Thursday 1 May 2008
இதுவன்றோ தருணம்!
டெல்லியில் நடந்த ஊராட்சித் தலைவர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்து ஓர் ஆச்சரியமான நிலைப்பாடு.
தமிழக அரசு என்ன சொன்னாலும் அதை ஆமோதிக்கிற நிலையில் மத்திய அரசும், மத்திய அரசு என்ன சொன்னாலும் அதை ஆமோதிக்கிற நிலையில் தமிழக அரசும் இருப்பதுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.
இம்மாநாட்டில் மத்திய அரசு நிறைவேற்ற இருந்த சில தீர்மானங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைக் குறைப்பதாகவும் பறிப்பதாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்பது தமிழக அரசின் வாதம்.
இம்மாநாட்டில் எடுக்கப்பட இருந்த முடிவுகள், மாநில அரசைப் பலவீனப்படுத்துவிடும் என்பது தமிழக முதல்வர் சட்டசபையில் முன்வைத்துள்ள வாதம்.
இருக்கிற அதிகாரமே போதாது என்கிற கூப்பாட்டை பல மாநிலங்கள் போட்டுக் கொண்டிருக்க அடிமடியில் கைவைக்கும் இந்த மாநாட்டிற்கு ஒருபோதும் துணை போகமாட்டோம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.
இதன் விளைவாக பிரதமர் தமிழக அரசிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது மனப்புண்ணுக்கு மருந்தாக அமைந்துவிட்டது என்று ஆறுதல் பட்டிருக்கிறார் முதல்வர்
இந்த எதிர்ப்பு நன்மையில் விளையும் என்கிற எதிர்பார்ப்பையே பிரதமரின் கடிதம் ஏற்படுத்தியிருக்கிறது.
கபடிக் கபடியில் எதிராளிகள் பின்வாங்கும்போது அவர்களை மறுஎல்லைக் கோடுவரை கொண்டு செல்வதுதான் சிறந்த விளையாட்டு நுணுக்கமாக இருக்கிறது.
அண்ணா, மாநில சுயாட்சி என்று குரல் எழுப்பினார். இது பிரிவினைவாதமாகப் பார்க்கப்படவே, அதை அடக்கி வாசித்தார்.
இதையே நம் இந்திய அரசியலமைப்புக்குப் பாதகம் ஏற்படாதவண்ணம் ஆக்கபூர்வமான திருத்தங்களைச் செய்து ஒரு புதிய வரைவைக் கொடுத்தால் தி.மு.க. எண்ணியதும் நிறைவேறும்; மத்திய அரசு ஒவ்வொன்றிலும் மூக்கை நுழைப்பதும் குறையும்.
இதற்கான சரியான சந்தர்ப்பம் இது. இதைத் தமிழக அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டால் பல மாநிலங்களின் பிரதிநிதியாகத் தமிழக அரசு இந்திய அளவில் போற்றப்படும் என்று தோன்றுகிறது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?









































