Friday 6 June 2008

2008/06/06 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

டி.ஜாபர்ஹுசேன், சென்னை.

உங்கள் ஊர்ப் பெருமை என்று எதைச் சொல்வீர்கள்?

பிறந்த ஊரைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? மதுரை மீனாட்சி கோயில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதி மொட்டைக் கோபுரமாய் நின்று போனது. இதைக்கட்டி முடிக்க முயன்றவர்களின் குடும்பத்திற்கெல்லாம் கடுமையான சோதனை ஏற்பட்டது. எனவே, பலரும் இதில் கை வைக்கத் தயங்கினர். அப்போது எங்கள் (தேவகோட்டை) ஊரைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பம்தான் பெரும் பொருட்செலவைப் பொருட்படுத்தாமலும், வரப்போகும் சோதனைகளைப் பற்றி கவலை கொள்ளாமலும் மொட்டைக் கோபுரத்தை முழுக் கோபுரமாய் ஆக்கி முடிந்தது. இன்றும் இக்குடும்பத்தின் ஒரு பிரிவினர் கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகிறார்கள்.


அ.நாராயணன், ஆம்பூர்.

‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணுபவர்கள் யார்?

காலையில் நம் தெருவிற்கு அடுத்த தெருவில் வாக்கிங் போகிறார்களே அவர்களும், ஆங்காங்கே உடற்பயிற்சிக் கூடங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே அவர்களும்தான் இப்படி நினைக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் இப்படி நினைக்கவே யோசிக்கிறார்கள்.


எஸ்.சிதம்பரம், மன்னார்குடி.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிலை?

பா.ம.க.விற்குப் புலிவால் பிடித்த நிலை, காங்கிரசுக்குக் கறிவேப்பிலை நிலை; கம்யூனிஸ்டுகளுக்குச் சம்பிரதாய நிலை; உதிரிகளுக்குச் சங்கோஜ நிலை என்று இப்படியாகப் பல நிலைகள்.


வி.சீனிவாசன், பன்ருட்டி.

சேமிப்பு என்பது இந்தக் காலத்தில் முடியவில்லையே?

தேனீக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்! தேனீக்கள் சில சமயம் ஒரு சொட்டு தேனைச் சேகரிக்கப் பதினைந்து பதினாறு மைல்கள் கூடப் போகுமாம். சேமிப்பு என்றால் நாமும் பறக்கத்தான் வேண்டும். மூலையிலேயே முடங்கிக் கிடந்தால்?


எம்.செழியன், நாகப்பட்டினம்.

தியாகராஜ பாகவதர் மனைவிக்கு இலட்ச ரூபாய் கொடுத்திருப்பதை வரவேற்கலாம் அல்லவா?

நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது வறுமை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது தேடப்பட்டதும் ஒரு தற்காலிகத் தீர்வே. இன்றும் அதுதான் நடந்திருக்கிறது. இது தீர்வாகாது. பசித்தவனுக்கு மீன் மட்டும் தரலாகாது. தூண்டிலும் தேவை. தியாகராஜ பாகவதரின் வாரிசு ஒருவருக்கு அரசு வேலை தரலாம். அல்லது ஒரு பெரிய தொகையை நிதியாகப் போட்டு அதன் வட்டியை மாதாந்திரச் செலவினமாகத் தரலாம். பாகவதரின் மனைவிக்கு ஆகும் மருத்துவச் செலவை அரசே ஏற்கலாம். என் வருத்தமெல்லாம் இவ்வளவையும் வேடிக்கை பார்க்கும் நடிகர் சங்கம் பாகவதர் குடும்பத்திற்கு என்ன செய்து கிழித்தது என்பதுதான்!


ஏ.சொக்கலிங்கம், ஊரப்பாக்கம்.

கிரீன்விச் நேரத்தைக் கணக்கிடுவது எப்படி?

உங்களுக்கு மட்டும் ஒரு பார்முலா சொல்லித் தருகிறேன். யாருக்கும் அதைச் சொல்லாதீர்கள்! நேரம் காட்டும் கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொண்டு இந்தியாவில் அதைக் தலைகீழாகப் பிடித்தால், இப்போது உங்களுக்கு கிரீன்விச் நேரம் கிடைக்கும்.


ஆர்.கண்ணன், சென்னை.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படியிருக்கும்?

குஜராத், இமாசலப்பிரதேசத் தேர்தல்களையடுத்து இந்தக் காற்றாலை இப்போது பாரதிய ஜனதா பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாளிருக்கிறது. கடைசிக் காற்றை வைத்துத்தான் ஒரு காற்றாலையின் போக்கைச் சொல்ல முடியும்!


எஸ்.ஜெயக்குமார், விழுப்புரம்.

மருத்துவர் ராமதாசின் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

மருத்துவர் ராமதாசின் சு(ட்)டல்களில் ஒருவித நியாயம் இருப்பதைக் காண்கிறேன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இல்லாமல் இவர் செய்யும் விமர்சனங்களில் தாக்கம் இருக்கிறது. சமூக அக்கறையும் புதைந்து கிடக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்றால் ஜால்ரா போட வேண்டும் என்கிற அரசியல் நியதியை மாற்றி, குறைகளையும் சுட்டிக் காட்டி நல்லாட்சிக்கு வழி வகுக்கும் அக்கறை எழுகிறது. ராமதாசிடம் உள்ள ஒரே குறை, முதல்வர் உங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும்போது, ஏன் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டக்கூடாது. நேரடியாக ஏன் மக்கள் மன்றத்தின் முன் கேள்வி எழுப்ப வேண்டும். உங்கள் நோக்கம் விளம்பரத் தன்மை உடையதா என்ன?


டி.தணிகாசலம், சென்னை-17.

இப்போது யார் யாரோவெல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்களே?

யார் யாரோவெல்லாம் இல்லை. வலை வீசத் தெரிந்தவர்கள் மட்டுமே இப்போது கட்சி ஆரம்பிக்கிறார்கள்.


பி.சண்முகராஜன், திருத்தணி.

அ.தி.மு.க. மாணவர் அணியினர் தமிழகமெங்கும் மாணவர்களுக்கு இலவச ஆங்கில அகராதிகள் கொடுத்து வருவது பற்றி?

ஆட்சியில் இருந்தபோது பள்ளிக்குப் போக இலவச சைக்கிள்கள்! ஆட்சியில் இல்லாத போது போன இடத்தில் சந்தேகம் வராமலிருக்க இலவச அகராதிகள்! மாணவர்களை இவர்கள் வளைக்கிற சென்டிமென்ட்டே சென்டிமென்ட்!


எம்.மோகன், அயனாவரம்.

வெளிநாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து பெண்களை விற்கிறார்களாமே?

பண்டைத் தமிழனோ, பெண்களுக்குப் பசலை நோய் வருமளவிற்கு வெளியில் போய் பிழைக்கலானான். இன்றையத் தமிழனோ, பசை வருகிற அளவிற்கு அப்பெண்களையே வெளியில் அனுப்ப ஆரம்பித்துள்ளான். நாம் தலைகவிழ்ந்து கொள்கிற தலையாயப் பிரச்னை இது!


எஸ்.நரேந்திரன், ஆரணி.

இப்போது எந்த வியாபாரம் படு ஜோர்?

கல்வி வியாபாரம். சில கல்லூரிகளின் இன்ஜீனியரிங் இடம் இரண்டு இலட்சம் முதல் ஏழு இலட்சம். பிப்ரவரி முதலே முன்பணம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். அரசு நிர்ணயிக்கிற கல்விக் கட்டணமெல்லாம் காற்றில் பறக்கிறது. தன் பிள்ளை இலட்ச இலட்சமாகச் சம்பாதித்தால் போகிறது. எனவே இது செலவல்ல மூலதனம் தான் என்று சக்தியுள்ளவர்கள் அள்ளிக் கொண்டு போய்க் கோணியில் கொட்டுகிறபோது கல்லூரித் தாளாளர்கள் கையைக் கட்டிக் கொண்டு, ஊகும் இதைத் தொடமாட்டேன் என்றா சொல்வார்கள்? எல்லாம் நம் (பணக்காரப்) பெற்றோர் செய்யும் தவறு!


நே.யயாதி, பட்டுக்கோட்டை.

சென்னைப் போக்குவரத்தின் கொடுமையை ஒரு நாள் சந்தித்தேன். (எட்டு கிலோ மீட்டரைக் கடக்க ஒன்றே கால் மணி நேரம்) இனி சென்னைப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். என் முடிவு பற்றி உங்கள் கருத்து?

சென்னையில் உங்களுக்கு ஆக வேண்டிய வேலைகள் நிறைய வரும். உங்கள் வைராக்கியம் பல பெண்களின் பிரசவ வைராக்கியம். (இனிமேல் பிள்ளையே பெற்றுக்க மாட்டேன்!) போன்றதுதான். வசதி படைத்தவர்களின் குமிப்பும், வாங்கும் சக்தியின் மிகையும், கடன் கொடுக்க முன் வரும் ஏராளமான அமைப்புகளும் வாகனங்களைப் பெருக்கிவிட்டன. நான் கூட சைக்கிள் வாங்குவதைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து வருகிறேன். உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியாச்சு. சேமிப்புமாச்சு! நேரமும் மிச்சம்!


ஆர்.தேவேந்திரன், கொளத்தூர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் காலை வாருகிறதே?

அவரவர் தங்களது சொந்தத் திறமையைச் சரிவர வெளிக்காட்டினாலே போதும். சீட்டுக்கட்டை அடுக்கி வைத்துத் தட்டி விட்டால் சாயுமே, அப்படிச் சாய்கிறார்கள். திறமையானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தன்னம்பிக்கையை இழந்து ஆடும்போது அணியின் தோல்விக்கே பங்களிக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் புறப்பட்டுப் போனதுமே சூப்பர் கிங்ஸ் ஆட்டமே காண ஆரம்பித்துவிட்டது.

இன்னமும் துளி நம்பிக்கை இருக்கிறது பார்ப்போமே!


எஸ்.குருமூர்த்தி, காஞ்சிபுரம்.

தமிழகத்தில் மின்நிலைமை மேம்பட்டிருக்கிறது என்று மின்துறை அமைச்சர் சாதிக்கிறாரே?

ஏற்காட்டிற்கு அண்மையில் சென்றிருந்தேன். பின்னர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். நிலைமைகளை விசாரித்தேன். இரவு முழுக்க மின்சாரம் இல்லாத நிலைமைகளைச் சந்தித்தேன். உள்ளூர் நண்பர்கள் உறவினர்களை விசாரித்தேன். மின்சாரமா? அது எப்ப வேணும்னாலும் போகும் எப்ப வேணும்னாலும் வரும் என்று இளக்காரமாகப் பேசுகிறார்கள். சட்டமன்றத்தில் உறுப்பினர் கேள்விகளுக்குப் பதில் சொல்வது எளிது. பாதுகாக்க சபாநாயகர் இருக்கிறார். மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்வது கடினம்!


ஜி.ராஜேந்திரன், மாதவரம்.

தினசரி ஒரு போராட்டம் நடத்தும் ஜெயலலிதா பற்றி?

கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரர்களுக்கு இவர் வேலை கொடுத்து வருகிறார். இவரைத் தப்பாய் நினைக்காதீர்கள்.


சி.ஜெகதீசன், சென்னை.

புதிய நீதிக் கட்சிக்கு சில நிர்பந்தங்களால் இதுவரை தொய்வு இருந்தது. இனி அது வீறு கொண்டு எழும் என்கிறாரே ஏ.சி.சண்முகம்?

அந்தக் கட்சிக்கு வந்த சிக்குன்குனியா இப்போது சீராகிவிட்டது என்கிறாரா? எப்படியோ அவர் சமுதாயத்தினருக்கு இவரால் புதிய நீதி பிறந்தால் சரி!


டி.துளசிராம், சென்னை-11.

நண்பர்கள் என்றால் அவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பாரி- கபிலர் மாதிரி - ஒரு ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி, ஒரு ஷெல்லி கீட்ஸ் மாதிரி, ஒரு ஹிட்லர் முசோலினி மாதிரி, ஒரு காரல் மார்க்கஸ் ஏங்கல்ஸ் மாதிரி, சொல்லிக் கொண்டே போகலாம். நாம் இவர்கள் மாதிரியா இருக்கிறோம்?


ஜே.பன்னீர், அம்பத்தூர்.

சென்னை ஆறுகளில் படகுகள் மூலம் கொசு ஒழிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளதே?

அன்றைய தி.மு.க. ஆட்சியில் கூவத்தில் படகு குழாம்கள் கட்டியது எவ்வளவு நல்லதாய்ப் போச்சு? தி.மு.க.வில் படகுச் சவாரி என்பது மக்களுக்காக இல்லை; கொசுக்களுக்காக என்பது தெரிய எவ்வளவு நாட்களாச்சு.


வி.சுரேஷ், அரக்கோணம்.

மிகக் காஸ்ட்லியான பயணம் என்று எதைச் சொன்னீர்கள்?

யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்க இலட்ச ரூபாய் கட்டணமாமே, இதைத்தான் சொல்வேன்! இதற்கு அடுத்தபடியாம் சென்னை ஆட்டோ ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை (நீங்கள் எவ்வளவு பெரிய இளிச்ச வாயர் என்பதைப் பொறுத்தது). அமெரிக்கா செல்ல குறைந்தபட்சக் கட்டணம் 43,000 ரூ. (சென்னை-சான்பதான் கிங்கே…) (போக, வர கி.மீட்டரில்) - இவற்றை 50,000 கூட தான் வருகிறது.

30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
Related Post

Leave a Reply