Thursday, 14 Aug 2008
சீனம் சென்று வந்தேன்
மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
ஷாங்காய் சைட் சீயிங் பஸ் சென்டர் சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் விதம் உலகிற்கே பாடம் நடத்துவது போல் உள்ளது.
சீனம் தெரியாதவர்கள் இங்கு சமாளிப்பது கடினம் என்கிற ஒரு குறையைத் தவிர, வேறு ஒரு குறை சொல்லிவிட முடியாது.
சீனம் மட்டுமே தெரிந்த ஆண்களையும் பெண்களையும் மட்டுமே டிக்கெட் கொடுப்பவர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும், வரவேற்பாளர்களாகவும் நியமித்திருப்பது ஒருவித அலட்சியப் போக்குதான் என்பேன்.
ஆங்கிலம் பேசினால், ஏதும் ஆங்கிலத்தில் கேட்டால் ஆள்காட்டி விரலால் ஒரு திசையை நோக்கிக் காட்டுவது இவர்கள் அனைவரும் கற்று வைத்துள்ள பழக்கம். என்னவாம்?
ஆங்கிலம் தெரிந்தவர்கள் அந்தத் திசையில் இருக்கிறார்கள். அவர்களிடம் போய்ப் பேசு! என்னை ஆளைவிடு என்பது இதன் பொருளாம்.
அங்கு போனால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருந்தால்தானே! ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கையை விட்டு எழுந்து போய்விடவே செந்தில்குமார்தான் சீனத்தில் பேசி விபரங்களைச் சேகரித்தார்.
நம்மவர்கள் சீனம் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஒரே வியப்பு. தமிழும் ஆங்கிலமும் வந்து தவழும் வாயிலிருந்து விநோதமான இதுவரை கேட்டிராத ஒலிகள் (’ச்சீ’ என்பதைத் தவிர) வரும்போது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
செந்தில்குமார், வந்த இடத்தில் சீனத்தைக் கற்றுக்கொண்டது அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந்து இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் எவ்வளவு உபயோகம்.
சில ஆண்டுகள் ஒரு நாட்டில் இருந்தால், அந்த மண்ணின் மொழி நம்மையும் தோளைப் பிடித்துக் தொற்றிக்கொள்ளும் என்று எவரும் நம்பாதீர்கள்.
பம்பாய், டெல்லிக்கு மாற்றலாகிப் போகும் சில வங்கி அதிகாரிகளின் மனைவிகள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து வெளிஉலகம் அறியாமலும், உள்ளூர் மொழியைப் பேசிப் பழகாமலும் போவது உண்டு.
கடைக்குப் போகும்போது சில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதோடு சரி.
கேட்டால், ”என்ன பாஷை அது? நமக்கு இந்த மராத்தி, இந்தியெல்லாம் கத்துக்கணும்னு என்ன அவசியம்?” என்று சலிப்பாகப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.
நாங்கள் முன்பு வாழ்ந்த சென்னையின் ஒரு பகுதியில் ஒரு கூர்க்கா இருக்கிறார். நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே இங்குதான் வாசம். நான் சிறுவனாக இருந்தபோது இல்லம் வந்து சல்யூட் அடித்து, என் தந்தை தமிழ்வாணனிடம் ஏதேனும் வாங்கிக்கொண்டு போவார்.
இவரை நான் நன்கு வளர்ந்த பிறகு சந்தித்தேன். இன்னமும் நம்பிள்கி நிம்பிள்கிதான். ”தமிளு கஷ்டம் சார். நம்பிள்கி வராது சார்” என்றார்.
எந்தப் புதுப்பகுதியில் வாழ நேர்ந்தாலும் அதில் சரளமாக இல்லாவிட்டாலும் சமாளிக்குமளவாவது பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சீன தேசத்தில் நான் சந்தித்த பல தமிழர்களிடம் கேட்ட கேள்வி உங்களுக்கு சீனம் வருமா? பெரும்பாலும் உதடுகளைப் பிதுக்கியதுதான் பதில்!
திராவிடத் தலைவர்கள் நம் நெஞ்சில் நஞ்சைத்தான் பாய்ச்சினார்களோ என்னவோ! தமிழைத் தவிர எதையும் வெறுப்புணர்ச்சியுடனேயே பார்க்கக் கற்றுத் தந்து, அவற்றை ஆர்வமுடன் கற்காமல் விட்டதால் தமிழ் சமுதாயம் அடைய வேண்டிய வெற்றிகளையோ வளர்ச்சியையோ அடையவில்லை.
மணிப்பாலுக்குப் படிக்கப் போன என் உறவினர் பையனிடம் இப்படிச் சொன்னேன். ”கன்னடம் கற்க அருமையான வாய்ப்பு. விடாதே! கற்று வா!”
அந்தப் பையன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். ஏதோ விஷக்கிருமியைக் கையில் கொடுத்து விழுங்கச் சொன்னதுபோல் ஒரு முகபாவம் கொடுத்தார். இன்னும் கூடச் சொன்னேன், ”மணிபாலில் பல மொழிப் பையன்கள் படிக்க வருவார்கள். மொழிக்கு ஒரு நல்ல நண்பனை ஏற்படுத்திக் கொள். ஒரிஸாக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை. பத்து வார்த்தை கற்றுக் கொள்” என்றேன்.
அவ்வளவுதான், ஒரு பார்வை பார்த்தான் பாருங்கள், அதன் பொருள் என்ன தெரியுமா? ‘காலத்திற்கு ஒவ்வாத கிழடுய்யா நீ’ என்பதுதான்.
படிப்பு முடித்துத் திரும்பிய பிறகு விடவில்லை. ”என்ன, எத்தனை மொழிகள் கத்துக்கிட்டே?”
”கன்னடம் கொஞ்சம் புரியும். வேறு எதுவும் தெரியாது. நாலு வருஷம் ஓடியே போய்விட்டது. பசங்க இங்கிலிஷ்லதான் பேசிக்குவோம். அதனால வேற மொழி எதுவும் கத்துக்க முடியலை” என்று கோப்பை (File) மூடியே விட்டான்.
செந்தில்குமாருக்குச் சீனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருந்ததால், அந்த மொழி குறுகிய காலத்திலேயே அவரை ஒட்டிக்கொண்டுவிட்டது.
திரும்பும்போது இரயிலில் திரும்பினோம். இரயில் நிலையங்கள் மிகச் சுத்தமாக உள்ளன.
மக்கள் அதிகம் புழங்கினால் அந்த இடம் மோசமாக இருக்கும் என ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால் சீனாவில் இது பொருந்தாது போலும்.
ஒரு சீனச் சிறுவன் தான் சென்ற வழியில் கிடந்த ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டதைப் பார்த்தேன். அது ஏதோ முக்கியச் சீட்டுப் போலும் என்றுதான் முதலில் எண்ணினேன்.
நாங்கள் ஏறவேண்டிய இரயிலுக்கு நேர்எதிர்ப்புறமாகச் செல்லும் இரயிலில்தான் அவன் சென்றான்.
என்ன சீட்டு இது? அதை என்னதான் செய்யப்போகிறான் என்று பார்க்கும் ஆவல் என்னை உந்த, ”செந்தில் சார்! ஒரு நிமிடம் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தப் பையனைப் பின்தொடர ஆரம்பித்தேன்.
ஒரு கையால் அம்மாவைப் பிடித்துக் கொண்டான். மறுகையில் அந்தச் சீட்டு. எட்டு வயதுதான் இருக்கும் அவனுக்கு.
இரயிலுக்காக நின்ற அவன், பாக்கெட்டில் அந்தச் சீட்டைத் திணிக்கவில்லை. இன்னமும் கையிலேயே இருந்தது. தன் அம்மாவிடம் ஏதோ கேட்டான். கேட்டுவிட்டுச் சற்று நடக்க ஆரம்பித்தான். நானும் அவனைப் பின்தொடர்ந்தேன்.
அம்மாவிடம் என்ன கேட்டிருப்பான்? இரயில் வர எவ்வளவு நேரம் ஆகும் என்றா? இருக்கலாம்.
சிறிது தூரத்தில் இருந்த குப்பைத் தொட்டியை அவன் இலக்காகி நடந்த போது, எனக்கு வியப்புத் தாங்கமுடியவில்லை.
எங்கோ கிடந்த குப்பையை எடுத்துக் குப்பைத் தொட்டியில் சேர்க்க எண்ணும் இவனது வயது என்ன? இவன் அம்மா சொல்லி இச்செயலைச் செய்யவில்லையே!
எந்தச் சட்டம் இவனுக்கு இந்தச் செயலைச் செய்யச் சொல்லிச் சொல்லிக் கொடுத்திருக்கும்? இந்த வயதில் சொல்லித் தந்தால் கூட மண்டையில் ஏறாத இந்தச் சுத்த உணர்வு எப்படி இவனுக்கு ஏற்பட்டிருக்கும்?
அந்த நேரத்தில் அவன் எனக்கு ஒரு கதாநாயகன்போல் தெரிந்தான். திரும்பவும் போய் அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு எதையும் சாதித்துவிட்ட பெருமித உணர்வெல்லாம் இல்லாமல் இயல்பாய் இருந்தான்.
ஷாங்காய் இரயில் நிலையத்தின் சுத்தத்திற்கு எனக்கு விடை கிடைத்ததைப் போல் இருந்தது.
இரயில் நிலையமெங்கும் தனியார் நிறுவனங்களின் பிளக்சி பேனர்கள்.
ஒரு பேனர் மட்டும் அரசு பேனர். ஷாங்காய் எக்ஸ்போ 2010 என்று மொட்டையாய் இருந்தது.
”பாருங்க சார் ஒரு பொருட்காட்சிக்கு இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க!” என்று நான் சொன்னபோது,
”இவுங்க ரொம்ப முன் கூட்டியே சிந்திக்கிறவங்க லேனா சார். இதுல ஆச்சரியப்பட ஒண்ணுமே இல்லை” என்றார் செந்தில்குமார்.
தொடர்ந்து,
”ஒரு பணியை முடிக்க இவ்வளவு காலம் ஆகும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதற்கு முன்னதாகவே முடிப்பார்களே தவிர, தாமதமே இருக்காது. காலத்தைக் கடத்திவிட்டுச் சாக்குப் போக்குச் சொல்லாத குணம் சீனர்களுக்கே உரியது” என்று அவர் சொன்னபோது, மனத்திற்குள் ஒரு பிரமிப்பு வெடியைக் கொளுத்திப் போட்டதைப்போல் இருந்தது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…










































