Thursday 8 May 2008

2008/05/09 Lenavin Payna Katturai

shanghai1.jpgசீனம் சென்று வந்தேன்!

”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

சீனாவில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி அபாரமானது. பள்ளி நாள்களிலேயே சிறந்த விளையாட்டு வீரர்களை நன்கு அடையாளம் கண்டு, இவர்களை நன்கு ஊக்கப்படுத்துகிறார்கள்.

பெற்றோர், கல்வி அமைப்பு, அரசு என மூவரும் கூட்டணி அமைத்து இவர்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள். சிபாரிசுகள் இல்லை. சில்லறைகள் விளையாடவில்லை. அரசியல் தலையீடு இல்லை.

விளையாட்டு வீரர் என்றால் இவருக்கு வேண்டுமென்கிற வரையிலும் போதுமென்கிற வரையிலும் வழிகாட்டவும், நிதி உதவி செய்யவும் ஆதரிக்கவும் முன்வருகிறார்கள்.

எந்நேரம் ஆனாலும் அயர்வு இல்லாமல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது.

சீனர்களிடம் உடல் வலிமையை விட மனவலிமை மிக அதிகம். சீனர்கள் மனத்தில் ஒன்றைக் கருதிவிட்டால் முடிக்காமல் விடமாட்டார்களாம். சோதனைகளைக் கண்டு அஞ்சும் பழக்கமெல்லாம் இல்லையாம்.

”களைப்பா இருக்கா?” கேட்டவர் செந்தில் குமார்.

”ஏன் கேட்கிறீர்கள்?”

”களைப்பா இருந்தா வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா பக்கத்துலதான் நான்சிங் ஷாப்பிங் தெரு, அவசியம் பார்க்க வேண்டிய தெரு. இங்கே வர்றவங்க நான்சிங் தெருவைப் பார்க்காமப் போகமாட்டாங்க. நீங்க இதைப் பத்திக் கேட்கக் காணோம்.”

”உண்மையில நான்சிங் தெருவைப் பற்றி எனக்குத் தெரியாது. அவசியம் போவோம்.”

”என் கூடவே வாங்க. நான்சிங் தெருவுல பொண்ணுங்க தொல்லை ஜாஸ்தி.”

”என்னது! பொண்ணுங்க தொல்லையா? அப்படீன்னா?” என்று நான் அப்பாவியாகக் கேட்க,

”இதெல்லாம் சட்டுன்னு புரிஞ்சுக்க வேணாமா? ‘அந்த மாதிரிப் பெண்ணுங்க.”

”அடக் கண்றாவியே! என்ன செந்தில் சார் சொல்றீங்க? ஷாப்பிங் தெருவுலயா இப்படி?.”

”இங்கதான் பெரிய அளவுல கஸ்டமர்கள் கிடைப்பாங்க. பார்க்கத் தானே போறீங்க வேடிக்கையை.”

நான்சிங் தெருவுக்கு பஸ் பிடித்துப் போனோம். ”டாக்ஸியில போகலாமா?” என்று கேட்ட செந்தில்குமாரை நான்தான் மாற்றினேன்.

”பஸ் அனுபவமும்வேண்டும்.”

பஸ்ஸில் கண்டக்டரே கிடையாது! அட என்கிறீர்களா? சினாவிலா ஆண்களுக்குப் பஞ்சம்? ஏன் இப்படி?

ஷாங்காய் நகரில் 1100 பேருந்துகள் ஓடுகின்றன. காலை முதல் மாலை வரை ஓடும் பேருந்துகளுக்கு ‘2′ என்று பெயர். இரவு சேவை செய்யும் பேருந்துகளுக்கு ‘3′ என்று பெயர். மாடி உள்ள பேருந்துகள் என்றால் ‘9′. ஏ.சி. உள்ள பேருந்துகள் என்றால் ‘10′. யுவான் எனப்படும் சீனக் காசில் அதான் கட்டணம் - எங்கு போனாலும் முன்கூட்டியே சில்லறை வைத்துக் கொள்ள வேண்டும். சில்லறை ஏதும் திரும்பக் கிடைக்காது. சிங்கப்பூர் போலத்தான் ஏறும்போதே உண்டியல் போல இருக்கிறது. காசு விழுகிற சத்தத்தை வைத்து நாம் போட்டுவிட்டுத்தான் ஏறுகிறோம் என்பதை ஓட்டுநர் உணர்ந்து கொள்கிறார். சிலரை உன்னிப்பாக பார்க்கிறார். காசு போடுகிறார்களா என்று. சில நேரம் போக்குவரத்தில் கவனமாக இருக்கிறார். போட்டோம், போடலை என்று நிரூபிக்க வழியில்லை. எல்லாம் ஒரு நம்பிக்கை அடிப்படையில்தான் இயங்குகின்றன.

பேருந்தில் அதிகமாகக் கூட்டமில்லை. இரவானால் பேருந்தில் கூட்டம் குறைந்து விடுமாம். ஏதோ ஒருவித அச்சத்தில் பயணிக்காமல் இருக்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது.

”இதோ பாருங்கள், காந்த சக்தியில் ஓடும் இரயில்” என்று என் கவனத்தைத் திசை திருப்பினார் செந்தில்குமார்.

உலகிலேயே காந்த சக்தியால் மிதந்து செல்லும் இரயில், பயன்பாட்டில் இருப்பது ஷாங்காய் நகரில்தான். மொத்தப் பாதையின் தூரமே 33 கி.மீட்டர் தான். வேகமோ அபாரம் 430 கி.மீ. ஒரு மணிக்கு! ‘உய்க்’ என்றது இரயில். கடந்தே போய்விட்டது. 33 கி.மீ. தூரத்தை 8 நிமிடங்களில் கடந்து விடுமாம்.

”அப்படியானால் ஒரு மணிக்கு 247 கி.மீ. வேகமாகத்தான் இருக்க முடியும்” என்றேன்.

”பத்திரிகையாளர் என்று காட்டுகிறீர்கள். 430 கி.மீட்டர் வேகம் செல்லக்கூடிய இந்த இரயிலின் முழு வேகத்தையும் பயன்படுத்தவில்லை. கிட்டத்தட்டப் பாதி சக்தியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.”

”ஓ!” என்றேன்.

”இதில் செல்ல கட்டணம் எவ்வளவு என்று கேட்கவில்லையே நீங்கள்!”

”சொல்லுங்கள்.”

”50 யுவான்கள்.”

‘அடேயப்பா!’

சீனாவில் கண்டக்டர்கள் இல்லை என்பதால், மற்றவற்றிற்கும் பஞ்சம் என்று கற்பனை வேண்டாம். தொலைபேசியில் அழைத்தால் மருத்துவர்கள் வருவார்கள். ஆனால் தீட்டப்படும் பில்லுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

தொலைபேசியில் அழைத்தால் வருகிற மற்றொரு பிரிவினர் மசாஜ் செய்பவர்கள்.

ஷாங்காயை பூங்கா நகரம் என்று சொல்லலாம். எங்கு பார்த்தாலும் பூங்காக்கள். பெயருக்குப் பூங்காக்களாக இல்லாமல் மிகப் பெரியவையாய் இருக்கின்றன. தனியார் வீட்டுத் தோட்டங்களைப் போல அட்டகாசமான பராமரிப்பு. எங்கும் எதிலும் சுத்தம். சந்தடியான நாடு. ஏகப்பட்ட ஜனங்கள். எவ்வளவோ அசுத்தமாக இருக்கலாம். ஆனால், சீனர்களிடம் சுத்த உணர்வு இயல்பாக இருக்கிறது. போகும் வழியில் ஓட்டல் ஒன்றில் ஒரு நண்பனைப் பார்க்கும் வேலை இருந்தது. ஷாங்காயின் ஓட்டல் வசதிகளைப் பற்றி அபாரமாகப் புகழ்கிறார் செந்தில்குமார்.

ஷாங்காயில் மட்டும் 300க்கு மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் உள்ளனவாம். சாதாரண இரக ஓட்டல்களோ 1000த்திற்கு மேலாம். சுற்றிப் பார்க்க வருகிறவர்களுக்கும், விழாக்கள் நடத்துகிறவர்களுக்கும் மாநாடு, கூட்டங்கள் நடத்துகிறவர்களுக்கும் தங்குமிடமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

ஒரு நகரம் வளர வேண்டுமானால் தங்குமிட வசதிகள் போதுமானவையாக இருக்க வேண்டும். இதை நன்கு கவனத்தில் கொண்டு சீன அரசு ஓட்டல்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

ஷாங்காயில் மொத்தம் இரண்டு இலட்சம் படுக்கைகளைக் கொண்ட ஓட்டல்கள் இருக்கின்றனவாம். ‘அடி சக்கை’ என்று வியந்தது மனது.

நான்சிங் தெரு தூரத்திலிருந்தே அப்படி ஒரு ஜொலிப்பு ஜொலித்தது. தி.நகர் ரங்கநாதன் தெருவைப் போல இத் தெருவிலும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லையாம்.

சிறுசிறு தடுப்புக் கற்களைப் போட்டு வாகனங்கள் நுழையாதபடி செய்திருக்கிறார்கள்.

தடுப்புக் கற்களைக் தாண்டி நான்சிங் தெருவில் காலை உள்ளே வைத்ததுமே ஒரு பெண் எங்களை மறித்தாள். பார்வையா அது? எங்களை விழுங்குகிற பார்வை அது!

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்! 

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Post

Leave a Reply