Thursday 22 May 2008
சீனம் சென்று வந்தேன்
சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
சீனர்களின் உழைப்பு பற்றி உலகமே வியந்து பேசுகிறது என்பதால் என் இந்தப் பயணத்தின்போது சீனர்களின் உழைப்புக் கலாசாரம் பற்றி மேலும் அறிய விரும்பினேன். இதற்கு யாரை நாடலாம்?
ஷாங்காய் சங்கம் என்கிற தமிழர்களின் கூட்டமைப்பில் தலைவர் என்று தம்மை அழைத்துக் கொள்ளாத தலைவரான ராஜகோபாலை அணுகலாம் என்று தோன்றியது.
ஷாங்காய் தமிழர்களுள் ராஜகோபாலுக்கு ஒரு சிறப்புத் தகுதி உண்டு. 1997இல் ஷாங்காயில் காலடி வைத்து 11 ஆண்டுகளாகத் தோல் துறையில் சிறந்த தொழிற்நுட்ப வல்லுநராகத் திகழ்பவர் இவர். 2,500 ஊழியர்களைக் கொண்ட ஷாங்காய் ரிச்சினா லெதர்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேலாளராக விளங்குபவர்.
இவரை அணுகலாமா என்று நான் கேட்ட வேளையில் செந்தில்குமார் படபடவென்று பச்சைக்கொடியை அசைத்தார்.
ஷாங்காய் சங்கம் நிகழச்சியின்போது, ”எங்கள் தொழிற்சாலையை வந்து பாருங்கள்” என்று இவர் அழைத்தார் என்பதையும் செந்தில்குமாரிடம் நினைவூட்டியபோது ”நல்ல நினைவூட்டல்” என்றார்.
திருச்சி, திண்டுக்கல், குரோம்பேட்டை என்று பல இடங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகளைப் பார்த்தவன் என்ற பின்னணியில் ஒரு தகவலைச் சொல்கிறேன். ரிச்சினா லெதர்ஸ் போன்ற ஒரு பெரிய தோல் தொழிற்சாலையை நான் இதுவரை என் வாழ்நாளில் கண்டது கிடையாது. 2,500 தோல்துறைத் தொழிலாளர்கள் பணி புரியும் மகத்தான நிறுவனம் இது.
வாயிலில் தகவல் சரியாக இருந்ததால் ‘விசிட்டர்’ என்கிற பாசைத் தந்து கழுத்தில் மாட்டிக் கொள்ளச் சொன்னார்கள். நானும் செந்தில்குமாரும் அதன்படி செய்தோம். பார்வையாளர்களுக்கான கார் நிறுத்துமிடத்தில் தான் எங்கள் கார் நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாதுகாப்பு அதிகாரியின் மென்மை கலந்த உறுதி என்னை வியக்க வைத்தது.
‘நான் சொன்னதைச் செய்’ என்பதில் உறுதியையும் மென்மையையும் இவர் அளவுக்கு அருமையான விகிதாசாரக் கலவையுடன் வெளிப்படுத்த நம்மவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏக்கம் ஏற்படுத்துமளவு அவ்வளவு அற்புதமாக இருந்தது.
நாங்கள் வருகிறோம் என்றதும் இருக்கையிலிருந்து இறங்கி கீழேயே வந்துவிட்டார் ராஜகோபால். 2,500 சீனர்கள் பணிபுரியும் ஒரு தொழிற்சாலையில் ஒரு தமிழர் தொழில்நுட்ப மேலாளரா? பெருமிதத்தில் ராஜகோபாலைத் தழுவிக்கொண்டேன்.
என் முதல் கேள்வியே இதுதான். ”எப்படி சார் ஓர் இந்தியரை இவ்வளவு சீனர்கள் தங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது சார்!”
”சீனர்களின் தொழிற்கலாசாரம் அற்புதமானது. மேலதிகாரிகளுக்கு நன்கு கீழ்ப்படிவார்கள். மிகவும் அனுசரித்து நடந்துகொள்வார்கள். பாகுபடுத்திப் பார்க்க இவர்களுக்குத் தெரியாது. சொன்னால் சரி என்று கேட்டுக் கொள்வார்கள். எதிர்த்துப் பேசத் தெரியாது. நானுமே இவர்களது மொழியைக் கற்றுக் கொண்டு இவர்களுடன் நன்கு பழகுவேன். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் இருக்கும். இதைச் சொல்லி அழைத்துத் தனிப்பட்ட முறையில் நின்று பேசுவேன். ஒரு மேலதிகாரி போலப் பழகமாட்டேன். இது இவர்களுக்கு என்னைப் பிடித்துப் போக ஒரு காரணம்.”
”சீனம் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்? முறைப்படி ஏதும் நூல் மூலம் கற்றுக்கொண்டீர்களா?”
”அதெல்லாம் கடினம். சீன மொழியில் ஏகப்பட்ட சொற்கள் உண்டு. என் தொழிலுக்குத் தேவையான சொற்களை மட்டும் ஒரு சீன ஊழியரிடம் பேசிப் பேசி கேட்டுக் கேட்டு எழுதிக் கொள்வேன். என் கையில் எப்போதும் ஒரு சிறு பாக்கெட் நோட்டு இருக்கும். அதில் என்னைக் கடந்து போகிற சீனச் சொற்களையெல்லாம் தமிழில் உச்சரிப்பு வரும்படி எழுதிக் கொள்வேன்.”
”ஆச்சரியமாக இருக்கிறதே!”
”இன்னுமொரு ஆச்சரியத்தையும் சொல்கிறேன், கேளுங்கள்.”
”சொல்லுங்கள்.”
”தமிழில் உலகின் எந்த மொழிச் சொற்களையும் கிட்டத்தட்ட அதே உச்சரிப்பு வரும்படி எழுதமுடியும்.”
அட! சீனாவில் வாழும் ஒரு தமிழர் இதைச் சொல்வதால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். பெருமையாக இருக்கிறது. இதுவரை எவரும் சொல்லாத செய்தி இது.
”உண்மை சார். அப்படி எழுதிவிட்ட பிறகு மறுபடி மறுபடி சொல்லிப் பார்த்து உச்சரிப்பு சரிதானா என்று சீனர்களிடமே கேட்பேன். அவர்களும் ஆமாம் என்று சொல்லிவிட்டு ‘எப்படி எங்கள் மொழியை அப்படியே உச்சரிக்கிறீர்கள்?’ என்று வியப்புடன் கேட்பார்கள். ‘எங்கள் தமிழ் மொழி எல்லாவிதமாகவும் எங்கள் நாக்கை வளைக்கவைக்கும் ஆற்றல் உள்ளது’ என்று சொல்வேன். இப்படியாக இவர்களது மொழியைப் படித்து இவர்களிடம் சகஜமாக உரையாடுவதால் என்னை ஒரு வெளிமனிதராக இவர்கள் நடத்தியது கிடையாது.”
”நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சீனர்களுக்கு சிலவற்றை உச்சரிக்க வராது போலிருக்கிறதே!”
”உண்மை. சீனர்களுக்கு ஆர் என்கிற எழுத்து வராது. உச்சரிக்கவே சிரமப்படுவார்கள்.”
”ஆர். ரொம்ப சுலபமாச்சே!”
”ஐயோ! அதை ஏன் கேட்குறீங்க!”
”அப்படீன்னா ‘ஆர்’ல ஆரம்பிக்கிற உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பாங்க?”
”சரியாப் பிடிச்சிட்டீங்க. என் பேரைச் சொன்னா சிரிப்பீங்க. என் முழுப்பெயர் ராஜகோபால் சற்குணம். ஆனால் என்னை லோஜ சத்குணா என்றுதான் அழைப்பார்கள்.”
”சம்பந்தமே இல்லையே!”
”ஆர்’ வராது என்பதால் இப்படி இஷடத்திற்கு அழைக்கிறார்கள். நானும் விட்டுவிட்டேன்.”
”அது சரி!”
இருபுறமும் மகத்தான தொழிற்சாலைக் கட்டடங்கள் அமைந்திருக்க நடுவில் நாங்கள் வேகமாய் நடந்தோம்.
அப்போது ஓர் ஊழியர் ஓர் வண்டியில் தோல்களை அள்ளிப்போட்டுத் தள்ளிக் கொண்டு எங்களைக் கடந்து போனார். ராஜகோபாலுக்கு ஒரு வணக்கம் வைப்பார் என்று எதிர்பார்த்தேன்.
கேட்டும் விட்டேன்.
”அவர் உங்களைக் கண்டுக்கலையே ஏன்?.”
”வணக்கம்’ வைக்கிற வேலையெல்லாம் இங்கே கிடையாது. வேலையைச் சரிவரச் செய்வதையே ஒரு மரியாதைக்குரிய விஷயமாக நினைப்பவர்கள் சீனர்கள்.”
”பலே!”
”கம்யூனிஸ்டுகள் என்றால் உங்களுக்கு ஒரு விதமான கருத்துப் படிந்திருக்கும் அல்லவா? அவற்றையெல்லாம் இங்கு துடைத்து எறிந்துவிடுங்கள். இங்கு உள்ள யூனியன் தலைவர்கள் அவ்வளவு நல்லவர்கள்.”
”அப்படியா!”
”ஆமாம். கொடி பிடிக்கமாட்டார்கள். வேலை நிறுத்தம் செய்யவே மாட்டார்கள். நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கமாட்டார்கள். நிர்வாகம் என்ன சொன்னாலும் சரியென்று கேட்டுக்கொண்டு நன்கு உடன்பாடு காட்டுவார்கள். மறுப்பே பேசமாட்டார்கள்.”
”என்ன சார் இது! ஆச்சரியமாக இருக்கிறதே!”
”ஓர் ஆச்சரியமான சம்பவம் சொல்கிறேன், கேளுங்கள்.”
”சொல்லுங்கள்.”
”ஓவர் டைம் செலவு அதிகமாக ஆகிறது என்று ஒரு முறை நிர்வாகம் கருதியது. ‘ஓவர் டைமைக் குறையுங்கள்’ என்றது. உயர் அதிகாரிகள் அனைவருமாக ஒன்று கூடிப் பேசி ஒரு முடிவிற்கு வந்து அதைத் தொழிலாளர்களிடம் அறிவித்தோம். மறுப்பே சொல்லாமல் சரியென்றார்கள்.”
”என்ன முடிவு?”
”இரு தினங்கள் விடுமுறை. இரு தினங்கள் வேலை. ஆனால் தினசரி வேலை 11 மணி நேரம். மேலும் சில ஊழியர்களையும் உள்ளே சேர்த்தோம்.”
”இதற்கு யூனியன் ஒன்றும் சொல்லவில்லையா?”
”அதுதான் சார் சீனாவில் அழகு.”
”எவ்வளவு நாள் ஆயிற்று இதைச் செயல்படுத்த?”
”மறுநாளே!”
”என்ன சார் சொல்கிறீர்கள்? நம்ம முடியலையே!”
”நம்பத்தான் முடியாது. உடனே செயல்படுத்திவிட்டோம். ஓர் எதிர்ப்பும் இல்லை. நிர்வாகத்திற்கு அப்படி ஒரு மனநிறைவு.”
”மகத்தான தொழிலாளர்கள்தாம். ஆனால் சீனத் தொழிலாளர்களைப் பற்றி ரொம்பத்தான் உயர்த்திக் கொடி பிடிக்கிறீர்கள். குறைகளே இல்லாதவர்களா சீனத் தொழிலாளர்கள்?”
”உண்டு. அதைப்பற்றிப் பேசுவானேன்?”
”அதெல்லாம் முடியாது. பிளஸ், மைனஸ் இரண்டையும் எனக்கு நீங்கள் சொல்லியாக வேண்டும்.” - சிறுபிள்ளைதனமாக அடம்பிடித்தேன்.
குரலைக் கனைத்துக்கொண்டு ராஜகோபால் சொல்ல ஆரம்பித்தார்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…









































