Thursday 1 May 2008
கவனிப்பில் உன்னிப்பு!
ஆங்கிலத்தில் Looking என்றும் observing என்றும் இரு சொற்கள் உண்டு. பார்ப்பது வேறு, கவனிப்பது வேறு.
திருமணத்திற்குப் போனேன்; சாப்பிட்டேன்; வாழ்த்தினேன்; வந்தேன் என்பவர்கள் உண்டு.
திருமணத்திற்கு யார் யார் வந்தார்கள்; பெண்களின் பெற்றோர், அண்ணன், அக்காள், மாமா யார்? யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள்; அவர்கள் என்ன வேலையில் இருக்கிறார்கள்; பெண்ணின் அலங்காரம் எப்படி? என்ன நகை எவ்வளவு எடையில் போட்டிருந்தார்; மேடை அலங்காரம் எப்படி இருந்தது; சிறப்பு ஏற்பாடுகள் என்ன? திருமணம் நடத்தியவர்கள் கோட்டை விட்ட விஷயங்கள் என்னென்ன; உணவுப் பட்டியல் என்ன; யார் யார் சாப்பிட்டார்கள்; யார் யார் கதையடித்துவிட்டு ஒடினார்கள். விலாவாரியாகச் சொல்கிறவர்கள் உண்டு.
நீங்கள் இவர்களுள் இரண்டாம் இரகத்தவராக இருப்பின் நல்லது. இப்படியெல்லாம் உன்னிப்பாக நுணுகி ஆராய்ந்து பார்ப்பது அநாகரிகம் அல்லவா? இதெல்லாமா நம் வேலை என்கிறீர்களா?
பிரதமருக்குப் பின்னால் நின்று கொண்டு நிகழ்வில் நடக்கும் அத்துணை விஷயங்களையும், அசையும் அவ்வளவு பேர்களையும் இமை கொட்டாமல் கவனிப்பாரே ஒரு மெய்க்காப்பளார். இப்படித்தான் பார்க்கக் கூடாதே தவிர, சாதாரணமாகப் பார்த்துப் பல விஷயங்களைப் பதித்துக் கொள்வது என்பது தவறல்ல.
பள்ளியோடும் கல்லூரியோடும் கற்றல் முடிந்து விடுவதாகவே இன்னமும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தவறு. கற்றல் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. திருமண வீடுகள் மட்டுமல்ல, எங்குமே உன்னிப்பாகக் கவனிக்கும்போதுதான் பல பாடங்கள் நம் மனத்தில் நம்மையுமறியாமல் பதிகின்றன. என் நண்பர் ஒருவர் மிகப் பிரமாதமாக வீடு கட்டியிருந்தார். ”யார் ஆர்க்கிடெக்ட்?” என்றேன்.
”எவருமில்லை. நானேதான். மனையை வாங்கிப் போட்டதுமே போகும் வீடுகளிலெல்லாம் உள்ள சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தேன். எங்கெல்லாம் சிறப்பு அம்சங்களைக் கண்டேனோ, அவற்றையெல்லாம் குறித்துக் திரட்டி இப்படித்தான் என் வீடு அமைய வேண்டும் என்று எங்கள் இன்ஜினீயரிடம் சொன்னேன். அவ்வளவுதான்” என்றார்.
வாழ்க்கையைப் பாமரனைவிட ஒரு படைப்பாளன் கூர்மையாக உன்னிப்பதால் தான் அவனுக்குக் கருக்கள் கிடைக்கின்றன. ஒரு சிறந்த இயற்கை இரசிகனே சிறந்த ஓவியனாகிறான். ஒரு கூர்மைப் பார்வை கொண்ட காவல்துறை அதிகாரிக்கே குற்றங்களின் தடயங்கள் தட்டுப்படுகின்றன.
இனி நம் கவனிப்பில் உன்னிப்பு வளரட்டும்!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?









































