தரத்தை உயர்த்துகிறது,

இறக்குகிறது என்பது.”

”உண்மை. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். இந்தியாவில் சீன பாட்டரிகள் விற்கிறார்கள் அல்லவா? இதன் விலை மூன்று ரூபாய்தான். ஓரிரு மணிகளோடு ஓய்ந்துவிடும். ஏன் அந்த அளவிற்குக் கூட தாங்காது. ஆனால் இதே நிறுவனத்தின் பாட்டரியை ஐரோப்பாவில் வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள்.

சூப்பராக உழைக்கும். இந்தியாவில் அந்த நேரத்துக் கோணத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.”

”அது சரி, என்னதான் தரத்தைக் குறைந்தாலும் எப்படி இவ்வளவு மலிவாகத் தரமுடிகிறது. சீனாவிலிருந்து ஒரு பொருள் நெடுந்தூரம் பயணப்பட்டு, பல கைகள் மாறி அதன்பிறகும் எப்படி இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறது?”

”சீனாவில் உற்பத்திச் செலவு குறைவு. மூலப் பொருள் மலிவாகக் கிடைக்கிறது. லேபர் படு சீப். அரசு தொழில் வளர எல்லா விதத்திலும் உதவுகிறது. பொருளை நகர்த்தும் முறையை வெகு சுலபமாக்கிவிட்டார்கள். கடுமையான இலாபம் வைப்பதில்லை.”

”நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் பென்சில், பேனாவெல்லாம்கூட வெறும் ஒரு ரூபாய்க்குத் தருகிறார்கள். எப்படித்தான் சாத்தியம் என்றே புரியவில்லை.”

”நான் சொன்னதுதான். பாட்டரி போன்ற பொருளை விடுங்கள். சீனப் பூட்டுக்களை எடுத்துக் கொள்ளுங்கள். விலை மலிவு நன்கு உழைக்கிறதே?”

”நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் சார். சீனப் பூட்டுகள் தண்டம். போட்டோ ஆல்பம் என்று தருகிறார்கள். படத்தை உள்ளே போடும்போதே கிழிகிறது. இப்படி என்னால் நிறையச் சொல்ல முடியும்.”

”பர்னீச்சர் இங்கு படு சீப். ஆனால் நன்கு உழைக்கிறது. இந்தியாவிலிருந்து வியாபாரிகள் மட்டுமல்ல, வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்கிற சில தனியாரும் அலுவலகம் ஆரம்பிக்கிற சிலரும் இங்கு வந்து தேர்வு செய்து கப்பலில் போட்டுவிட்டு ஊரையும் சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். சீனாவும் பார்த்த மாதிரி ஆயிற்று. சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆயிற்று.”

”இது நல்லா இருக்கே.”

”எது சார்?”

”உங்கள் வார்த்தை விளையாட்டும் நம்மவர்களின் அரிய யோசனையும். சீன பர்னீச்சர்கள் நன்கு உழைக்கின்றன என்பதை நான் ஏற்க மாட்டேன். நான் ஒரு சோபாவை வாங்கினேன். அக்கு அக்காகத் தனித்தனியாக வருகிறது. உறைகள் சர்வ சாதாரணமாகக் கிழிகிறது.”

”பார்த்து வாங்க வேண்டும். தேர்வு செய்வதில் உள்ள தவறு இது.”

”சீனாவை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்கள்.”

”அப்படியில்லை லேனா சார். சீனாவைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. நானும் சீனாவுக்குள் நுழையும்போதே உங்களைப் போன்றே முடிவு செய்யப்பட்ட சில கருத்துகளோடுதான் வந்தேன். நாள் ஆக ஆக அவற்றை மெல்ல மாற்றிக் கொண்டு வருகின்றேன். அவற்றை உங்களுக்கும் சொன்னேன். மற்றபடி சரியான உணர்வுகளோடு தான் இருக்கிறேன்.”

செந்தில் குமாரின் சமாதானமான பதில் சற்று வித்தியாசமான தொனியோடு வந்தபோது நான் சற்று குற்றம் சாட்டும் தொனியில் செந்தில்குமாரிடம் பேசிவிட்டேனோ என்று என்னை எண்ண வைத்தது.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Post

One Response to “2008/06/13 Lenavin Payna Katturai”

  1. Vijay

    Shanghai, China’s greatest city

Leave a Reply