Friday 25 April 2008

2008/04/25 Lenavin Payna Katturai

shanghai2.jpgசீனம் சென்று வந்தேன்!

கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

சீனாவில் சந்தித்த இந்துமதி, எழுத்தாளர் இந்துமதியின் எழுத்தின் மீது கொண்ட அபிமானத்தினால் பெயரிடப்பட்ட இந்துமதி என்பதை எண்ண எண்ண எனக்கு

வியப்பாக இருந்தது.

இந்துமதியின் கணவர் முத்துசங்கரிடம் சொன்னேன். ”இந்தியா திரும்பியதும் இந்துமதியிடம் சொல்லி அவசியம் இரு இந்துமதிகளையும் பேச வைக்க

நானாயிற்று. இதை உங்கள் மனைவியிடம் சொல்லாதீர்கள். ஆச்சரியப்பட வைப்போம்” என்றேன்.

ஆனால், இந்நேரம் வரை இதைச் செயல்படுத்தாத நான், தேர்தல் நேரத்து வாக்குறுதி போல ஆக்கியது குறித்து வருந்துகிறேன். ஆனால் விரைவில் இதனைச்

செயல்படுத்துவேன்.

முத்துசங்கர் ஓட்டல் விருந்தில் அமர்க்களப்படுத்தினார் என்றால், இந்துமதி வீட்டு விருந்தில் அமர்க்களப்படுத்தினார்.

கடுப்புத் தெரியுமா கடுப்பு?

அடக் கடுப்புத் தெரியாதா?

அட என்னங்க கடுப்புத் தெரியலைங்குறீங்க?

என்ன ஏகக் கடுப்பாயிட்டீங்களா?

இட்லியைக் குழிக்குள் வேகவைக்காமல் ஒரு டம்ளர் போன்ற பாத்திரத்தில் வேக வைத்து எடுத்தால் அதுதான் கடுப்பு.

இந்தக் கடுப்பை மிக மிருதுவாகச் செய்திருந்தார். அப்படியே புட்டுவும் செய்திருந்தார். நம்மவர்கள் எங்கு வாழ்ந்தாலும், நம் உணவை விடுவது இல்லை.

எங்களைப் போன்ற விருந்தினர்களுக்கும் இத்தகைய உணவு சலிப்பது இல்லை.

அதுவும் சீனாவில் வந்து இறங்கியது முதல் பாச்சுலர் சமையலும் ஓட்டல் உணவுமாய் ஓடிக்கொண்டிருக்கிறதா? ஓர் இல்லத்தரசியின் சமையல் என்றதும் ஒரு

பிடி பிடித்தோம்.

முத்துசங்கரிடம் சொன்னேன், ”நீங்கள் கொடுத்து வைத்த மனிதர். உங்க மனைவி பிரமாதமா சமைக்கிறாங்க”. முத்துசங்கர் பலமாகத் தலையாட்டினார்.

(இப்பத்தானே கல்யாணமாகியிருக்கு!) முத்துசங்கர் பல வருடங்களாக சீனாவில் பணிபுரிகிறார். உலகின் பல தரப்பு மக்களோடும் பழகியவராக இருக்கிறார்.

இந்தப் பின்னணியை நினைவில் கொண்டு இவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

”ஒவ்வோர் இனத்திற்கும் ஓரு குணமுண்டு என்று சொல்கிறார்களே, நீங்கள் இதை ஏற்கிறீர்களா?”

”ஏற்கிறேன். பல இனத்தவர்களோடு பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன். பெரும்பாலானவர்கள் அந்த இனக் குணத்தின்படித்தான் பேசுவார்கள். நடந்து

கொள்வார்கள். விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையினர் ஒரே மாதிரிதான். ஓர் இனத்தின் குணம் அந்த இனத்தைச் சார்ந்தவர்களிடம்

எப்படிச் சொல்லி வைத்த மாதிரி படிகிறது?”

”ஆச்சரியம்தான்!”

”சீனர்களின் குணம் என்று குறிப்பிட்டு என்ன சொல்லலாம்?”

”கடின உழைப்பு. கதையடிக்கிற சீனர்களைக் காண்பது அரிது. உடல்நலத்தில் அக்கறை. ஈடுபட்டிருக்கிற துறையில் ஆழ்ந்த தெளிவு; பிறர் விஷயத்தில்

தலையிடாத தன்மை; வீண் பேச்சு பேசாமை ஆகிய நல்ல குணங்களைச் சொல்லலாம்”

”குறைகளையும் சொல்லுங்களேன்!”

”என்னத்திற்கு? வேண்டாமே! ஆனால், மிகக் குறைவான குறைகளையே உடையவர்கள்”

”மங்கோலிய இனத்தின்கீழ் வருபவர்கள்தாம் சீனர்களும் ஜப்பானியர்களும். இவர்களுக்கிடையில் ஒற்றுமை அதிகம். நீங்கள் சொல்லும் அதே கடின உழைப்பு

இத்யாதிகள். ஆனால், ஜப்பானியர்கள்தாமே உயர்ந்தவர்களாக உலகெங்கும் பேசப்படுகிறார்கள்?”

”உண்மை. ஜப்பானியர்கள் மிக மிக அன்பானவர்கள். நம்மைப்போல் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இதனால் இருக்கலாம்”

”இங்கு பெரிய குடியிருப்பில் வசிக்கிறீர்கள். உங்களை வித்தியாசமாக நடத்துகிறார்களா இங்குள்ள சீனர்கள்?”

”இல்லை. நான் அப்படி உணர்ந்தது இல்லை”

வெள்ளையர்கள் நிறவெறியை வெளியில் காட்டமாட்டார்கள். ஆனால் உள்ளுக்குள் அந்த உணர்வு உள்ளவர்கள். சமயம் வரும்போது வெளிப்படும். சீனர்களின்

உள்ளுணர்வு இப்படி இருக்குமோ?

”இல்லை. நான் அப்படி உணர்ந்தது இல்லை”

”ஒரு காலத்தில், அதாவது எல்லைப் பிரச்னைகளில், போர்களில் சீனர்கள் என்றாலே இந்தியர்களுக்கு அளவுகடந்த வெறுப்பு உண்டு. இந்தக் கோணத்தில்

கேட்கிறேன்”

”உள்ளுக்குள் என்ன இருக்குமோ தெரியாது. ஆனால், எப்போதும் நான் இப்படி எண்ணியது இல்லை”

சீனம் தமக்கு வாழ்வு தந்ததால் வெளிப்படையாகவே சொல்ல யோசிக்கிறாரா? இல்லை உள்ளபடியே இதுதான் இவரது உள்ளுணர்வா? லேனா ஒரு

பத்திரிகையாளர். இவரிடம் ஒன்று கிடக்க ஒன்றைச் சொல்லி, இந்தாள் எழுதித் தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்று தயங்கினாரோ என்னவோ!

சீனாவில் பேச்சுரிமை, எழுத்துரிமை குறைவு. பத்திரிகையாளர்களின் கைகள் கட்டப்பட்டு, பேசுபவர்களின் வாய்களில் பிளாஸ்திரி போடப்பட்ட நிலைமைதான்.

இந்த எச்சரிக்கை உணர்வு பொதுவாகவே இங்கு வசிக்கும் இந்தியர்களிடம் நான் கண்டேன் என்பது உண்மை.

ஷாங்காய் துறைமுகத்தைக் காண வேண்டும் என நான் விரும்பியதால் மறுநாள் சென்றோம். ஷாங்காய் துறைமுகம் நான் எதிர்பார்த்ததைவிடப்

பிரமாண்டமாயும், முக்கியத்துவம் கொண்டதாகவும் இருந்தது. சீனாவின் முதல் பயணிகள் துறைமுகம் இதுதானாம். இங்கிருந்து கொரியாவுக்கும் ஜப்பானுக்கும்

பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட கப்பல்கள் தயாராக இருந்தன.

உலகின் 160 நாடுகளுக்கு இங்கிருந்து சரக்குக் கப்பல்கள் போகின்றன என்பதால் எங்கு பார்த்தாலும் ஒரே சரக்கு ம(மா)யம்!

மயக்கமடித்து விழுமளவு சீனாவிலிருந்து ஏகப்பட்ட சங்கதிகள் ஏற்றுமதியாகின்றன். சீனா எவ்வளவு வளர்ந்து நிற்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்க

வேண்டுமானால், ஷாங்காய் துறைமுகத்தை எட்டிப் பார்த்தால் போதும்.

எதையும் பெருந்தன்மையுடன் பார்க்கிற எனக்கே பொறாமை ஏற்படுகிற அளவிற்கு சீனாவின் ஏற்றுமதியின் அளவு இருக்கிறது. நம் நாட்டிலிருந்தும் இப்படிச்

சரக்குகள் புறப்படுமா என்று மனம் ஏங்கியது. சென்னை விமான நிலையத்திலிருந்தும், சென்னைத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதியாகிற சுண்டைக்காய்ச்

சரக்குகள் பெருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்யப்போகிறோம்? எனக்குள் ஒருவித வெறியே வரும்போல் இருந்தது.

சீனாவில் உள்ள பல நகரங்கள் நதிவழிப் போக்குவரத்தையே நம்பியுள்ளன. ஜீயுஜியாங், உஹான் போன்ற நகரங்களுக்கு ஷாங்காய் துறைமுகச் சரக்குகள்

நதிவழியே நகர்த்தப்படுகின்றன. சீனாவின் கொடைகள் என்றும் கொடுமை என்றும் இதன் நதிகள் சிலவற்றைச் சொல்லலாம்.

குறிப்பாக நதிகளில் படகுகள் அல்ல கப்பலே செல்லமுடியும். அந்த அளவிற்கு ஆழமாயும் அகலமாயும் உள்ளன.

சீனாவின் மஞ்சள் நதி (Yellow river) அடிக்கடி தன் போக்கை மாற்றிக்கொண்டு கடுமையான உயிர்ச் சேதங்களையும் பொருட்சேதங்களையும் விளைவிக்கிறது

என்கிறார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சீனாவின் நதிகள் சீனாவின் பெரும்பலம் என்றே சொல்ல வேண்டும். ஷாங்காய் துறைமுகத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய

பிறகும் அதன்பிறகு வெகுநேரமும் என் மனம் அதன் பிரமிப்பிலிருந்து நீங்கவே இல்லை.

செந்தில்குமார் வீட்டின் பின்புறம் ஓர் ஆறு ஓடுகிறது. அதில் உள்ள குப்பைகளையும் கழிவுகளையும் இரண்டு பேர் படகில் இருந்தபடியே சுத்தம் செய்து

கொண்டிருந்த அக்கறை என்னை வெகுவாகக் கவர்ந்தது.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04  பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/27 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Post

Leave a Reply