Thursday 22 May 2008

2008/05/23 Lenavin Parvayil

paryil.jpgமக்களின் மதிப்பெண் என்ன?

ஈராண்டுகளில் திரண்ட சாதனைகள் என்று ஆளுங்கட்சி பெரும்பாலான இதழ்களில் விளம்பரப்படுத்தினாலும் படுத்தியது, மருத்துவர் ராமதாஸ் பொரிந்து தள்ளிவிட்டார் தி.மு.க. ஆட்சியை!

ராமதாசு இலேசுப்பட்டவர் அல்லர். கஞ்சா பாக்கெட்டைக் கையில் தூக்கி உயர்த்திப்பிடித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டி கல்வி நிறுவனங்களை ஒட்டி சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது இது என்று பாய்ந்துவிட்டார்.

டாஸ்மாக் (மது) விற்பனையை அதிகப்படுத்தி அதில் வரும் வருவாயைக் கொண்டு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவதைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். மக்களைக் குடிகாரர்கள் ஆக்கிய பிறகு என்ன முன்னேற்றம் வேண்டிக்கிடக்கிறது என்கிறார். நியாயம். தனியார் கல்லூரிகள் அடிக்கும் கொட்டங்களைப் புட்டு வைத்திருக்கிறார். மேற்கல்வி என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட கல்வியாகிவிட்டது என்று கண்டித்திருக்கிறார்.

விவசாயிகள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. விவசாயம் என்பது கட்டுப்படியாகாத தொழில் என்று பலர் முடிவிற்கு வந்து தங்கள் நிலத்தில் தைலம் (யூகலிப்டஸ்) மற்றும் சவுக்கு மரங்களை நட ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

இதற்கு அரசின் பதில் என்ன? இதன் விளைவாகப் பயிர் நிலங்கள் வடஇந்தியவர்களின் கைக்கு மாறுகின்றன எனறும் குற்றம் சாட்டுகிறார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் கூக்குரல்; இதில் உண்மை இல்லை; இது விஷயமாகப் பொதுமேடை விவாதத்திற்கு வாருங்கள் என்று அழைத்துப் பலனில்லை என்று வருத்தப்படுகிறார் மருத்துவர் ராமதாசு.

1,42,000 பேர்களுக்கு வேலை கிடைத்திருப்பது உண்மை என்றால் 46,51,000 ஆக இருந்த வேலையில்லாதோரின் எண்ணிக்கை 40,50,000 ஆக உயர்ந்தது எப்படி என்று செமர்த்தியாக ஒரு கொக்கியை மாட்டியிருக்கிறார் மருத்தவர்.

வேலையில்லாதோருக்குக் கொடுக்கப்படும் 300 ரூ எதற்குப் போதும்? திரையரங்குகளுக்கும் டாஸ்மாக்களுக்குமே இத்தொகை பயன்படுகிறது என்கிற இவரது குற்றச்சாட்டில் பொருள் இருக்கிறது.

இந்தக் குறைகளையெல்லாம் சுட்டிக்காட்டினால் நம் முதல்வருக்குக் கோபம்தான் வருகிறது. நீங்கள் ஆட்சிக்கு 2011இல் வரும்போது செய்து கொள்ளுங்கள் என்பது சரியான பதில்தானா என்று கேட்கிறார்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிற அடிமடியைக் தொடுகிற குற்றச்சாட்டையும் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்.

இலவச அரிசியும் இலவச தொலைக்காட்சிப் பெட்டியும் தி.மு.க.வின் மிகப் பெரிய சாதனையாகப் பேசப்படுவது உண்மையே. ஆனால் இவற்றை அழுத்தும்படியாக விலைவாசிகள் ஏறித் தொலைத்திருக்கின்றன. இதற்கு மத்திய அரசின் மீது சுட்டுவிரலைக் காட்டிவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்ள முடியாது. தி.மு.க. அரசிற்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

ரிப்போர்ட்டர் இதழ் மக்களின் நாடியைப் பிடித்து 48 மதிப்பெண்களை தி.மு.க அரசிற்குக் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

பாஸ் தான் என்றாலும் டிஸ்டிங்ஷன் வாங்க வேண்டாமா? மருத்துவர் போட்ட ஊசிகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டால் சாத்தியம்தான்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு! 

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்! 

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04  அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Post

Leave a Reply