Friday 6 June 2008
எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
அரசு ஊழியர்களுக்கான நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கிய பெருமை அ.தி.மு.கவுக்கு உண்டு. மாதம் ரூ.10 செலுத்தி ஆகும் மருத்துவச் செலவில் 75 சதவிகிதம் அல்லது இலட்ச ரூபாய் இந்த இரண்டினுள் எது குறைவோ அத்தொகையை அரசு ஊழியர் பெறலாம்.
இத்திட்டத்தை வளப்படுத்தி மாதம் 20 ரூபாய் செலுத்தி ஆகும் மருத்துவச் செலவில் இரண்டு இலட்சம் வரை பெறலாம் என தி.மு.க. ஆட்சி புதியதொரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறது.
இத்திட்டம் ஸ்டார் இன்ஷுரன்ஸ் எனப்படும் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதையும் வேறு சில அம்சங்களையும் அ.தி.மு.க. எதிர்க்கிறது.
ஸ்டார் நிறுவனம் பன்னாட்டு நிறுவனம்தான். ஆனால் அந்நியரால் நடத்தப்படவில்லை. கீழக்கரைத் தமிழர் ஒருவரால் நடத்தப்படுகிறது. இவ்வுண்மையை ஜெயலலிதா எப்படி அறியாமல் அறிக்கைவிட்டார் என்பது புரியாத புதிர்.
முன்பு அரசு ஊழியர்கள் என்ற அளவில் இருந்த இந்த வட்டம் இனி அரசு சார்ந்த துறை ஊழியர்களுக்கும் பலனளிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டிருப்பதை ஜெயலலிதா வரவேற்றிருக்க வேண்டும். செய்யத் தவறவிட்டார்.
அரசு ஊழியர்கள் செலுத்த வேண்டிய தவணையை கருவூலக் கணக்குத் துறை பார்த்துக் கொள்ளும். இது கணக்குத் துறைக்குக் கூடுதல் சுமை என்கிறார் ஜெயலலிதா. சக ஊழியர்களின் நலன் காக்கும் ஊழியச் சுமையை கருவூலத்துறை மகிழ்ச்சியோடு ஏற்கும் என்றே தோன்றுகிறது.
12 மாவட்டங்களில் இந்நிறுவனத்திற்குக் கிளைகள் இல்லை. இந்நிலையில் அரசு ஊழியர் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும் என்று வினவுகிறார். நல்ல கேள்வி.
அரசு நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையில் இருக்கும்போது ஏன் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார். அரசு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் மத்திய அரசாலேயே ஊக்குவிக்கப்படும் இந்நிலையிலா இப்படி ஒரு கேள்வி?
காப்பீடு, இழப்புத் தொகை பெறுதல் குறித்த புகார் தொடர்பான குழுவில் அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவத்தை ஜெயலலிதா வலியுறுத்துவது நியாயமான ஒன்று.
அரசு ஊழியர் சங்கங்களைக் கலந்து இத்திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும் என்பதும் தி.மு.க.வின் நிர்வாகத் தலையில் மீது குட்டப்பட்ட ஒரு ‘நங்’ குட்டு.
சில குறைகள் ஒரு திட்டம் அறிமுகமாகும்போது கலந்து வருவது இயல்பு. அதற்காக அடிப்படையையே அசைத்துப் பார்ப்பது நோய் கண்ட இலைகளுக்காக அடிமரத்தையே வெட்டுவதைப் போன்றது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் நியாயம் இருக்க வேண்டும். எது அறிவிக்கப்பட்டாலும் எதிர்ப்பேன் என்கிற கொள்கை ஓர் ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?









































