Thursday 29 May 2008
சீனம் சென்று வந்தேன்
பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
ஷாங்காயில் உள்ள ரிச்சினா லெதர்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேலாளர் ராஜகோபாலைக் குடைந்த நான், சீனத் தொழிலாளர்களிடம் உள்ள குறைகளையும் சற்று வெளிக் கொணர்ந்தேன்.
நம்மவர்களிடம் ஒரு தொழில் நுட்பம் சார்ந்த வேலையை ஒப்படைத்து ‘இதை முடித்துவிடுங்கள்’ சொன்னால் எப்படியும் முடித்துவிடுவார்கள். அதில் என்ன இடைஞ்சல்கள் வந்தாலும் அவற்றிற்கு அவர்களே தீர்வு கண்டுவிடுவார்கள். சீனத் தொழிலாளர்கள் அப்படி அல்லர். முட்டுச் சுவரில் முட்டி நின்றதைப்போல் நின்று, இதற்குமேல் எங்களுக்குத் தெரியவில்லை என்பார்களாம். இந்த விஷயத்தில் நம்மவர்களை வியக்கிறார் ராஜகோபால்.
சொன்னவற்றைச் சரியாகச் செய்பவர்கள் சீனர்கள். சொல்லாததையும் தீர்வு கண்டுபிடித்து முடிப்பவர்கள் இந்தியர்கள் என்கிறார் ராஜகோபால்.
அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தாதவர்கள் சீனர்கள். இது ஒரு வகையில் நன்மை என்றாலும் ஒரு வகையில் சரியல்ல என்கிறார் இவர்.
அடுத்த பிரிவில் யார் வந்தார்கள்; என்ன வேலை பார்த்தார்கள் என்று கேட்டால் ஒரு சீனரால் பதில் சொல்ல முடியாதாம். நான் கவனிக்கலை; பார்க்கலை என்பாராம். ஆதியோடந்தமாகச் சொல்வாராம் ஓர் இந்தியர்.
தொழிலாளர் மட்டத்தில் மட்டுமல்ல உயர்மட்டத்திலும் இதுதான் நடக்கிறதாம். தம் துறையில் சக போட்டியாளர் என்ன செய்கிறார்; எப்படி ஆர்டர் வாங்கினார்; எப்படி வேலையை முடிக்கிறார்; எவ்வளவு பேர்களை வைத்து முடித்தார்; எங்கு இடர்பட்டார்; எங்கு வென்றார்; என்ன நவீன உத்திகளைப் பின்பற்றினார்; என்ன இயந்திரங்களை வாங்கினார் என்பதையெல்லாம் ஓர் இந்திய முதலாளி, நிர்வாகி கவனித்துக் கொண்டே இருப்பாராம். இதற்கு ஏற்றபடி பின்பற்ற வேண்டியவற்றைப் பின்பற்றி, விலக்க வேண்டியதை விலக்கி, எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ, அவ்வளவு எச்சரிக்கையாக இருப்பாராம்.
அதாவது மற்ற போட்டியாளர்களைப் பார்த்து நிறையக் கற்றுக்கொள்வாராம். சீனர்கள் இப்படியில்லையாம். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் பாதையிலேயே கவனமாக இருப்பார்களாம்.
இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்வதும் இதில் குறை காண்பதும் அவரவர் வாழ்க்கைப் பார்வைகளைப் பொறுத்தது. எனவே உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.
ஷாங்காயில் வசித்தபடி வேலைக்கு வருகிறவர்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால் வேறு வேலைக்குப் போக ஆசைப்படமாட்டார்களாம்.
ஆனால், ஷாங்காய் அல்லாத பிற பகுதிகளிலிருந்து வேலை தேடி வருகிறவர்கள் தொடர்ந்து அதே வேலையில் நீடிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாதாம். உதாரணமாக, சம்பளம் வாங்கிக்கொண்டு ஊருக்குப் போனால் திரும்பவும் வேலைக்கு வருவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லையாம். இப்படித் திடீர்திடீர் என்று வேலையைவிட்டு நின்றுவிடுகிறவர்கள் ஷாங்காயில் அதிகமாம்.
வெளியூரில் பெண்டாட்டி ஓர் இடத்தில் வேலை செய்வாள். கணவன் வேறு ஓர் இடத்தில் வேலை செய்வான். பிள்ளைகள் அம்மாவழிப் பாட்டி வீட்டில், அப்பாவழிப்பாட்டி வீட்டில் வளரும்.
இப்படி வளரும் பிள்ளைகளைப் பராமரிக்க பாட்டிமார், தாத்தாமார்களுக்கு, கணவனும் மனைவியும் தனித்தனியே சமபங்குப் பணம் கொடுக்க வேண்டும். பேரன் பேத்திகளின் சாக்கில் தாத்தா பாட்டிமார்களுக்கும் வயிற்றிற்கும் வாழவும் பணம் கிடைத்துவிடும்.
சீனாவில் மூத்த தலைமுறையின் வளர்ப்பில் பிள்ளைகள் பொறுப்பானவர்களாக வளர்வது இல்லை என்கிறது ஓர் ஆய்வு. மனைவியும் கணவனும் மிகவும் கணக்குப் பார்த்துதான் செலவழிப்பார்களாம். ஆமாம். உன் பணம், என் பணம் என்கிற பாகுபாடு மிகக் கறாராக இருக்குமாம். பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தோ கணக்குப் பார்க்காமலோ செலவழிக்கும் பழக்கம் இல்லையாம்.
மகளுக்கு உடை வாங்க 50 ஆரெம்பி (RMB) சீனக்காசு கொடுத்தாயா? நானும் 50 ஆரம்பிதான் தருவேன். அதற்குமேல் தரமாட்டேன் என்பானாம் கணவன்.
பல கணவன்கள், மனைவிகள் தனிப்பட்ட ஒழுக்கத்தில் இஷ்டப்படி வாழ்வதும் உண்டு என்பதை ராஜகோபால் ஒப்புக்கொள்கிறார்.
குடும்பத்துடன் வசிக்காத ஊழியர்களுக்கு டார்மெட்ரி எனப்படும் பெரிய பெரிய தங்கும் வசதிகளைச் செய்து கொடுத்து சாப்பாடு போட்டு, வேலை வாங்கிக்கொள்ளும் பழக்கம் சீனாவில் உண்டு.
ஷிப்டைப் பொறுத்துச் சாப்பாடு வழங்கப்படும். ஓவர்டைம் செய்தால் கண்டிப்பாக சாப்பாடு உண்டு. ஜைனர்களுக்கும் சீனர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருட்டும் முன் இரவுச் சாப்பாட்டை முடித்துவிடுகிறார்கள்.
சாப்பிட்டுவிட்டு நாமெல்லாம் உடனே படுக்கிறோம். இது நல்ல பழக்கம் அல்ல. ஜீரணம் திணறும். பொதுவாக இரவு சாப்பிட்ட பிறகு ஒன்றரை மணிநேரம் கழித்து உறங்குவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். இதைப் பெரும்பாலும் நம்மவர்கள் கடைப்பிடிப்பது இல்லை.
சீனர்கள், இரவு உணவை மாலை டிபன்போல் சாப்பிட்டு முடித்துவிடுகிறார்கள்.
ராஜகோபாலைக் கேட்டேன். ”நீங்கள் இரவு உணவை எப்போது சாப்பிடுவீர்கள்?”
”மாலை 5.00க்கு”
”என்னது! மாலை 5.00-க்கேவா?”
”ஆமாம்! இங்கு வந்து அப்படிப் பழகிவிட்டேன்.”
”ஆச்சரியமாக இருக்கிறது.”
சாப்பிட்டதும் பல சீனர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. இதனால் கேளிக்கைகளுக்குப் புறப்பட்டுவிடுவார்கள். இரவு பகுதிகள் கேளிக்கை மையங்களில் பார்த்தால் மாலை நேரத்திற்குமேல் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் உணவு விற்பனை அதிகம் இராது. குடி விற்பனை இருக்கும். ஷாப்பிங் ஏரியாக்களில் பார்த்தால் வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ கூட்டம் அதிகமாக இருக்கும்.
”ஆமாம். நானும் வந்த நாளாய்க் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.”
”உங்களின் தோல் துறையில் வேலை கலாசாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிற ஆர்வமாக இருக்கிறேன்.”
”வாருங்கள். காட்டுகிறேன்.”
ஒரு பெரிய தகவல் பலகை. அது அனைத்து விஷயங்களையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது. ஒரு தோல் பொதி எப்போது வந்தது? இது இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்று துல்லியமாகக் காட்டப்பட்டு இருந்தது. ஒரு தோல் உள்ளே வந்ததும் அது என்ன பாடுபடுகிறது என்பதை அந்தப் பலகை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
”பரவாயில்லையே! நன்றாக இருக்கிறதே இந்த முறை.”
”இதுகூடப் பெரிதில்லை லேனா சார். ஒவ்வொரு தோலுக்கும் எண் இட்டுவிடுவோம். அந்தத் தோலில் எங்கள் வாடிக்கையாளர் ஒரு குறையைக் கண்டுபிடித்தால் அந்தக் குறை எந்தப் பிரிவில், எந்த ஷிப்டில் யாரால் நேர்ந்தது என்று துல்லியமாகக் கண்டுபிடித்துவிடுவோம். யாரும் எவர்மீதும் அநாவசியமாகப் பழிபோட முடியாது. இந்தத் தொழில்நுட்ப வசதி இருப்பதால் எல்லோரும் அக்கறையாக வேலை செய்வார்கள்.”
”அசத்தலாக இருக்கிறதே! உங்கள் தயாரிப்புகளை யார் யார் வாங்குகிறார்கள்?”
”கொஞ்சம் சீனாவில் செலவாகிறது. ஐரோப்பாவுக்குப் போகுது. யு.எஸ்.ஸில் வாங்குறாங்க; நியூஸிலாந்துக்குகூடப் போகுது.”
”இதன் உரிமையாளர் யார்?”
”ரிச்சர்ட் போய் என்பவர்”
”அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட சீனர்.”
”ஓஹோ!”
‘ஷாங்காய் ரிச்சினா லெதர்ஸ் நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. நான் பார்த்த பிரிவுகள் இரண்டுதான். இன்னும் நிறைய இருக்கின்றன. ”களைப்பாக இருக்கிறதா?” என்று கேட்டார் ராஜகோபால்.
”அதெல்லாம் இல்லை. மலைப்பாகத்தான் இருக்கிறது.”
சில சீனப் பெண்மணிகளுடன் படம் எடுத்துக் கொள்ள விரும்பினேன். கொஞ்சம் பார்க்கும்படியான முகங்களாகத் தேடினேன்.
”அந்தப் பெண்ணோடு படம் எடுத்துக் கொள்ளலாமா?”
”அதுக்கென்ன?” என்ற ராஜகோபால் மேற்பார்வையாளரிடம் சொல்லி என் விருப்பத்தைச் சொல்லச் சொல்ல, அவரும் சொல்ல, அவள் ஒரேயடியாக வெட்கப்பட்டு, மறுக்கும் விதமாக எதிரும் புதிருமாகத் தலையாட்ட, நடப்பதைக் கவனித்த மற்ற சீனப் பெண்கள் பெரிதாய்க் கொல்லென்று சிரிக்க அவளது வெட்கம் மேலும் அதிகமாகிவிட்டது.
வெகுநேரம் வரை அப்பெண் அடம்பிடிக்க நான் காத்திருக்க, கடைசியில் எல்லாப் பெண்களுமாய்ச் சேர்ந்து ”அவரோட படம் எடுத்துக்க பிரியப்படுறார்ல?” என்பதுபோல் சீன மொழியில் ஏதோ சொல்ல, ஒரு வழியாய்ச் சம்மதித்தாள்.
பெரும்பாலும் சீனப் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதை மாற்றி, அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம் என்றே மாற்றி வைத்திருக்கிறார்கள்.
நான் ஏற்கெனவே குறிப்பிட்ட வயதான பெண்களைத் தவிர, மற்ற இளம்பெண்கள் என்றால் புகைப்படம் என்றதும் ஒன்றுமே சொல்லாமல் பக்கத்தில் வந்து படம் எடுத்துக் கொள்வார்கள்.
புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது இரட்டை இலைக்காரர்கள் காட்டுவதைப்போல் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் காட்டுகிறார்கள். இதற்கு வெற்றி என்று பொருளாம்.
”இங்கு பணிபுரிபவர்களுள் நீங்கள் மட்டும்தான் இந்தியரா?”
”நான் மட்டுமாவது? அடுத்த பகுதியில் ஒரு தமிழரே இருக்கிறார்.”
என்னது! இங்கு இன்னொரு தமிழரா? அவசியம் நான் சந்திக்க வேண்டும்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…









































