Friday 6 June 2008
ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
எல்லாப் புகழுரைகளும் எல்லா அன்புரைகளும் நமக்கு நன்மை செய்பவை என்கிற முடிவிற்குத் தயவு செய்து வந்துவிடாதீர்கள்.
இவற்றைப் பாகுபாடு செய்து பிரித்து அறிய கற்றுக்கொள்ளுங்கள்.
காரணம், நம்மைச் சுற்றி ‘அடுத்துக் கெடுப்பவர்கள்’ உண்டு. இப்படிச் சொன்னதை வைத்து எல்லோருடைய அன்பும் ஐயப்பாட்டிற்குரியது என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம்.
புகுந்த வீட்டில் நமக்கு எதிராக இழைக்கப்படுகிற அநீதிகளைத் தாயிடமும் தந்தையிடமும் சொல்கிறாள் ஒரு மகள்.
”ஆமாமா! நீ செய்யுறதெல்லாம் சரி. உன் மாமியார் வீட்ல நடக்குறதெல்லாம் அநியாயம்” என்று ஒரு தாய் நியாயம் (?) பேசினால் இத்தாய் ஓர் ஆபத்தான தாய்தான்.
”இதெல்லாம் சகஜம்மா. உன் பக்கம் உள்ள தவறுகள் என்னென்று சொல்றேன் கேளு!” என்று ஆரம்பிக்கிற தந்தை இருக்கிறாரே, இவர், ஒரு மகளுக்கு விரோதி போலத்தான் தோன்றுவார். ‘இனி அப்பாகிட்ட நான் எதுவுமே சொல்லப் போறதில்லை. ஒரு பெண்ணின் கஷ்டம் இன்னொரு பெண்ணுக்குத்தான் நல்லாப் (!)
புரியும்’ என்கிற முடிவிற்கு அந்த மகள் வருகிறாள் என்றால், இதை விடக் கோளாறான முடிவு வேறு இருக்க முடியாது.
படர்வதற்குக் கொம்பு தேடும் கொடி, ஓர் உளுத்துப்போன கட்டையைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமமான விஷயம் இது.
சரி, எல்லா அன்பையும் சந்தேகிக்கக் கற்றுத் தருகிறீர்களா நீங்கள் என்று என்னைக் கேட்கிறீர்கள். அப்படித்தானே?
இல்லை என்கிறேன். நம் பக்கத்துக் குறைகளை எடுத்துச் சொல்லாத அன்பு, நியாயமற்ற அன்பு.
மேடையில் பேசிவிட்டு இறங்கியதும் நம் பேச்சைப் பாராட்டுகிறவர்களை நமக்குப் பிடிக்கிறது. நல்லாப் பேசினீங்க. ஆனா, ரொம்ப நீளம் என்ற சொல்பவர் நமக்கு எதிரியாகப்படுகிறார். ஆனால் இவரே நமக்கு நன்மை செய்தவர்.
இனி இப்படிக்கொள்ளலாம். நாம் விரும்பும் படியாகவே பேசுகிறவர்கள் அந்த நேரத்து நன்மையாளர்கள். நாம் விரும்பாதவற்றையும் சுட்டிக் காட்டுகிறவர்கள் நம் நிரந்தர நன்மையாளர்கள்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?









































