Thursday 8 May 2008
அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
கல்லூரியில் பொருளாதாரம் படித்தது உண்டு. ஆனால், இதை அலசி ஆராயுமளவிற்கு எனக்கு ஆற்றல் போதாது.
எதிர்க்கட்சிகளும் மக்களும் இதைப்பற்றி இப்போது அதிகம் கவலைப்படுவதால், இது குறித்த என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம் 7 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்ததை ஒரு காரணமாகக் கூறுகிறார்கள்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இதன் பலனை உணர மூன்று வாரங்கள் வரை ஆகலாம். இறக்குமதிகளில் சில சலுகைகள் தரப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, உருக்கு இரும்பின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. பணவீக்கத்திற்கு உருக்கு இரும்புதான் பெரும்பான்மை காரணம் என்கிறார்கள்.
பணவீக்கத்தை 5.5 சதவிகிதமாகக் குறைக்க எப்படியும் அடுத்த ஆண்டு ஆகிவிடும் என்கிறார்கள்.
மத்திய அரசு அறிவித்துள்ள 1500 கோடி ரூபாய்க்கான வரிச்சலுகைகள் ஓரளவேனும் பயனைத் தருமானால் நல்லது.
அந்நிய நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் உணவுப் பொருள்களைப் பதுக்குவதாலும் ஆன்லைன் வர்த்தகத்தாலும் விலைவாசி உயர்ந்துவிட்டதாக கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ்கரத் குறிப்பிடுகிறார்.
ஆன்லைன் வர்த்தகத்தின் கொடுமையை அரசுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மத்திய அரசு அசைந்து கொடுக்காமல் இருப்பது வியப்புதான்! இதில் மத்திய அரசு மெளனம் சாதிப்பானேன்?
நல்ல வேலையாக சில அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மீது ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் ஏற்றுமதி குறைவதன் மூலம் உள்ளூரில் புழக்கம் அதிகமாகும். விலை ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.
பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும் விலைவாசி உயரும். இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் பண இருப்பை மேலும் உயர்த்தியிருக்கிறார்கள். இது விலைவாசியை ஓரளவு கட்டுப்படுத்தும் என்று நம்புகிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராவ்! உலக அளவில் விலைவாசிகள் உயர்ந்துவிட்டதும் ஒரு காரணம் என்கிறார் நம் தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன். இதை வலுவான காரணமாக ஏற்க முடியவில்லை.
ஒரு மாநில அரசு தம் பங்கை இவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்திவிட முடியாது. பதுக்கல்காரர்களை இனம்பிரித்து ஒடுக்கினாலே நல்ல பலன் இருக்கும்.
இரு பொருளாதார மேதைகள் பெரிய பொறுப்புகளில் இருந்தும், இந்திய மக்கள் இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை இரங்கத் தக்கது.
ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிக்காரர்களை மட்டும் விலைவாசி உயர்வுக்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது.
இடைத் தரகர்களின் பேராசைகளும் விலைவாசி உயர்விற்குக் காரணம். மக்களும் வாங்கும் சக்தி இருக்கிறதே என்று வாங்கிக் குவிக்காமல், தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மிதமிஞ்சிய தேவைதான் ஒரு பொருளின் விலையை உயர்த்துகிறது. உச்சாணிக் கொம்பில் இருக்கிற பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவற்றின் உபயோகத்தைக் குறைத்தாலே விலைவாசி தானாக இறங்கி வரும்.
அதே நேரத்தில் இவற்றின் உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இவ்வளவு கடுமையான விலைவாசி ஏற்றத்தில் சர்க்கரை விலை பெரிதாக உயரவில்லை பார்த்தீர்களா? என்ன காரணம் மிதமிஞ்சிய உற்பத்திதான்.
எனவே உற்பத்தியைப் பெருக்கவும் உரிய துறையில் உள்ள மக்கள் முன்வர வேண்டும்.
விலைவாசிக் கட்டுப்பாடு என்பது ஒரு கூட்டு முயற்சி. ஆள்பவர்களின் தலைவலி. நமக்கென்ன வந்தது? நம் கையில் என்ன இருக்கிறது என்று பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க முடியாது.
அனைவரும் கைகோர்க்க வேண்டிய தருணமிது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?









































