Friday 16 May 2008
வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
எங்கள் இல்லத்து வாகனங்களைச் சுத்தம் செய்யும் ஒருவர் ஒரு முறை நேரங்கெட்ட நேரத்தில் வந்து மணியடித்தார். தன் தம்பி ஒரு சாலை விபத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உடனே ஊருக்குப் போக வேண்டும் என்றும், இதற்குப் பணம் வேண்டும் என்றும் கேட்டார்.
அதன்படி கொடுத்ததோடு, நம்பிக்கையூட்டிச் சில வார்த்தைகள் சொன்னேன். ”பதற்றப்படாதீங்க. உங்க தம்பி நல்லா ஆயிடுவார். வீணாயும் விபரீதமாயும் கற்பனை பண்ணிக்கிட்டுக் கவலையோட பயணம் பண்ணாதீங்க். நம்பிக்கையாய் இருங்க. தைரியமாக இருங்க. கலவரப்பட்டுப் பல பேர் செல்போன்ல பேசுவாங்க. கலங்காதீங்க.”
”அவுங்களுக்கும் சேர்த்து தைரியம் சொல்ற அளவுக்கு நீங்க மாறணும் என்ன?”
ஊர் சென்று சில நாள்களில் திரும்பி வந்த இவர், ”அவசரத்திற்குப் பணம் கொடுத்தீங்களே, அதைவிடப் பெரிசா நான் நினைக்கிறது நீங்க நம்பிக்கையாய் நாலு வார்த்தை சொன்னீங்களே அதைத்தான்” என்றார். உறவினர்கள் சொன்ன அளவுக்கு அது ஒன்றும் மோசமான விபத்து இல்லையாம். வார்த்தைகள் ஆளுக்கு ஆள் மாற, விஷயம் விபரீதமாக்கப்பட்டு விட்டது.
மோசமான பொருளாதாரச் சேதங்களைச் சந்தித்தவர்கள், மோசமாகப் பாதிக்கப்பட்ட உடல்நிலையை உடையவர்களின் உறவினர்கள், பெட்டிகளை, முக்கிய உடைமைகளைத் தொலைத்துவிட்டு மனம் கலங்கிப் பேசுபவர்கள், வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்பவர்கள், உயிருக்கு உயிரானவர்களைப் பறிகொடுத்துவிட்டு நிற்பவர்கள்; ஓடிப்போன மகளை நினைத்து வருந்துபவர்கள், இது தொடர்பான அவமானங்களைச் சந்திக்க அஞ்சுபவர்கள் என நம் வட்டத்தில் பலரையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க நேரும்போது, நடக்குமோ நடக்காதோ சாத்தியமோ இல்லையோ, இவர்களுக்கு நாம் நல் வார்த்தை சொல்ல வேண்டுமே தவிர, நடந்தவற்றின் மோசமான பின் விளைவுகளை இன்னும் விலாவாரியாகப் பேசி அவர்களது நம்பிக்கை வேர்களில் வெந்நீரை ஊற்றக் கூடாது. இத்தகைய பலரும் சூழ்நிலைகளை வென்று வெளிவந்து விடுகிறார்கள் அல்லது இவற்றை ஜீரணிக்கும் மனப்பக்குவத்தையேனும் வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள். அப்படிக் கடந்து வந்தபிறகு அப்பாதையைப் பின்னோக்கிப் பார்க்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் நமக்கு யார் யார் உதவினார்கள், யார் யார் கூடமாட இருந்து செயல்பட்டார்கள். யார் யார் நம்பிக்கையூட்டி நல்வார்த்தை கூறினார்கள் என்று எண்ணிப் பார்க்கும்போது நம் பெயர் அதில் இடம் பெற வேண்டும்.
மாறாக, ‘நானே வேதனையிலேயும் வெறுப்பின் விளிம்பிலேயும் இருக்கேன். இந்தாள் வேற வந்து….’ என்று நம்மை இந்த இரண்டாவது பட்டியலில் சேர்த்துவிடக் கூடாது.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?









































