Friday 16 May 2008
சீனம் சென்று வந்தேன்
நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
நான்சிங் கடைத்தெருவில் காலை வைத்த கணமே எங்களை வழிமறித்தவள் ஒரு சீன விலைமாது. இளமையெல்லாம் பறிபோய்விட்டது. ஆனால் ஆடம்பர உடைகள், செயற்கையாய்க் கவர்ச்சிகள், மகா மோசமான மிட்டாய் ரோஸ் நிறத்தில் லிப்ஸ்டிக்.
சீனத்தில் ஏதோ கேட்டாள். ஒரு பெண்ணாயிற்றே? ஏதோ கேட்கிறாளே, நவீனப் பிச்சையா, ஏதும் உதவியா? என்னவாக இருக்கும் என்று ஒரு வினாடி திகைத்து நிற்க, ”வாங்க அவ கெடக்கா!” என்று கையைப் பற்றி இழுத்தார் செந்தில்குமார். ”பலான கேசுங்க இது! பார்த்தாத் தெரியலை? வாங்க நீங்க” என்றார்.
”இந்த மாதிரி நிறைய பேர் வழி மறிப்பாளுங்க. எவளிடமும் பேச்சுக் கொடுக்காதீங்க. திரும்பிப் பார்க்காம வாங்க” என்று சொல்லியபடி விடுவிடு என நடந்தார்.
ஒரு நாகரிகமான கடைத்தெருவில் இப்படி அப்பட்டமாக நடக்கும் உடல் வியாபாரத்தைக் காவல்துறை தட்டிக் கேட்காதா? இவர்களுக்கென்று ஒதுக்கிடம் ஏதும் இல்லையா? இப்படியா வந்து வழிமறிக்க வேண்டும்?
நான்சிங் கடைத்தெரு அப்படி ஒன்றும் நீளமானதல்ல. ஆனால் நூறடிக்கு ஒருத்தி கைச்சாடைக் காட்டுகிறாள். பார்வையால் பலவித சில்மிஷங்களைச் செய்கிறாள். ஒருத்தி ஆடைக் குறைப்பு செய்து கவரப் பார்க்கிறாள்.
இதுபேர் நான்சிங் தெருவல்ல! அசிங்கத் தெரு.
”இப்படி ஒருத்தியிடம் ஏமாந்த வெளிநாட்டவர் ஒருவரின் கதையைக் கேட்டால் பரிதாபமாக இருக்கும்” என்று ஆரம்பித்தார்.
”சொல்லுங்கள்” என்றேன்.
இதற்குள் என்னை ஓர் அம்சம் கவர்ந்து இழுக்க - ”நில்லுங்கள் செந்தில்” என்றேன்.
”ஏன் என்னாச்சு?”
வெகுநாளாய் நான் தேடிக் கொண்டிருந்த வாட்ச் கடை இதுதான் ”டிஸ்ஸார்ட்! ஆமா ரொம்பப் புகழ்மிக்க சுவிஸ் வாட்ச் இது.”
”இதேதான். இதில் ஏகப்பட்ட வசதிகள் கொண்ட வாட்ச் ஒன்றை ‘டைம்’ இதழில் விளம்பரம் பார்த்தேன். இதில் ஒன்றை வாங்க வெகு நாளாய் ஆசை. போய்ப் பார்ப்போமோ?”
”தாராளமா. ஆனால் இங்கே கொஞ்சம் விலை அதிகம்.”
”அதனாலென்ன? இங்கே பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டு எங்கு விலை மலிவோ அங்கு வாங்கிக் கொள்கிறேன்.”
”இந்த யோசனையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் தோணும்.”
”இதென்ன பாராட்டா, கேலியா?.”
”தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களே! பாராட்டத்தான் சொன்னேன். தேர்வு ஓரிடத்தில் வாங்குவது ஓரிடத்தில், இது நல்ல யோசனைதானே!”
கடையின் வனப்பும் பிரமாண்டமும் அசத்தின. வாடிக்கையாளர் எவருமே இல்லாத கடைகளில் நுழைவது ஒரு வகையில் நல்லது. ஒரு வகையில் மோசமானது. எந்த வகையில் என்றால் கவனிப்பு அபாரமாக இருக்கும். வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம். என்னைப்போல இரண்டாவது எண்ணத்துடன் நுழைபவர்களுக்கு ஏக தர்மசங்கடம்தான் என் தேவைகளைச் சொல்ல,
(அ) திசைகாட்டும் கருவி அதனுள் இருக்க வேண்டும்.
(ஆ) Stop watch ஆகவும் செயல்பட வேண்டும்.
(இ) கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பது தெரிய வேண்டும்.
(ஈ) எவ்வளவு டிகிரி வெப்பம் நிலவுகிறது என்று காட்ட வேண்டும்.
இவை போக கடிகாரத்தில் வழக்கமான அம்சங்கள் இருக்க வேண்டும்.
”நீங்கள் கேட்ட எல்லாமே உள்ள வாட்ச் இது” என்று சட்டென்று எடுத்துத் தந்தார்.
‘சரியான ஆள் அகப்பட்டான். இன்றைக்கு’ என்று அந்த விற்பனையாளர் முகம் திருப்திப்பட்டபோதே நான் இந்தக் கடிகாரத்தின் விலையைச் சரியாக ஊகித்திருக்க வேண்டும்.
”எவ்வளவு விலை?”
கேல்குலேட்டரை எடுத்தார். ஏதேதோ போட்டார். ”இன்று உங்களுக்குச் சிறப்புக் கழிவு தருகிறோம். கழிவு கழித்து 1350 டாலர்கள்.”
”யப்பா சாமி!” என்னையும் மீறித் தமிழ் வாக்கியமே முதலில் வந்தது.
”இருங்கள்.”
வெளிநாடு சென்றால் தவறாமல் எடுத்துச் செல்லும் கேல்குலேட்டரை எடுத்து 40ஆல் பெருக்கியபோது 54,000 ரூபாய் என்று வந்தது. கீழே விழாமலிருக்க செந்திலைப் பிடித்துக் கொண்டேன்.
”என்ன சார், இவ்வளவு விலை சொல்றான்?”
”நீங்கள் கேட்ட வசதிகள் அப்படி! நீங்கள் தேர்ந்தெடுத்த பிராண்ட் அப்படி!”
”சரி சார்! அதுக்காக இந்த விலையா?”
”நான்சிங் தெருன்னா சும்மாவா? இங்கே குடுக்கிற வாடகையில் ஒரு பகுதியை உங்கள் தலையில் கட்டவேண்டாமா?”
நாங்கள் மலைத்துப் பேசிய பேச்சு புரியாவிட்டாலும் எங்களின் முகக் குறிப்பில் விற்பனையாளர் உண்மையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
அவரே கடிகாரத்தை எடுத்து உள்ளே வைத்துவிட்டார். எங்கள் வேலை எளிதாகிவிட்டது.
”தேங்யூ சார்” என்று குரலில் சுரத்தே இல்லாமல் தலையில் தீப்பிடித்துக் கொண்டதுபோல் பதறி வெளியேறினோம்.
சற்றுத் தூரம் நடந்திருக்க மாட்டோம். மறுபடி ‘இவளுக’ தொல்லை ஆரம்பித்துவிட்டது.
”ஊம்! ‘ இவள்களிடத்தில் ஏமாந்த ஒரு வெளிநாட்டவர் கதையைச் சொல்கிறேன்’ என்றீர்களே!.”
”சொல்றேன்.”
”வெளிநாட்டவர் என்றீர்கள். நம்மாளுதானே?”
”சேச்சே! ஒரு பாகிஸ்தானி அவர்.”
”சொல்லுங்க, என்ன ஆச்சு?”
”அழைச்சுக்கிட்டுப் போயி கையில, பையில, பர்சுல இருந்த எல்லாத்தையும் புடுங்கிவிட்டு அனுப்பிச்சிட்டா. இவர் இழந்த தொகை எவ்வளவு தெரியுமா ஒன்றரை இலட்ச ரூபாய்.”
”அவ்வளவு பணமா ஒரு மனுஷன் வச்சிருப்பான்?.”
”போட்டிருந்த தங்க சமாச்சாரங்கள், இத்யாதிகள் எல்லாமே! அப்பத்தான் பாங்குல பணம் மாத்தியிருக்கார். எல்லாம் போச்சு!”
நான்சிங் தெருவில் ஆடம்பரம், ஆடம்பரம். அப்படி ஓர் ஆடம்பரம். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாதவர்களுக்கான தெரு இது. ஒரு பெண்(களின்) தொப்பியின் விலை 4600 ரூபாய். செண்ட் விலை 8000 ரூபாய்.
சீனாவில் இப்படியும் ஒரு தெரு உள்ளது என்று தெரிந்து கொள்ளவே இந்த விஷயம் பயன்பட்டது.
”லேனா சார், யாரையும் பேட்டி காணும் எண்ணம் உள்ளதா உங்களுக்கு?”
”அப்படியெல்லாம் ஒர் எண்ணமும் இல்லை. ஏன் கேட்கிறீர்கள்?”
”நீங்கள் வந்திருப்பது பிசினஸ் விசாவில். வெளிநாட்டிலிருந்து வரும் எவரும் இங்கு பத்திரிகைக்காகப் பேட்டி எடுக்கக்கூடாது என்று சட்டமே உள்ளது.”
”அப்படியா?”
”ஆமாம். சீனாவுக்கு வரும் விருந்தினர்களின் கடமைகள் என்று ஒரு வெளியீடு தருகிறேன். படித்துப் பாருங்கள்”
”அவசியம் படிக்கணும்.”
இரவு வீட்டை அடைத்ததும் தந்தார். தூங்கப் போகுமுன் சற்றுப் படிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். திபெத்திற்கோ, ஷென்ஸோகன், ஜுகாய் ஸியாமென் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? மின்ஸ்ட்ரி ஆப் பப்ளிக் செக்யூரிட்டியிடம் சிறப்பு அனுமதி பெறுங்கள் என்று இருந்து. நல்லவேளை இங்கெல்லாம் நான் செல்வதாக இல்லை.
ஹாய்நன், ஹாய்கூ ஆகிய பகுதிகளுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? இதற்கும் சிறப்பு விசா வாங்க வேண்டும்.
என்னது! விசாவிற்குள் விசாவா?
உல்லாசப் பயணிகளுக்கு வேலையில் சேரும் எண்ணம் அடியோடு கூடாது. ஏதும் பாடத் திட்டத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது. சுற்றுலாப் பயணி என்பதற்கான அத்தாட்சியை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். அதிகபட்சம் 5000 அமெரிக்க டாலர் மட்டுமே (ரூ.20,00,00) உள்ளே கொண்டு வரலாம்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…










































May 19th, 2008 at 11:15 am
Dear Brother Lena,
Well, wish to hear the same. Tamilvanan.com is very super.