Monday 9 June 2008

2008/06/10 PIL against Dasavadharam moves to SC

13… வெள்ளிக்கிழமை! 
தசாவதாரத்தை தாக்குமா, தூக்குமா?

13… இந்த எண்ணைக் கண்டாலே அலறுவார்கள் மேற்கத்திய நாடுகளில். இந்தத் தேதியில் நல்ல காரியம் எதையும் செய்யமாட்டார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை வரும் 13ஆம் தேதி என்றால் இன்னும் அதிகமாகவே பயந்து நடுங்குவார்கள்.

கமலின்  திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி வெளியாகிறது. 13, வெள்ளிக்கிழமை செண்டிமெண்ட் தசாவதாரத்தையும் தாக்குமா அல்லது தூக்குமா என்பது ஒரு வாரம் கழித்து தெரியும்.

ஆனால், ஏற்கனவே பலத் தடைகளைத் தாண்டி மேற்சொன்ன தேதியில் வெளியாக உள்ள தசாவதாரம் திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் ஓய்வெடுக்கப் போகவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கள் மனுக்களை தள்ளுபடி வாங்கியவர்கள் இப்போது உச்சநீதிமன்றத்திற்கு படையெடுத்திருக்கிறார்கள்.

இந்துக்களின் மனதை காயப்படுத்துகிறது என்ற அதே காரணத்தை தூக்கிக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் நியாயம் கேட்கவும், படம் வெளியாவதை தடுத்து நிறுத்தவும் சென்றிருக்கிறார்கள்.

தசாவதாரம் திரைப்படத்திற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் எங்களை கேட்காமல் முடிவுக்கு வரக்கூடாது என்று முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக தயாரிப்பாளர் தரப்பு மனு போட்டுவைத்துவிட்டு, வெளியிடும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகும் தசாவதாரம் ஆயிரம் பிரிண்டுகள் வரை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் (புறநகர் தவிர்த்து) மட்டும் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அதாவது ஒரேசமயத்தில் 80 காட்சிகளுக்கும் மேலாக தசாவதாரம் அவதாரம் எடுக்கப்போகிறது.

நாத்திகரான கமலின் திரைப்படம் 13 வெள்ளிக்கிழமையில் வருவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அவர் நாத்திகர் என்பதுதான் இத்திரைப்படத்தின் எதிர்ப்புகளுக்கும் மறைமுக காரணமோ என்னவோ.

நாத்திகர் என்றாலும் கமல் ஒரு வெற்றிகரமான திரை நாயகன். வாழ்க்கையில் எதை எடுத்து திரையில் காட்டவேண்டும், எதைக் காட்டக்கூடாது என்று அறிந்தவர்.

அறியாமையிலும் புரியாமையிலும் சிக்கித்தவிக்கும் மக்கள் சிலருக்காக தோல்வியை நோக்கி அவர் நிச்சயம் பயணிக்கமாட்டார்.

Related Post

Leave a Reply