Friday 16 May 2008

2008/05/16 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

வி.சேது, நெற்குப்பை.

பெரியாரின் கருத்துகள் இன்னும் நிலைத்திருக்கின்றனவே?

அவர் சிந்திக்கும்போது ஒரு மேதையைப் போல் சிந்தித்தார். சொல்லும்போது ஒரு பாமரத் தமிழனைப் போல் சொன்னார். அதனால்தான் அந்தத் தாடி சிந்தனைகள் ஏழைகளின் நாடிகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.


எஸ்.பாரதி, சென்னை.

வயதான அரசியல்வாதிகளை மூட்டை, முடிச்சுகளோடு வீட்டிற்கு அனுப்பலாமா?

மூட்டை முடிச்சுகளோடா? மூட்டை முடிச்சுகள் நம்முடையதுங்க. அவர்களை வெறும் ஆளாய் அனுப்பி வைப்போம்.


க.மணி, கடலூர்.

எப்போதும் படித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி ?

அவர்கள் நமது வீட்டு மேல்நிலை தண்ணீர்த் தொட்டி மாதிரி! பலருக்கும் பயன்படுகிறவர்கள். தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரம்பியிருப்பதால்தான் வீட்டில் எந்தக் குழாயைத் திருப்பினாலும் அதில் தண்ணீர் வருகிறது. அதுபோல்தான் இவர்களும்! தேவைப்படும் போதெல்லாம் மடை திறந்த வெள்ளமாய்க் கொட்டுவார்கள்.


ஆர்.விமல்ராஜ், திண்டிவனம்.

இப்போது பள்ளிப்பாடங்களும் சி.டி.யிலேயே வந்துவிடுகின்றனவே, இனி ஆசிரியர்களே வேண்டாமா?

ஆசிரியர்கள் இல்லாமல் எதுவும் நடவாது. நாங்கள் எல்லாம் முழுப் பழத்தைச் சாப்பிட்டோம். எங்கள் பிள்ளைகள் பழச் சுளையைச் சாப்பிட்டார்கள். பேரன்கள் இப்போது பழச் சாற்றை மட்டுமே குடிக்கிறார்கள். இதற்கே அவர்களுக்கு பராக்குக் காட்டி குடிக்க வைக்க வேண்டியிருக்கு.


வி.செளந்தர்ராஜன், பரங்கிமலை.

‘நானோ, எனது அமைச்சர்களோ மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்யும்போது, அவர்களுக்கான செலவுகளை யாரும் ஏற்க வேண்டியதில்லை’ என்ற குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் பேச்சு பற்றி?

இருங்க, எனது சதையைக் கிள்ளிக் கொள்கிறேன். குஜராத் இந்தியாவில்தானே இருக்கிறது. இதுவே நம் தமிழ்நாடாக இருந்தால்…? நமது மாண்புமிகுக்கள் முன் அந்த மாவட்டக் கருவூலமே வந்தால்தான் போச்சு! இல்லாவிட்டால் அந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு வேப்பிலைப் பூஜைதான்.


பி.தரணி, விருத்தாசலம்.

தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் மாறுமா?

இருமல், செருமல், தும்மல்கள் அங்காங்கே கேட்க ஆரம்பித்திருக்கின்றன. எத்தனை இந்தக் காய்ச்சல் என்பது அவாகள் (அரசியல்) டாக்டர்களிடம் வரும்போதுதான் தெரியும். டாக்டர்கள் இப்போது ஆர்வமாய் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அவர்களும் ‘கிளினிக்’ கதவைக் திறக்க ஆரம்பிப்பார்கள்.


டி.லோகேந்திரன், தருமபுரி.

உங்கள் புத்தகங்களை எங்களுக்குப் பரிசாகத் தருவீர்களா?

எழுத்தாளர்களை இந்தச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும். இப்படி ஓசி கேட்டால் எங்கே போவது. அந்தக் காலத்தில் புலவர்களை ஆதரிக்க மன்னவர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்தில் புரவலர்கள் தென்படுவதே அரிதாக இருக்கிறது.


எம்.காசி, திண்டுக்கல்.

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நடந்தபடி இருக்கின்றவே, இது ஏன்?

அ.தி.மு.க. எப்போதுமே புரட்சிகளுக்குப் பெயர் போன கட்சி! அதனால் இந்தப் புரட்சி எனக்கு மிரட்சி தரவில்லை.


கே.சங்கரன், சென்னை 92.

ராமதாசும், கலைஞரும் ராசியாகிவிடுவார்களா?

மல்யுத்த வீரர்கள் சண்டையிடுமுன் கை குலுக்குவதைக் கவனித்திருக்கிறீர்களா? எனக்கென்னவோ இவர்கள் கை குலுக்கும் எதிரிகளாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது.


ஜி.புருஷோத்தமன், அரக்கோணம்.

தமிழகத்தில் மட்டும் என்கவுன்டர்கள் அதிகரிக்கக் காரணம்?

அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள், சிறை, தண்டனை ஆகிய விஷயங்களில் காவல் துறைக்குக் கூட நம்பிக்கை குறைந்துவிட்டதுதான்!


ஆர்.வி.ராஜன், மதுராந்தகம்.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்கிறார்களே, இதை நம்பலாமா?

இருக்கும் பொருளை இனாமாய்க் கொடுத்துவிட்டு, இன்னொரு பொருளை நல்ல விலை கொடுத்து வாங்குவதற்குப் பெயர்தான் எக்ஸ்சேஞ்ச்! இந்த அர்த்தம் புரிவதற்குள் நான் இழந்தவை ஏராளம். இந்த அர்த்தம் புரிந்ததற்குப் பினனால் நான் வாங்காதவை ஏராளம்.


ஏ.வடிவேலு, சென்னை.

‘டிஸ்போஸபிள்’ தம்ளர்களால் என்ன இலாபம்?

என்ன இலாபமா? நமது வீட்டில் ‘இரட்டை தம்ளர் முறை’ என்ற புகார் விருந்தாளிகள் மத்தியில் வராது. இந்நாளில் இப்படியொரு புகார் இல்லாதது நமக்கு ஒரு பெரிய நற்பெயர்!


பி.பார்த்திபன், கும்பகோணம்.

சென்னையில் ஒலி மாசுபாட்டில் எப்படி வசிக்கிறீர்கள்?

ஒலி மாசுப்பாடா? கேட்டுக் கேட்டுப் பழகிப் பழகி இங்குள்ள வாகனச் சத்தங்களே எனக்கு மாஸ்ட்ரோ இசையாகிவிட்டன!


எல்.விஜயா, சென்னை-60.

இன்றைய காய்கறிகளின் விலை?

காய்களின் விலை இன்று கறி விலையாகிவிட்டது. முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். இப்பொழுது நினைத்தாலே கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு உசந்துவிட்டது.


ப.முருகன், திருவேற்காடு.

சென்னை நகரம் மேம்பட என்ன வழி?

டெல்லியில் உள்ள ஷீலா தீட்சித்தை இங்கு வரவழைக்க வேண்டும். டெல்லியின் முகத்தை என்னமாய் உயர்த்தி விட்டார் தெரியுமா? சட்டம் தன் சாட்டையைச் சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது. விதிகளை மீறுவோரின் விதி முடிந்தது என்று சொல்லுமளவு முன்னேற்றம்.


டி.ராமதாஸ், முகப்பேர்.

தங்கக் காசு விஷயத்தில் நீங்கள் ஏதும்?

விளக்கொளியில் விழும் விட்டில் பூச்சியின் இரகத்தைச் சேர்ந்தவன் என்றா என்னை நினைத்தீர்கள்.


எஸ்.ராஜேந்திரன், பண்ருட்டி.

மீண்டும் பி.சி.ராய் விருது பெற்றுள்ள தமிழக டாக்டர் ரங்கபாஷ்யம் பற்றி…?

டாக்டர் ரங்கபாஷ்யம் என் நண்பரின் தாய்மாமன்தான். இரண்டு முறை பி.சி.ராய் விருது என்பது பெரிய கெளரவம்தான். ஆனாலும் கொடுத்தவர்களுக்கே கொடுக்காமல் புதியவர்களுக்கு இது கிடைப்பதுதான் எனக்கு மகிழ்வைத் தரும்.


என்.சுரேந்தர், சென்னை.

சென்னை கிங்க்ஸ் அணி ஏன் இப்படிச் சுரத்து இன்றி ஆகிவிட்டது?

மாத்யூ ஹைடன், ஹஸ்ஸி இருவரும் புறப்பட்டுப் போனதும் காற்றிறங்கிய பலூனாய் ஆகிவிட்டது. பிளமிங்கோ காலை வாருகிறார். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும். நம்பிக்கையுடன் காத்திருங்கள்.


டி.விக்டர், திருநெல்வேலி.

இன்ஜினியரிங் படிப்பில் சேரச் சலுகைகள் வழங்கப்படுவது நல்லதா?

தரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி. ஏற்கெனவே நுழைவுத் தேர்வு இல்லாமல் தரம் தரையில் வீழ்ந்து கிடக்கிறது. இதனை அதலபாதாளத்திற்குக் கொண்டு செல்ல கல்வித்துறை முயற்சி செய்வது கவலையளிக்கிறது!


எம்.பவுன்குமார், மாதவரம்.

ஒருவன் எப்போது நல்ல பெயர் வாங்க முடியும்?

மன்மோகன்சிங் மாதிரி சுயமாக ஒரு சொந்தக் கருத்து இல்லாமலிருந்தால் கடைசி வரை நல்ல பெயர்தான்! என் வீட்டில் நான் மன்மோகனாகி எவ்வளவோ வருடங்களாச்சு!


கே.ராஜவேலு, எட்டயபுரம்.

உணவுப் பொருள் விலை உயர்வுக்கு இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திதான் காரணம் என்ற புஷ்ஷின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதே?

இதனை ஒரு பாராட்டாகவும் ஆரோக்கியக் கோணத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஜி.சுந்தர், வேலூர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்பற்றி ?

ஆரோக்கியமாக நடந்த நாட்கள் பாதி. இதில் இருக்கைகள் காலியாகக் கிடந்த நாட்கள் மீதி. பாராளுமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணித்துவிட்டு என்னதான் செய்வார்கள் இந்த உறுப்பினர்கள்?


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

குருவி படம் எப்படி?

படம் பார்த்த என் உறவினர் ஒருவரிடம் கேட்டேன். திட்டினார். நண்பரிடம் கேட்டேன் குறை சொன்னார். நான் பார்த்தால் சரியாகச் சொல்லிவிடுவேன்.

09 May 2008 ஜூனியர் கேளவி-பதில்
02 May 2008 ஜூனியர் கேளவி-பதில்
25 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
18 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
11 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
04 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
28 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
Related Post

Leave a Reply