Tuesday 29 April 2008
நசுக்கப்படுகிறாரா நயன்தாரா? பின்னணியில் வம்பு நடிகர் + நடிகை கூட்டணி?

நயன்தாராவின் சமீபகால சறுக்கல்களுக்குப் பின்னணியில் அவரது முன்னாள் காதலர் இருப்பதாக நயன்தாராவின் தரப்பு கருதுகிறது.
அந்த முன்னாள் காதலருக்கு ஜோடியாக ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்த அந்த மூணுஷா நடிகையும் அதற்கு உடந்தை என்றும் கூறப்படுகிறது.
நயன்தாரா நம்பர் இடத்தை நோக்கி நகரும் வேளையில் அவரை நசுக்கும் வேலையும் அவரை நோக்கி நகர ஆரம்பித்து விட்டதாக கோடம்பாக்க பட்சிகள் கூவத்தொடங்கியுள்ளன.
ரஜினியின் குசேலன், அஜித்துடன் ஏகன், விஜய்யுடன் சிங்கம் என்று தங்கமாய் ஜொலிக்கத் துவங்கிய நயனை தகரமாக்கும் முயற்சிகளில் ஒன்றுதான் சென்னை சூப்பர்கிங்ஸ் கிரிக்கெட் அணியின் விளம்பரத் தூதுவர் என்கிற உயர் அந்தஸ்த்தில் இருந்து இறக்கிவிடப்பட்டது என்கிறார்கள்.
‘இது யார் செய்த சதி என்பது எனக்குத் தெரியும்! கூட இருந்தே குழிபறிக்கும் அந்த வேலைகள் எனக்குத் தெரியாது. ஆனால், சமயம் வரும் போது தக்க பதிலடித் தருவேன்’ என்ற நயன்தாராவின் கொதிப்பிற்கு கூடுதல் பலனாக அவர்மீதே இன்னொரு அடியும் விழுந்திருக்கிறது.
விஜய்யுடன் ஜோடி சேருவதாக இருந்த சிங்கம் திரைப்படத்தில் இருந்தும் இப்போது நயன்தாரா நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
விளம்பரத் தூதுவராக அல்லது ஜோடியாக எதுவானாலும் விஜய்யுடன் நயனை நெருங்கவிடாமல் ஒருசக்தி தடுப்பதாகவும் அதற்கு பின்னணியில் நடிகர் பிளஸ் நடிகை கூட்டணி இருப்பதாகவும் செய்தி பரவிவருகிறது.
அதற்குக் காரணமாக சில நிகழ்வுகளையும் அந்தத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த மாதம் நடந்த கன்னடர்களுக்கு எதிரான தமிழ்த் திரையுலக உண்ணாவிரதத்தின்போது நயன் அருகில் அமர்ந்திருந்த அந்த மூணுஷா நடிகைக்கு குறுகிய நேரத்தில் படபடவென தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அதைத்தொடர்ந்து அவர் அவ்விடத்தைவிட்டு உடனே எழுந்துப்போனார் என்றும் ‘அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்’ என்று காத்திருந்ததுப் போல் காலியான அந்த நாற்காலியில் நயனின் முன்னாள் காதலர் நடிகர் வந்து அமர்ந்தார். அப்படி வந்தவர் கொஞ்சம்கூட லஜ்ஜை இல்லாமல் ஏதோ பசைப்போட்டு ஒட்டியதுப்போல் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார். நயன்தாராவும் வேறுவழியில்லாமல் நெளிந்தபடியே அமர்ந்திருந்தாகவும் பேச்சு.
அந்த மூணு ஷா நடிகை அந்த முன்னாள் காதலர் நடிகருக்கு திரைக்கு அப்பாற்பட்டும் நல்ல சிநேகிதி என்பதால் அவருக்கு இந்தவிதமாக உதவி செய்ததாகவும் அதேசமயம் நயனின் கிடுகிடு வளர்ச்சியால் வெறுத்துப்போயிருக்கும் அவர்கள் இருவரும் செய்யும் கூட்டணிச் சதிகளால்தான் நயன்தாராவின் வெற்றிகள் தடுக்கப்படுகின்றது என்றும் மனப்பூர்வமாக நம்புகிறது நயன்தாராவின் தரப்பு.
விஜய்யின் சிங்கம் திரைப்படத்தில் இருந்தும் நயன்தாரா நீக்கப்பட்டார் என்கிற உறுதிப்படுத்தப்படாத செய்தியின் பின்னணியிலும் இந்தக் கூட்டணி இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த முன்னாள் காதலரும் மூணுஷா நடிகையும் என்னச் சொல்லப் போகிறார்களோ. அடுத்த களேபரத்திற்கு காத்திருப்போம்.









































