Friday 2 May 2008

2008/05/02 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

என்.சுரேந்தர், விருதுநகர்.

ராஜேஷ்குமாரின் கதை படமாகிறதே?

ஆமாம். ஓர் இரவு நேர வானவில் எனும் நாவல் (அகராதி என்கிற பெயரில் படமாகிறது. தொலைகாட்சிப் புகழ் இயக்குநர் நாகர்). வெங்கடேஷ் இயக்குகிறார். கதாநாயகன் ப்ரதீப், மோனிஷா நாயகி. தமிழ்த் திரைப்பட இரசிகர்கள் முன்புபோல் இல்லை. புதியவர்களை இருகரம் நீட்டி வரவேற்று புதுமைகளை வெற்றிபெறச் செய்கிறார்கள். சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் ராஜேஷ்குமாரும் ஜெயிக்க வேண்டும். 1600 நாவல்களை வற்றாமல் வறளாமல் எழுதிக் குவித்திருக்கும் அற்புதமான படைப்பாளருக்கு இந்தச் சமூகம் இன்னும் கூடச் சிறந்த அங்கீகாரத்தைத் தரவேண்டும்.


ஆர்.விஜயன், தூத்துக்குடி.

இந்தியா முழுவதும் 910 கட்சிகள் இருக்கின்றனவாமே?

ஆக்கப் பொறுத்தோம்! கொஞ்சம் ஆறப் பொறுப்போம். நம் அரசியல்வாதிகள் அதைச் சரிப்பண்ணிடுவாங்க. உங்களுக்கு 1000தானே வேணும்!


க. சரசுவதி, கொண்டிப்புதூர்.

சுயமரியாதைத் திருமணம் இந்தியாவெங்கும் அமலாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கலைஞர் கடிதம் எழுதியிருக்கிறாரே?

பதில் கடிதமோ, போதிய அஞ்சல்வில்லைகளோ அந்தக் கடிதத்தோடு சேர்த்து அனுப்பக் காணோம்! அதனால்தான் இதுபற்றி மத்திய அரசிடம் இருந்து ஒரு பதிலும் வரக் காணோம்!


சித. தவமணி, மேலூர்.

நான் பதுங்கியிருப்பது மீண்டும் பாய்வதற்காகத்தான் என்கிறாரே ஈ.வெ.கி. எஸ். இளங்கோவன்?

காங்கிரசைப் பாதிப் புலி என்கிறார். ஆனால் இந்தப் புலி புல்லைத்தான் அதிகம் விரும்புகிறது.


எல். அருணாசலம், முசிறி.

கூட்டணி பற்றி விஜயகாந்த் பரிசீலிக்கிறாராமே?

மீசை முளைச்சாச்சு! கல்யாணம் இல்லாமல் எத்தனை நாளைக்கு கட்டைப் பிரம்மசாரியாக இருப்பது? இந்த வயசுப் பிள்ளைக்கு இதை நாமா சொல்லிக் கொடுக்கணும்?


ஏ.சாகுல்ஹமீது, பாளையங்கோட்டை.

இந்தியாவில் வருடம் முழுக்கத் தேர்தல் நடக்கிறதே?

நல்லது! மக்களுக்கு இதுதான் ஒரு இடைக்கால நிவாரண உதவியைத் தருகிறது. நாட்டுப் பொருளாதாரம் எக்கேடு கெட்டால் அரசியல்வாதிகளுக்கென்ன!


எஸ்.இமானுவேல், அரக்கோணம்.

பாலகங்காதர திலகர், நீலகண்ட பிரம்மச்சாரி, கோபாலகிருஷ்ண கோகலே, வ.உ.சி.யெல்லாம் பயங்கரவாதிகளா?

தமிழகத் தேர்வாணையத் தேர்வாளர்களால் மட்டுமே இப்படிக் கேட்க முடியும். நீங்களோ, நானோ கேட்க முடியாது. அவர்கள் என்றால் சுதந்தரமானவர்கள்.


ஜே.தர்மராஜ், கோயமுத்தூர்.

அரசு ஊழியர்கள் தொழில்வரியிலிருந்து விலக்குத் கோருகிறார்களே? இது அவர்களின் நீண்ட காலக் கோரிக்கையாய் இருக்கிறதே?

செய்யாததற்கு வரியா, சிலர் கேட்கிறார்கள். இவர்கள் கேட்பதில் நியாயம் உள்ளது.


எஸ்.ஆரோக்கியசாமி, புதுக்கோட்டை.

மும்பையில் தற்போது நடப்பது என்ன?

சிவசேனா + வட இந்தியர் VS நவ்நிர்மாண் சேனா + மராத்தியர். மும்பையின் இன்றைய பிரச்னை புரிய இதைவிட எளிய ஃபார்முலா இல்லை.


எம்.பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர்.

தோழமைக் கட்சிகள் ஒற்றுமையோடு இருந்தால் அடுத்த முறையும் நமக்குதான் ஆட்சி என்கிறாரே கலைஞர்?

அவருக்குத்தான்! (அடுத்தவர்களுக்கு இல்லை) சந்தேகமில்லை. எனக்குத் தெரிந்து அரசியலில் இவரை மிஞ்சும் கலைஞர் முன்பு இருந்ததில்லை. பின்பு இருக்கப் போவதுமில்லை.


சி.டி. நாராயணன், மதுரை.

கல்யாணத்திற்கு முன் காதலர்கள், கல்யாணத்திற்குப் பின் காதலர்கள்?

கல்யாணத்திற்கு முன் இளநீரில் ஓட்டோடு ஒட்டியிருக்கும் வழுக்கை. கல்யாணத்திற்குப் பின் அந்த ஓட்டிலிருந்து விலகி நிற்கும் கொப்பரை!


நா. வீரப்பன், அம்பத்தூர்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் கலாச்சாரம் இப்போது இல்லையாமே?

அந்தக் கலாச்சாரமே மாறிவிட்டது. இப்போது கன்னத்தில் யார் அறைகிறார்கள்? முதுகில்தானே குத்துகிறார்கள்.


கே.ஆர்.நாச்சிமுத்து, கடலூர்.

குடிமக்களை விடச் சிறைக் கைதிகளுக்கு இப்போது வசதிகள் பெருகிவிட்டதே?

எல்லாம் ஆட்சியாளர்கள்தாம் காரணம். நாமும் ஒரு நாள் அங்கு போகலாம் என்பதை நினைத்து இப்போதே அங்கு வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.


எஸ்.ஜெகந்நாதன், மும்பை.

கபில்தேவின் வழியைப் பின்பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியன் பிரிமியர் லீக்கைச் சிறப்பாக நடத்துவதைப் பற்றி…?

கபில்தேவைப் பின்பற்றி என்றா சொல்கிறீர்கள்? இல்லை. 20-20 ஆட்டத்தை இந்தியாவில் வண்ண மயமாக நடத்துவதை முதலில் சிந்தித்துச் செயல்பட்டது கிரிக்கெட் வாரியம்தான். கபில்தான் இதைக் காப்பியடித்தார். ஆனால் கபில்தேவ் இந்த ஓட்டப்பந்தயத்தில் எங்கோ பின்தங்கிவிட்டதாக தகவல். வெவ்வேறு நாட்டுக்காரர்கள் ஒரு விக்கெட் விழுந்ததற்காகக் கட்டிப்பிடித்துக் குதிப்பதும் சேவாக்கின் 94 ரன்களுக்கு நம்மவர்களே கைதட்டாததும் நம் கிரிக்கெட் இளைஞர்களுக்கு இப்போதே உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் விளையாடக் கிடைத்த வாய்ப்பும் விநோதங்கள்; பிரமாதம் போங்கள்.


ஆர்.பரந்தாமன், குரோம்பேட்டை.

ராஜ்நாத் முண்டேவைச் சரிக்கட்டி விட்டதே பாரதிய ஜனதா?

30 வருடங்களாக ஒரே சிந்தனையில் ஒரே கட்சியில் இருக்கும் உண்மைத் தொண்டர் ராஜ்நாத். இவருக்குப் பிடிக்காத சில கட்சி நியமனங்களைத் தம்மைப் புறக்கணிக்கும் செயல் என்று புரிந்துகொண்டுவிட்டார். அப்படி இல்லை என்று இவரது பெருமதிப்பிற்குரிய அத்வானி விளக்கியதும் சரியாகிவிட்டார். ஆனால் இவருக்குப் பிடிக்காத கட்சி நியமனங்கள் தொடர்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. தொட்டிலையும் ஆட்டிவிட்டுப் பிள்ளையும் கிள்ளிவிடுகிற கலையை பாரதிய ஜனதாவும் நன்கு கற்றுக்கொண்டுவிட்டது!


வி.சுகுமார், சென்னை-80.

மருத்துவப் படிப்பிடங்கள் 300 அதிகரிக்கின்றனவாமே?

செலவினங்கள் எட்டாக்கனியாகவும் ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை படித்துக்கொண்டே இருக்க வேண்டியிருப்பதாலும், படித்து முடித்து வெளிவந்தாலும், 7500 ரூபாயை ஒட்டியே சம்பளம் கிடைப்பதாலும் இனி மருத்துவமனை நடத்தும் டாக்டர் அப்பாக்களின் - அம்மாக்களின் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க முன்வந்தால்தான் உண்டு. மருத்துவப் படிப்பிற்கு மரியாதை குறைந்து வருவது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.


ஆர்.ரமேஷ், முகப்பேர்.

கட்டாய கிராமச் சேவையை மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பது சரியா?

இந்தியக் கிராமங்களுக்கு இவர்களின் சேவை மிகவும் தேவை. மருத்துவமே ஒரு தியாகப் படிப்புதான். இந்தத் துறைக்கு வருகிறவர்களுக்கு முதலில் தியாக உணர்வு அவசியம். கிராம ஏழை மக்களுக்கு புதுமருத்துவர்களின் கருணைப் பார்வை அவசியம் தேவை.


எம்.முரளி, வேலூர்.

சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டல் நிலம் அரசு கைக்கு வந்துவிட்டதே?

தங்கச் சுரங்கத்தின்மீது கத்தரிக்காய் வியாபாரம் நடத்திய கதையாய் புல்புதர்களை வளரவிட்டு வீணாக்கிக் கொண்டிருந்தது உட்லண்ட்ஸ் ஓட்டல். இந்த இடத்தை எப்படிச் சொர்க்கபுரியாய் மாற்றப்போகிறார்கள் பாருங்கள்.


டி.துளசிராம், பெரம்பூர்.

அரவாணிகளின் நாகரிக பிச்சை தொந்தரவாகி வருவது பற்றி…?

அரவாணிகள் பரிவோடு கவனிக்கப்பட வேண்டிய பிரிவினர். எவருமே (வேரை) தர முன்வருவது இல்லை. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை. இவர்களை அரசு சரிவரக் கவனிப்பதில்லை. வெறும் அறிவிப்புகளோடு சரி. பாவம் பிழைத்துக்கிடக்க இவர்களும் என்னத்தான் செய்வார்கள்?


ஜே.மனோகரன், சென்னை.

படப்பையில் அரசு நிலத்தை மக்களே பங்குபோட்டுக் கொண்டதைப் பற்றி உங்கள் கருத்து?

விஷ விதை பரவ ஆரம்பிக்கும் முன் நீதிமன்றம் உறுதியளித்தபடி பட்டா தராமல் இழுத்தடித்து கொர் கொர் விடும் அதிகாரிகள் கூட்டம் இதில் விரைந்து இறங்கி மனிதாபிமானம் காட்ட வேண்டும்.

25 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
18 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
11 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
04 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
28 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
Related Post

Leave a Reply