Thursday 24 April 2008
ஐ.பி.எல். 20-20: மும்பையைக் கசக்கிப் பிழிந்து காயப்போட்ட சென்னை!
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு திருஷ்டி சுற்றிப்போடவேண்டும். வெள்ளமெனத் திரண்டு வந்த சென்னை ரசிகர்களை ஏமாற்றாமல் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற ஏதுவாக அமைந்ததே அதற்குதான்!
சென்னை அணியின் (பரங்கிமலை உயர) 208 ரன்களை துரத்தி, துரத்தி கடைசியில் முடியாமல் துவண்டுப் போய் இரண்டாவது தோல்வியைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியினரைத் தவிர சென்னை வாசிகள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் 11பேர், 40ஆயிரம் ரசிகர்கள் சகிதம் (தமிழ்நாட்டின் முதல் குடிமகன்- முதல்வரும் உண்டு) வந்து மோதினால் மும்பை சச்சினே தலைமைத் தாங்கினாலும் மும்பை இந்தியன்ஸ் நிற்க முடியுமா என்ன? போராடித் தோற்ற போராளிகள் என்ற பட்டப்பெயர் வேண்டுமானால் அவர்களுக்கு கொடுக்கலாம்.
சாதாரணமாக சொல்லவேண்டுமானால் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல்.20-20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
டாஸ் வென்ற மும்பை அணி, சென்னை அணியை முதலில் பேட் செய்ய பணித்தது(விதி!).
சென்னை அணியின் சார்பில் பார்த்திவ் படேலும், மாத்யூ ஹைடனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். படேல் 14 ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார். ஆனால் ஹைடன் ரன் மழைப் பொழிந்து சென்னை ரசிகர்களை அதில் நனைய வைத்தார்.
46 பந்துகளை மட்டுமே சந்தித்த ஹைடன் 81 ரன்களைக் குவித்து ரன் அவுட் ஆனார்.
சுரேஷ் ரெய்னா மூன்று சிக்ஸர்கள் அடித்ததுடன் 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டோணி தன் பங்குக்கு 16 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 208 ரன்களோடு சந்தோஷப்பட்டுக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
பின்னர் ஆடிய மும்பை அணி, சென்னை அணிக்கு இணையாக திறமைக் காட்டியது. ஜெயசூர்யா 20, ராபின் உத்தப்பா 43, பிரேவா 24, நாயர் 45, ஹர்பஜன் சிங் 28 என ரன்கள் குவிந்தன.
குறிப்பாக ஹர்பஜனின் ஆட்டம் வெற்றியை மும்பை அணியை நோக்கி திருப்பியது. நட்ட நடு இரவில் நிரம்பவே நடுங்கி போய்விட்டனர் சென்னை ரசிகர்களும் நம்ம பசங்க 11 பேரும்!
ஆனால், துரதிருஷ்டம் துரத்தும் போது மும்பை இந்தியன்ஸால் சென்னையைத் துரத்தமுடியவில்லை.
கடைசியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சென்னை சூப்பர் கிங்சிடம் தாரை வார்த்தார்கள்.
ஒரே ஒரு ஆறுதல்…சிக்ஸர்கள் தூக்கியதில் சுரேஷ் ரெய்னாவுடன் பரிசைப் பகிர்ந்து கொண்டார் மும்பை அணித் தலைவர் ஹர்பஜன் சிங்.
ஒன்று மட்டும் நிச்சயம், டெண்டுல்கர் ஆடாத போதே இவ்வளவு ஆக்ரோஷம் காட்டுகிறார்கள் என்றால் அவரும் சேரும் போது மும்பை இந்தியன் அணி தகர்க்க முடியாத கோட்டையாக அல்லவா மாறிவிடும்! எப்ப மாற்றப் போகிறீர்கள் சச்சின்?









































