Thursday 29 May 2008
குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
அரசின் கொள்கைகள் மாறலாம். தவறில்லை. ஆனால் எடுக்கப்படும் புதிய கொள்கைகள் மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும்.
2003 முதல் தமிழக அரசு மணல் குவாரிகளிலிருந்து மணலை எடுத்து விற்பனை செய்து வருகிறது. இனி, இது இன்னும் பின்னோக்கிப் போய், பகிரங்க ஏலமுறையை ஜூலை மாதத்திலிருந்து நடைமுறைக்குக் கொண்டு வரப்போகிறது.
இது நல்ல முடிவா என்பது கேள்வி.
மாநில நலனைக் கருத்தில் கொண்டால், எழக்கூடிய சிந்தனைகள் மனம் பதைக்கச் செய்கிறது.
மணல்குவாரி ஏலதாரர்கள் பலபேர் எத்தகைய எல்லைக்கும் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆள் பலம், பணபலம், அதிகார பலம் இவர்களிடம் குவிந்து கிடப்பதால் எதிர்ப்பவர்களையோ, இடைஞ்சல் செய்பவர்களேயோ உயிரச்சம் ஏற்படுமளவு நடந்து கொள்ளவும் தயங்குவதில்லை.
இயற்கைச் சூழல் பாழாவது பற்றி இவர்கள் அக்கறையுடைவர்கள் என்கிற வாதத்தைக் குழந்தைகூட ஏற்குமா என்பது ஐயமே!
நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுவது பற்றி இவர்களுக்கு அக்கறை உண்டு. மணல் எடுக்கப்படும் இடங்களுக்கு அருகில் உள்ள பாலங்களுக்கு ஏற்படக் கூடிய சேதாரங்களைப்பற்றி இவர்கள் கவலைப்படுவார்களா?
வரையறைக்குட்பட்ட இடத்தை மட்டும் பயன்படுத்துவார்களா? அல்லது அரசு அதிகாரிகளைச் சரி செய்தோ மிரட்டியோ எல்லை தாண்டுவார்களா?
பரவலாக மணல் கிடைக்க இந்த முறை ஏதுவாகும் என்று அரசு நம்பும்போது இதற்கு என்ன பொருள்? இனி எல்லா ஆற்றுமணல் படுகைகளுக்கும் ஆபத்துதானா? எல்லா ஆறுகளிலும் இனி குழிகள்தானா? மக்களின் நேரடி பலன் என்று பார்த்தால் மணல் விலை இந்தப் புதிய முறை மூலம் குறையுமா?
பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு, மணல் விலையின் ஏற்றத்தை அரசு வேடிக்கை பார்க்கப்போகிறதா?
இந்தப் புதிய முறையின் மூலம் மணல் விலை குறையும் என்கிற உத்திரவாதத்தை அரசால் தரமுடியுமா?
அல்லது மணலுக்கு உச்சபட்ச விலையை அரசு நிர்ணயிக்குமா?
கட்டுமானத் தொழிலில் உள்ள கஷ்டங்கள் ஏற்கனவே பணக்காரர்கள் முதல் பாமரன் வரை பாதித்தாகிவிட்டது.
மணல் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள்கூட வீடு கட்டவோ, சிறுசிறு மராமத்துப் பணிகளை நிறைவேற்றவோ கூடச் சிரமப்படுகின்றன. மணல் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் கூலித் தொழிலாளிகள் கூடப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மணல் பலரது தலையில் மண்ணை வாரிப் போட்டிருக்கிறது.
புதிய அறிவிப்பு இந்நிலையை மேலும் மோசமாக்கும் என்றே தெரிகிறது.
மருத்துவர் ராமதாசும் அரசின் இந்த முடிவைக் கண்டித்துள்ளது கவனிக்கத்தக்கது. ஏலமுறை பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க முதல்வர் முன்வந்தது பாராட்டத்தக்கது. நல்ல முடிவை அரசு ஏற்க வேண்டும்.
புதிய முடிவு நிலைமைகளை மோசமாக்குமானால் ஏல முறையை இரத்து செய்யவும் அரசு தயங்கக்கூடாது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?









































