Thursday 5 June 2008

2008/06/06 Lenavin Payna Katturai

shangai.jpgசீனம் சென்று வந்தேன்

சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

ஷாங்காய் ரிச்சினா லெதர் நிறுவனத்தில் மேலும் ஒரு தமிழர் வேலை செய்கிறார் என்று கேள்விப்பட்டதுமே அவரையும் பார்க்க விரும்பியதில் ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது.

நிறையப் படிக்கிற பழக்கமுள்ள நல்ல வாசகராக அவர் இருந்தார். Finishing என்று சொல்லப்படுகிற பூர்த்திப் பிரிவில் இவர் இருந்தார்.

பூர்த்திப் பிரிவு என்பதால் சுத்தம் நன்றாக இருந்தது.

எங்கள் அறிமுகம் மிகுந்த மகிழ்வைத் தருவதாக இருந்தது.

”தொழிற்துறையில் கொடிகட்டிப் பறக்கும் சீனாவில் இரு இந்தியர்களை நல்ல உயர்நிலையில் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது” என்றேன்.

”இந்தியர்கள் எவரும் இங்கு தொழிலாளர்கள் என்ற நிலையில் இல்லாமல் நல்ல தொழில்நுட்ப வல்லுநர்களாகவே பணிபுரிகிறார்கள்.”

”கேட்கவே ஆறுதலாக இருக்கிறது.”

ஒவ்வொரு இயந்திரத்திற்கு அருகேயும் நின்று அது செயல்படும் விதம் பற்றி நன்கு விளக்கினார் பாலா. சில புரிந்தன. சில, சுத்தம்! இது அவர் குறையல்ல. எனக்கு உள்ள தொழில்நுட்ப அறிவு அவ்வளவுதான்.

தமக்கும் சீனர்களுடன் பணிபுரிவதில் எவ்விதச் சிரமமும் இல்லை என்றும் அவர்களிடம் வேலை வாங்குவதில் ஒரு கஷ்டமும் இல்லை என்றும் பாலா சொன்னார். நம்மவர்கள் நமக்குள் அரசியல் நடத்தி, ஒத்துழையாமை இயக்கத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது ஒரு நேசமல்லாத நாடாகக் கருதும் இந்தியாவைச் சேர்ந்தவரைத் தலைமைப் பொறுப்புகளில் ஏற்றுக்கொண்டு எவ்விதச் சிரமமும் கொடுக்காமல் பணிபுரிந்து வருவது பாராட்டத்தக்க விஷயம்தான். இது தொழிலுக்கு அவர்கள் தருகிற மரியாதை.

மறுநாள் காலை சீனச் செய்தித்தாள்களைப் புரட்டினேன். நாட்டில் சில அநியாயங்கள், அக்கிரமங்கள் கூடவா நடக்கவில்லை. ஒரு கொலை; கற்பழிப்புக் கூடவா இல்லை.

சீனச் செய்தித்தாள்கள் ஆரோக்கியமான செய்திகளையே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்மறைச் செய்திகளை சிறு இடம் கொடுத்து வெளியிடும் சீனப் பத்திரிகை தர்மம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. செய்தித் தாள்களைப் புரட்டிக் கொண்டே செந்தில்குமாரிடம் கேட்டேன். ”சீனாவில் குற்றங்கள் நடப்பதில்லையா?”

”நடக்கின்றன. ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்?”

”ஏன் அப்படி?”

”இங்கே கட்டுப்பாடுகள் அதிகம். ஓவராப் போனா சுளுக்கு எடுத்துடுவாங்க.”

செந்தில்குமார் சிரிக்காமல்தான் சொன்னார். ஆனால் இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

”கம்யூனிஸ்ட் நாடுல்ல? பத்திரிகைச் சுதந்திரம் குறைவு. கட்டுப்பாடுகள் அதிகம். இது நல்லதுன்னு தோணுது லேனா சார். நம்ம ஊருக்கு வந்தாப் பத்திரிகைகளைப் புரட்டவே ஒரே யோசனையா இருக்கு. ஒரே எதிர்மறைச் செய்திகள். நாடே ரொம்பக் கெட்டுப் போச்சேங்குற உணர்வுதான் அதிகம் ஏற்படுது. அதுமட்டுமல்ல, அன்றைய மூடே கெட்டுப் போகுது.”

”இதற்குப் பத்திரிகைகளை மட்டும் குறைசொல்ல முடியலை செந்தில் சார். படிக்கிறவங்க இரசனையும் ரொம்ப மாறிப்போச்சு!”

”உண்மைதான் இல்லே?”

”வந்து இறங்கினதுமே சொல்ல நினைச்சேன். சீனாவுல குற்றங்களே நடப்பதில்லையான்னு நீங்க கேட்டீங்களே, அதனால ஒரு விஷயம், ஞாபகம் வந்துடுச்சு.”

”சொல்லுங்க.”

”பணத்தை, பர்சை கவனமா வச்சுக்குங்க.”

“ஏன்?”

”சீனாவுல பிக்பாக்கெட்டுங்க அதிகம்.”

”அப்படி போடுங்க. ஆனா உழைப்பை நம்புற ஒரு நாட்டுல இப்படி ஏன் பிக்பாக்கெடடுகள் பெருகிப் போகணும்?.”

”நல்ல கேள்விதான்.”

”இன்னொரு கேள்வி செந்தில் சார்.”

”ராஜகோபால் சார் மாலை 5.00க்கெல்லாம் இரவுச் சாப்பாட்டை முடிச்சிடுவேன்னார். சீனாவுல பெரும்பாலும் இப்படித்தான்னும் சொன்னார். அப்படீன்னா மதியச் சாப்பாடு எப்போ? காலை டிபன் எப்போ?.”

”பெரும்பாலும் 7.30; 11.30; 7.00 இவைதான் சீனர்களின் உணவு நேரங்கள்.”

”எனக்கு இது நல்ல பழக்கமாகப்படுகிறது. ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் இரவில் படு தாமதமாகப் சாப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, இரவில் அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். நன்கு வளர்ந்த, மருத்துவ அறிவு நிறைய உள்ள இந்த நாடுகள் உணவுப் பழக்கத்தில் முறையற்ற பழக்கத்தைப் பின்பற்றுவது வேடிக்கையாக இருக்கிறது.”

”உண்மைதான்.”

செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டே வந்தபோது, ஒரு சீன முதலாளி சுட்டுக் கொல்லப்பட்டதை ஒரு மூலையில் வெளியிட்டிருந்தார்கள். நம் ஊர்ச் செய்தித்தாள்களாக இருந்திருந்தால்? உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

அன்று எங்கும் வெளியே போகவில்லை. நேரம் நிறைய இருந்ததால் செந்தில்குமாரிடம் பேசி சீனத்தைப் பற்றிய பல விஷயங்களைக் கிளறினேன்.

வடஇந்தியர்கள் சீனாவில் நல்ல நிலையில் இருக்கிறார்களாம். குறிப்பாக மார்வாரிகளின் கை நன்கு ஓங்கியிருக்கிறதாம். டெல்லியில் சைனா ஈஸ்டர்ன் விமானத்தில் ஏறியபோதே இதை நான் நன்கு உணர்ந்தேன்.

நான் பயணித்த விமானத்தில் சீனர்களை விட, அந்நிய நாட்டவரைவிட வட இந்தியர்களே அதிகம் பேர் இருந்தனர். பல வடஇந்தியர்கள் குடும்பம் குடும்பமாக உடன் பயணம் செய்ததைப் பார்த்தேன்.

”நம்மவர்கள் ஏன் குடும்பத்துடனே வசிக்கவில்லை? ஏன் தனியாகவே வாழ்கிறார்கள்?.”

”இங்கு கல்விக் கட்டணங்கள் மிக அதிகம். நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. மேலும் ஆங்கிலப் பள்ளிகள் மிகக் குறைவு. சீனம்தான் படிக்க வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காகத்தான் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டியிருக்கிறது.”

”மிக அதிகம் என்றால்?.”

”எல்.கே.ஜி.யில் சேர்க்க 15,000 ஆரெம்பி (சீனப் பணம்) தேவை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.”

”ஒர் ஆரம்பிக்கு எவ்வளவு இந்திய ரூபாய்?.”

”6.15. அப்படியென்றால் 92,250 ரூபாய் ஆகிறது. மிக அதிகம்தான். இங்கு மாதம் 6000 டாலர் வருமானம் கிடைத்தால்தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும்.”

”இங்கிருந்து இந்தியாவுக்குப் பேசுவது மலைப்பான விஷயமாக இருக்கிறது செந்தில் சார்.”

”உண்மைதான். நம் ஊர் மாதிரி வராது. திரும்பிய இடங்களிலெல்லாம் ஐ.எஸ்.டி. பூத்துகள். இங்கே அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. வெளிநாட்டிற்குத் தொலைபேசியில் பேசுவது என்பது இங்கு காஸ்ட்லியான சமாசாரம். ஆனா நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க. முத்துவைரவன் போன்ல பேசிக்குங்க. நான் சிம் ஒண்ணு தர்றேன். உங்க போன்ல போட்டுப் பேசிங்குங்க.”

”குடும்பம், தொழில் சம்பந்தமா அப்பப்பப் பேச வேண்டியிருக்கு. தவிர்க்க முடியலை.”

”அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதீங்க. நாங்க அப்புறம் எதுக்கு இருக்கோம்?.”

”உலக நாடுகளில் காணாத ஓர் அதிசயமான விஷயத்தை இங்கே நான் பார்க்கிறேன் செந்தில் சார்?.”

”என்னது?.”

”சிகரெட் மட்டும் விற்பதற்கென்று பெரிய பெரிய கடைகள் இருப்பதைத்தான் சொல்கிறேன்.”

”கரெக்ட். சீனர்கள் சிகரெட் பிரியர்கள். உலகின் சிகரெட் பிரியர்களில் சீனர்களுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. சிகரெட் பிடிக்காதவர்கள் இங்கு குறைவு. அரசுக்கு இதுதான் கவலை. நம்மவர்கள் சிகரெட்டைக் குடித்து உடம்பைப் பாழடித்துக் கொள்கிறார்களே என்று.”

”ஆனாலும் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருப்பது அரசின் முரண்பாடான கொள்கையாக இருக்கிறது. அது சரி, வடஇந்தியர்களைப் போல் நம்மவர்கள் ஏன் ஒற்றுமையாகவோ, ஏன் ஓர் அமைப்பாகவோ செயல்படவில்லை?.”

”ஷாங்காயில் என் கணிப்பில் சுமார் 1000 தமிழர்கள் இருப்பார்கள். ஆனால் ஷாங்காய் ஒரு மிகப் பெரிய நகரமாக இருப்பதால் அங்கங்கே பரவிக் கிடக்கிறார்கள். ஓரிடமாக வாழ்ந்தால் நம்மவர்களின் இயல்பையும் மீறி ஒற்றுமையாக ஓர் அமைப்பாகச் செயல்படலாம்.”

”ஷாங்காய் சங்கமம் அமைப்பை வலுப்படுத்துங்கள்.”

”நம்ம ராஜகோபால் இதற்காகப் பெரிய அளவில் முயற்சிகளை எடுத்தக் கொண்டிருக்கிறார். பண்டிகைகளின் போது 200 பேர்கள் வரை ஒன்று கூடுகிறோம். ஆளுக்கு 80 ஆரெம்பி போட்டு, செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். இங்குள்ள தமிழர்களும் சீனர்களைப் போல் உழைக்கிறார்கள். வேலை வேலை, கடமை கடமை என்று எல்லோரும் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த நிலை.”

”ராஜகோபாலிடமும் நிறையச் சொல்லியிருக்கிறேன். எப்போதோ வரும் விருந்தினரை உபசரிப்பதற்காக ஒன்று கூடுவது என்று இல்லாமல் மாதம் ஒரு சந்திப்பு எனபதுபோல் அமைத்துக் கொண்டு ஷாங்காய் சங்கமம் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இது ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவிகளைப் பரிமாறிக் கொள்ள உதவியாக இருக்கும்.”

”ஷாங்காய் தமிழர்களின் அமைப்பு வலுவான அமைப்பாக உருவாகும்போது அதற்கு உங்களுடைய வார்த்தைகளும் நீங்கள் தந்த உற்சாகமும் நிச்சயம் ஒரு காரணமாக இருக்கும். உங்களுடனான சந்திப்பிற்குப் பிறகு ராஜகோபாலும் மிகுந்த ஊக்கம் பெற்றிருக்கிறார்.”

”மகிழ்ச்சி. நம்மவர்கள் இங்கு நன்கு சம்பாதிக்கிறார்களா? சேமிக்க முடிகிறதா?.”
இதற்கு செந்தில் ஆச்சரியமான பதில் ஒன்றைச் சொன்னார்.

”சீனாவில் பணம் சேமிப்பது என்பது அர்த்தமற்றது.”

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Post

Leave a Reply