Thursday 1 May 2008
சீனம் சென்று வந்தேன்!
விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
ஷாங்காய் நகரின் ஆற்றில் படகில் இருந்தபடியே கழிவுகளையும் குப்பைகளையும் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களையே மாடியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
அங்கேயும் பொறுப்பில்லாதவர்கள் இருப்பார்கள் போலிருக்கிறது. ஆற்றில் கண்டதையும் போட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் அந்த ஊழியர்கள் சுத்தம் செய்த அழகே அழகு.
குப்பையை வாருவதற்கு அவர்கள் விதவிதமான உபகரணங்களை வைத்திருந்தார்கள். ஒன்று வலை வடிவில் இருக்கிறது. ஒன்று அரிகரண்டிபோல இருக்கிறது. ஒன்று கம்பி கம்பியாகக் கைகள் போல இருக்கிறது. படகைச் செலுத்தியபடியே கரை ஓரத்திலும் மையத்திலும் உள்ள குப்பைகளை அவர்கள் எடுத்த இலாவகம் இரசிக்கும்படி இருந்தது. ஒரு சிறுகழிவைக்கூட விட்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் காட்டிய அக்கறைதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
பரவாயில்லையே! ஆற்றைக் கூட இங்கு அக்கறையாகச் சுத்தப்படுத்துகிறார்களே என்று வியந்தேன்.
கடந்துபோன சில படகுகளின் அளவுகளும் அவற்றில் இருந்த முரட்டுச் சரக்குகளும், அகலம் குறைவாக இருந்தாலும் சரியான ஆழம் கொண்ட ஆறு இது என்பதை எனக்குச் சொல்லியது.
கதையடிக்காமல் பணிபுரிந்த அழகும், அந்தச் சுறுசுறுப்பும், செய்யும் தொழிலில் இருந்த ஈடுபாடும் சீனர்களின் மீதான நன்மதிப்பை உயர்த்துவனவாக இருந்தன.
சீனர்கள் என்றால் கதையடிக்காத உழைப்பு. கடுமையான உழைப்பு; நேர்மையான உழைப்பு; அசராத உழைப்பு. இந்த அணுகுமுறை வந்துவிட்டால், எந்தச் சமுதாயத்திற்கும் சரி, எந்தத் தனி மனிதனுக்கும் சரி, அது உயர்வைத் தந்தே தீரும். சீனாவை இன்று உலக அரங்கில் உயர்த்திப் பிடிப்பது இந்த உழைப்புதான். செந்தில்குமாரிடம் சொல்லி சீனர்களின் விளையாட்டு நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டுமே என்றேன்.
எங்களால் புறப்பட முடிந்தது இரவு நேரத்தில்தான். ”இந்த நேரத்தில் யார் சார் இருக்கப் போகிறார்கள்?” என்று சற்றே கேலித் தொணியில் கேட்ட எனக்கு செந்தில்குமார் நல்ல சூடு கொடுத்தார்.
”நெனைச்சிக்கிட்டிருக்கீங்களா இருட்டுனா வீட்டுக்குப் போயிடுவாங்கன்னு. இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு பாருங்க வந்து!”
ஷாங்காய் ஸ்டேடியம் அருகே உள்ள மைதானத்திற்குப் போனால் -
வாவ்!
ஒளியை உமிழும் ஏராளமான விளக்குகள். இது என்ன பகலா இரவா? என்று கேட்கும் படியான வெளிச்சக் குவியல்.
அழுக்கு உடைகள்; கிழிந்த நைந்த உடைகள் என்று ஏதும் இல்லாமல் எல்லோருமே ஏதோ ஒலிம்பிக்கிற்குத் தயாராகிற பாணியில் பளீர் என இருந்தார்கள்.
உதை பந்து ஆடும் மைதானம்; பேஸ்பால் மைதானம்; பாஸ்கெட் பால் அரங்கு என எல்லாவித அரங்குகளும் நிரம்பி வழியாத குறைதான். இதுபோக விளையாடக் காத்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை வேறு அசத்தலாக இருந்தது.
முதலில் நாங்கள் பார்த்தது வெளியிலிருந்தது. உள்ளே போகவேண்டும் என்றால் சிறப்பு அனுமதி பெற வேண்டுமாம். செந்தில் போய் இதற்கென இருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் ஏதோ சீனத்தில் உரையாடினார். என்னைக் காண்பித்து ஏதோ பேசினார். நான் அப்பாவியாய் ஒரு போஸ் கொடுத்தேன்.
”போங்க போங்க” என்றவர், வேறு ஏதோ சேர்த்துச் சொன்னார்.
”என்ன சொல்றார்?”
”வாங்க வாங்க! அந்தாளுக்கு வேற வேலையில்லை” என்றார்.
எங்கே போனாலும் எங்களைச் சீனர்கள் திரும்பிப் பார்த்த விதத்தைப் பல இடங்களில் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த விளையாட்டு மைதானத்தில் எங்களை எவருமே இலட்சியம் செய்யவில்லை. ‘எதுகளோ வந்திருக்குதுகள்’ என்னும்படியான அலட்சியம்.
அலட்சியம் என்பது சற்று அதிகபட்சமான வார்த்தையோ! இருக்கலாம். விளையாட்டிலே அப்படி ஓர் ஈடுபாடு.
விளையாட்டுகளின் எல்லைக்கோடுகளை ஒட்டி நடந்தால் பர்சுகள்; செல்போன்கள்; உடைகள்; பேனாக்கள்; கிரடிட்கார்டுகளைக் கனமாய்க் கொண்ட பெளச்சுகள்; கடிகாரங்கள்; வாகனச் சாவிகள், யார் என்ன எடுத்தாலும் தெரியாது. இவற்றைப் பார்த்துக் கொள்ள என்று எவரும் இல்லை.
இரு அந்நியர்கள் நுழைகிறார்களே, ஏதும் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற எச்சரிக்கைப் பார்வையும் இல்லை. சீனர்களின் விளையாட்டில் நான் கவனித்த சில அம்சங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இக்குறிப்புகள் நம் விளையாட்டு வீரர்களுக்கும் பயன்பட்டாலும் பயன்படலாம்.
வெற்றி தோல்விகள் இவர்களை அதிகம் பாதிப்பதில்லையோ என்னவோ! வெற்றிக்குப் பின் இவர்களது முகங்களில் பெரிதான மகிழ்ச்சியோ பெருமித உணர்வோ ஏற்படவில்லை. ஏதோ தங்களைவிட்டு விலகிப் போயிருந்த ஒன்று தங்களிடம் திரும்பி வந்த உணர்வைத்தான் வெளிக்காட்டுகிறார்கள். இதையும் தேடித்தேடிப் பிடித்து உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தோல்வியுற்றவர்கள் கூட வெற்றி பெற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டுச் சாகாமல் பெருந்தன்மையோடு அருகில் சென்று கைகுலுக்கி வாழ்த்துச் சொல்கிறார்கள்.
கூடைப்பந்து அரங்கிற்கு நகர்ந்தபோது இங்காவது சற்றுக் கூச்சல் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஊகும். பந்தை நகர்த்தச் சொல்வதும், தமக்கு தா என்று கேட்பதும் சிறுசிறு கண்ணசைவுகளிலேயே நடக்கும் விதம் அபாரம்.
தாம் எதிர்பார்த்தபடி தம் அணி விளையாட்டு வீரர் பந்தைத் தமக்குத் தராமல் தவறு செய்துவிட்டால் கூடப் பெரிய அளவில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தக் காணோம்.
”எத்தனை மணி வரை இப்படி ஆட்டம் தொடரும்!”
”யார் கண்டார்கள்? விழித்திருந்து பார்க்குமளவு எனக்குப் பொறுமை இருந்ததில்லை. ஆனால் எப்படியும் நள்ளிரவையும் தாண்டி விளையாடுவார்கள்”
”ஏன் இப்படி நள்ளிரவு வரை ஆட வேண்டும்?”
”கடமைதான்; பணி மிகுதிதான் காரணம். எங்கே இருக்கிறது நேரம் இவர்களுக்கு?”
”நாள் முழுக்க வேலை செய்துவிட்டு இப்படி நள்ளிரவு வரை ஆட்டம் போட்டால் மறுநாள் போய் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்கிறீர்களா?”
”முடிகிறதே இவர்களால்! மைதானம் முழுக்கப் பாருங்கள். எங்காவது அளவில் பெரிதான சீனர்கள் உண்டா?”
”எனக்குத் தெரிந்து இல்லை. சீனர்கள் நல்ல உடல்நிலை உணர்வு (Health consious) உள்ளவர்கள்”
”உழைப்பிற்கு அடுத்தபடியாக உடல்நலனுக்கு நல்ல முக்கியத்துவம் தருவார்கள் சீனர். உலகப் பதக்கப் பட்டியலில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்க இவர்களது சரியான வாழ்க்கைப் பார்வைகள்தாம் காரணம்”
இடையில் விளையாட்டுப் பகுதிக்கு எனச் சரிவர கவனிப்பு இல்லாதிருந்தது. அண்மைக் காலமாய் எவரிடத்தில் திறமையைக் கண்டாலும் அவர்களை முன்னிறுத்தி விட்டுத்தான் அடுத்த வேலை என்று அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. சோற்றுக் கவலை, வாழ்க்கைத் தேவை பற்றிய கவலைகளை விடுங்க. இவற்றிற்கு நானாச்சு என்கிறது அரசு.
அரசியல் தலையீடு இல்லாத ஊக்கங்கள்; செலவீனங்கள்!
பிறகென்ன சுய தேவைகளைக் கவனித்துக்கொள்ள அரசு இருக்கிறது என்கிற துணிவு வந்துவிட்டால் அப்புறம் இலக்கு என்பது சாதனைதானே!
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…









































