Friday 23 May 2008

2008/05/23 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

அருள் அழகன், கன்னியாகுமரி.

இராமரைப் பற்றி நான் களங்கம் கற்பிக்கவில்லை என்கிறாரே கலைஞர் கருணாநிதி?

இது அண்டர் பல்டியல்ல; அப்பர் பல்டி!


எஸ்.பார்த்தசாரதி, விருத்தாச்சலம்.

இலங்கைக்கு உதவி செய்வதை தொடர்ந்து எதிர்க்கும் வைகோ பற்றி?

இலங்கைக்கு இந்திய அரசு 400 கோடியை வட்டிக்கு வழங்கப் போகிறது. இதை வைகோ எதிர்ப்பது இயற்கை. எல்லாவற்றையும் இனத்தளவில் பார்க்கிறவர் வைகோ. எதையும் சர்வதேச உறவுக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது மத்திய அரசு. தட்டிக் கேட்கும் உரிமையே வட்டிக்குக் கொடுத்தால்தான் வருமென நினைக்கிறதோ என்னவோ?


ஏ.செங்குட்டுவன், கொட்டாம்பட்டி.

தமிழக அரசியலின் விநோதம் எதுவென்று கருதுகிறீர்கள்?

ஒரேயொரு தொகுதியில் ஜெயித்த தே.மு.தி.க.வைப் பார்த்து தொண்ணூற்றாறு தொகுதிகளில் ஜெயித்த தி.மு.க. பயப்படுவது. தெரியாமல்தான் கேட்கிறேன். ஒன்று பெரியதா, தொண்ணூற்று ஆறு பெரியதா?


டி.கருப்பாயி, மேட்டுப்பாளையம்.

அரசியல்வாதிகளுக்கு இன்றைய நம்பிக்கை?

யாகத்தை நம்புகிற அளவிற்கு அவர்கள் தியாகத்தை நம்பமாட்டேன் என்கிறார்கள். தியாகம் செய்தால் நமக்குத் தியாகிகள் பென்ஷன்தான் என்ற மூட நம்பிக்கை இவர்களை முழுதுமாய்ப் பிடித்துக் கொண்டது.


சின்னத்தம்பி தியாகராஜன், மதுரை.

வெற்றி என்பது நிரந்தரமானதா?

ஒன்று சொல்வேன். தோல்வி என்பது முடிவானதுமல்ல. எனவே வெற்றியைத் தொடர்ந்து பிறகு உழைக்காமலும், தோல்வியைத் தொடர்ந்து பிறகு முயற்சிக்காமலும் இருக்காதீர்கள்.


சி.ராமதாஸ், முகப்பேர்.

இன்றைய காதலர்கள் தாங்கள் எப்போது மேஜராவோம் என்று காத்திருக்கிறார்களே?

ஏதோ இராணுவ மேஜருக்காகக் காத்திருப்பதுபோல் காத்திருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடிப்போக இதுவொரு தகுதி. இந்தத் தகுதியால் இவர்கள் எதிர்கொள்வது விருதுகள் அல்ல விபரீதங்கள்.


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

மத்தியில் இன்றைய எதிர்க்கட்சியினர்?

மேதையைப் போல் சிந்திக்கிறார்கள். ஆனால் பத்தாம் பசலிகள் போல் நடந்து கொள்கிறார்கள்.


எம்.குப்புசாமி, ஆர்.ஏ.புரம்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்த விஜயகாந்த் இன்று பின்வாங்குவது ஏன்?

பதவி நாற்காலி ஒற்றைக் காலில் நிற்காது. அதற்கு நான்கு கால்கள் தேவை. பதவியில் அமர தனித்து நிற்பது உதவாது. இதைப் புரிந்துகொள்ள விஜயகாந்திற்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது. கைதேர்ந்த அரசியல்வாதிக்கான தகுதி ஒவ்வொன்றாகச் சேர்ந்து வருகிறது விஜயகாந்திடம்.


அ.தண்டாயுதபாணி, தஞ்சாவூர்.

இன்றைய ஜனநாயகம்?

நன்றாகத் தேய அது ஏழைகளுக்குக் கால்களையும், பணக்காரர்களுக்கு கார் டயர்களையும் கொடுத்திருக்கிறது. ஒரேயொரு விசேஷம், ஏழைகளின் கால்களை ‘ரீடிரெட்’ செய்ய வேண்டாம்!


எஸ்.டேவிட், புதுச்சேரி.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் கேரள அரசு அமைதி காட்டுவது ஏன்?

கேரள முதல்வர் அச்சுதானந்தன் அச்சதானந்தனாகியிருக்கலாம்!


எம்.அண்ணாமலை, சேலம்.

உங்களுக்கு கபடி வருமா?

கபடி என்பது ஒரு கிராமத்து ஒலிம்பிக்ஸ்! நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே நகரம்! என்னிடம் போய் ஒரு கிராமத்து ஒலிம்பிக்ஸைக் கேட்டால்?


ஆர்.பத்மினி, பேரூர்.

நாட்டு நிலைமை இன்று ஒரு சாமான்யனுக்கும் தெரிந்திருக்கிறதே?

தொலைக்காட்சிகளுக்கு நன்றி. பத்திரிகைகளால் செய்ய முடியாத சாதனை இது.


எம்.சாகுல் அமீது, பள்ளப்பட்டி.

மன்மோகன் சிங்கின் நாற்காலி வலுவாக உள்ளதா?

பாராளுமன்ற மைய மண்டபத்தின் தரையில் எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் ஒரு பெரிய குளோப்! அந்த குளோபின் மேல் ஒரு நாற்காலி. அந்த நாற்காலியில் மன்மோகன்சிங்! இதை விடச் சுலபமாக உங்களுக்கு யார் சொல்லுவார்கள்!


எஸ்.சரசு, வேலூர்.

இன்றைய சாஃப்ட்வேர் பெண்கள்?

ஒரு பழத்தை உரித்துச் சாப்பிடக்கூட வலுவில்லாமல், பழச்சாறு குடிக்க மட்டுமே கற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பழச் சாற்றுக்கும் ‘ஸ்டாரவை’ நாம்தான் கையில் பிடித்திருக்க வேண்டும்.


மு.திருப்பதி, கோவை.

ஒரு பேச்சாளனுக்கு என்ன தேவை?

மேடையில் தன் முகம் ஒளி வெள்ளத்தில் பாய நினைப்பது போல், தன் எதிரேயுள்ள அவையோரின் முகமும் தன்னால் இருளில் மூழ்காதபடி பார்த்துக் கொள்வது. இது இருந்துவிட்டால், அந்தப் பேச்சாளர் ஒரு ஃப்ளாரோசெண்ட் பல்புதான்!


க.தெட்சிணாமூர்த்தி, புதுக்கோட்டை.

ஜெயலலிதா இப்போது எப்படியிருக்கிறார்?

எதுவொன்றிலும் அவரது ராசியான பச்சை சிக்னல் அவருக்குக் கிடைக்காததால், சிவப்பு சிக்னலிலேயே சினந்து நிற்கிறார்.


ஜே.அஷரப் அலி, தொண்டி.

தமிழகத்தில் இன்றைய மேயர்கள்?

அவர்கள் இருப்பது வணக்கத்துக்குரிய மேயர் பதவிகளில். ஆனால், அவர்களுக்குக் கிடைக்காதவை வணக்கங்கள். என்ன கொடுமையடா என்கிறீர்களா?


ரா.வசந்தமாலா, அரக்கோணம்.

கனிமொழி எம்பி.,?

முதலில் மாநிலங்களவைத் தேர்தலில் தேர்வானார். இப்போது மாநிலங்களவை நடைமுறைகளிலும் தேர்வாகியுள்ளார். வேகமாய்ப் போகிற மன்மோகன்சிங்கே இவரைக் கண்டால் நின்று நிதானித்து நாலு வார்த்தை பேசிவிட்டுப் போகிறாரென்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

காவல் நிலையங்களுக்கு அருகில் மதுக் கடைகள் இருக்கலாமா?

பூக்கடைகள் இருக்கலாம். அதற்குத்தான் இப்போது நல்ல வியாபாரம்! கல்யாணம் செய்ய.


ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.

நாட்டில் குற்றங்கள் குறைய என்ன செய்ய வேண்டும்?

தண்டனையில் நாம் ஈரான், ஈராக் ஆக வேண்டும். இந்த மூன்றெழுத்து நாடுகளாக ஆனால்தான் நமது நாலெழுத்து நாடு நன்றாக இருக்கும்.


எஸ்.அடைக்கலராஜ், கரூர்.

எல்லோருடைய கேள்விக்கும் பதில் கூறும் தாங்கள் யாரிடமாவது கேள்வி கேட்க ஆசைப்பட்டதுண்டா?

வீட்டாரிடம் கேட்க ஆசை! ஆனால் வீட்டில் நான்கு பக்கமும் ஜாமர்கள். எல்லா ஜாமர்களும் எனது ஒலியை உள்வாங்கிக் கொள்கின்றன. எந்த ஒலியும் ஒலிப்பதில்லை.

16 May 2008 ஜூனியர் கேளவி-பதில்
09 May 2008 ஜூனியர் கேளவி-பதில்
02 May 2008 ஜூனியர் கேளவி-பதில்
25 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
18 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
11 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
04 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
28 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
Related Post

2 Responses to “2008/05/23 Junior Kelvi Pathil”

  1. Gandhi

    About Sourav Ganguly

  2. Tamilvanan

    Pmk Party’s current actions are correct?

Leave a Reply