Wednesday 23 April 2008

2008/04/23 Chennai Super Kings Vs Mumbai Indians battle

chennai-mumbai.jpgசச்சின் - டோணி…திறமைப்போர்! ஜெயிக்கப் போவது யார்?

சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் களை கட்டிக் கொண்டிருக்கிறது. எப்போது கதிரவன் மறைவான், முன்னிரவு வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்.

ஐ.பி.எல். டுவென்டி 20- போட்டிக்காக டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தை சொந்த மண்ணில் ஆடுகிறது. இவர்களோடு மோதப்போகும் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ தன்னுடைய இரண்டாவது போட்டியை முதல்முறையாக சென்னை மண்ணில் ஆட உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்சை வென்ற தெம்புடன் களம் காண்கிறது. மும்பை அணியோ முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸிடம் தோற்ற வெதும்பலோடு களம் இறங்குகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை மட்டைய (இ) டி மன்னர்களுக்கு தோதுவானது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக வீரேந்திர ஷேவக் பேயாட்டம் (319 ரன்கள்) ஆடியதே இதற்கு சாட்சி! மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், பறந்து வரும் பந்துகளை பப்பறக்க வைக்கும் சூப்பர் பேட்ஸ்மேன்கள் அதிகம். பந்து வீச்சாளர்களை நொந்துபோக வைக்கும் அளவிற்கு டோணி, மைக்கல் ஹசே, மேத்யூ ஹைடன், ரெய்னா, ஜேக்கப் ஓரம், ஸ்டீபன் பிளமிங் என்று வரிசையாக சென்னை அணி மிரட்டுகிறது. பத்தாததிற்கு சென்னை வீரர் பத்ரி நாத் வேறு காத்திருக்கிறார், தன்னுடைய திறமையை நிரூபிக்க!

பந்து வீச்சில் எதிர் அணிக்கு பயம் காட்டவும் முரளிதரன், பாலாஜி, ஜோகிந்தர் சர்மா, ஆல்பீ மார்கல் ஆகியோர் தயாராக உள்ளனர்.
மும்பை அணிக்கு சச்சின் என்கிற இமயம் கண்ணைக் கூசவைத்தாலும் அவர் பங்கெடுப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அவருக்கு அடுத்த நிலையில் ஜெயசூர்யா, ராபின் உத்தப்பா போன்றோர் இருந்தாலும் சென்னை அணி பந்து வீச்சில் வேகம் காட்டும் பட்சத்தில் இம்மூவரையும் விரைவாக வெளியேற்றிவிட்டால் சென்னை அணிக்கு வெற்றிக்கனி சுலபமாக கிடைக்கும்.

சென்னை அணிக்கு இருக்கும் இன்னொரு பலம் என்னவென்றால் முதலில் மட்டைப் பிடித்தால் அதிகபட்ச ரன்கள் எடுக்கும் பேட்டிங் வரிசையும், எதிரணி எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அதை துரத்தும் சக்தியும் இருப்பது.

அட… போட்டியை விடுங்கள்! மேத்யூ ஹைடனுக்கு ஹர்பஜன் பந்து வீசப்போகும் காட்சியும் ஜெயசூர்யாவிற்கு முரளிதரன் காட்டப்போகும் சுழல் வித்தையும் சேப்பாக்கம் ஸ்பெஷலாக இருக்கும்.

இன்றிரவு 8 மணியளவில் நடக்கவிருக்கும் இந்தத் திறமைப்போரைக் காண சாதா ரசிகர்களோடு தமிழக ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரத் தூதுவர் நடிகர் விஜய் மற்றும் பல பிரபலங்கள் காத்திருக்கிறார்கள்.

நயன்தாராவும் வந்திருந்து நல்லபடியாக நடத்திக்கொடுக்க சென்னை ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம்….பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ பந்துகள் பறக்கும் போதெல்லாம் பாட்டம் தெரிய ஆட்டம் போடும் நான்கு சிட்டுகள் சேப்பாக்கத்திலும் வந்திறங்குமா? சென்னை ரசிகர்களுக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா!

Related Post

Leave a Reply