Thursday, 14 Aug 2008

2008/08/15 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஆர்.ஜெயராம், திருநெல்வேலி.

மத்தியில் உருவாகியுள்ள மூன்றாவது கூட்டணி பற்றி?

இந்து மகா சமுத்திரத்திற்கு எதிராகக் கூவமும் அடையாறும் கூடி என்ன பயன்?


எஸ்.குலசேகரன், மணப்பாறை.

உள்ளாட்சித் தேர்தல்களில் பழைய ‘குடவோலை’ முறை வந்தால்?

ஓட்டு எண்ணுவதற்குள் குடத்தை உடைத்துவிடுவார்கள். ‘எலெக்ட்ரானிக்ஸ் மிஷினுக்கே ‘தர்ப்பனம்’ செய்யப் பார்க்கிறார்கள் என்றால் குடங்கள் எல்லாம் எங்கே?


ஜே.பார்த்திபன், நொளம்பூர்.

மத்திய அரசின் சுனாமி நிராவண நிதி சரியாக வரமாட்டேங்குதே?

கடலிலே போட்டுவிட்டுச் சாக்கடையில் தேடினால் கணக்கு எப்படி வரும்? இனி எப்படித் தூர் எடுத்தாலும் அதில் கிடைக்கப் போவது சேறும் சகதியும்தான்!


ஏ.பி.பிரபாகர், அறந்தாங்கி.

முதல்வரும் டி.ஆர்.பாலுவும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானது பற்றி?

விஷயத்தை அரசு வழக்கறிஞர்கள் தம் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்கிற முதல்வரின் வாதத்தை ஏற்போம். முதல்வர் துணிந்து எதிர்ப்பார்; வாதிடுவாரே தவிர, தவிர்க்கமாட்டார், ஒளியமாட்டார். எனவே நம்புவோம். இதற்காக அரசு வழக்கறிஞர்களை எச்சரித்து விட்டிருந்தால் அந்தப் பெருந்தன்மை பேசப்பட்டிருக்கும். சட்டத்துறை அமைச்சரை முதல்வர் விட்டுவைத்தது ஏன் என்பதும் புரியாத புதிர்!


சங்கரி விஸ்வநாதன், திண்டுக்கல்.

கண்ணீர் சிந்துவது போன்ற இரங்கல் போஸ்டர்களைக் காணும்போது உங்களுக்கு என்ன உணர்வு தோன்றும்?

இந்தச் செலவிற்குப் பதிலாக அந்தப் புண்ணிய ஆத்மாவின் பெயரால் ஓர் ஏழை மாணவனுக்கு, மாணவிக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்று தோன்றும!


ஏ.சுப்பிரமணி, காஞ்சிபுரம்.

அரசியலில் திடீர் பிரவேசம் செய்யும் நடிக - நடிகையர்களைப் பற்றி?

பின்னால் வருத்தப்பட நிறையப் பேர் உருவாகிறார்கள். ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கக்கூடாது என்னும்போது ஆழ்கடலில் இறங்குபவர்களின் நிலையை நாம் சொல்லித்தானா தெரிய வேண்டும்.


ஏ. தமிழரசன், திருமங்கலம்.

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் ஆகும் யோகம் இனியும் உண்டு என எண்ணுகிறீர்களா?

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் படிவம் 6-ஐ பூர்த்தி செய்யலாம். அமைச்சரவைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் எந்த படிவத்தைப் பூர்த்தி செய்வது?


எஸ்.குணசீலன், திருத்தணி.

பத்திரிகை உலகில் நீங்கள் ஒரு அரை வேக்காடாமே? என் நண்பன் சொல்கிறான்?

தயவுசெய்து என்னை சோனியா அளவிற்கு உயர்த்திவிடாதீர்கள். அவரைதான் ‘அரைவேக்காடு’ என்று தமிழக தலைவர் ஒருவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.


எல்.சுப்பு, சென்னை-17.

அமெரிக்காவில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு குறையுமா? கூடுமா?

கவலை வேண்டாம். நம்மவர்களின் மூளைக்கு எந்த ‘மூலை’யிலாவது வேலை இருந்து கொண்டேயிருக்கும்.


கே.சாகுல்ஹமீது, உடுமலைப்பேட்டை.

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டு, இறந்தவர்களின் சமாதியில் இன்னும் புல்கூட முளைக்கவில்லை. இவர்களுக்கு ஏன் 100 கோடி தரணும்?

அண்டை நாடுகளுடன் அரவணைத்துப் போகும் பொறுமைக் குணம் நமக்கு இருப்பதைப் போல் எவருக்கும் இல்லை. இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் காட்டிய கரிசனம் மறக்க முடியாதது. இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்று தோலுரித்தவர் அதிபர் கர்சாய். நம் அண்டை நாடுகளுள், நம்மை ஒப்பிடும்போது, சீனம் தவிர மற்றவை பொருளாதார வல்லமை இல்லாதவை. அவ்வப்போது ஏதாவது போட்டுக் கட்டவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. போருக்குச் செலவழிப்பதைவிட விருந்துக்குச் செலவழிப்பது மேல் அல்லவா?


டி.ஞானகேசரன், சென்னை-50.

அகில இந்திய அரசியலை ஒப்பிடும்போது தமிழக அரசியல் எப்படி?

அரசியலில் தமிழகம்தான் உயர்ந்து நிற்கிறது. இங்குள்ள கட்சிகளின் எண்ணிக்கையே இதைக் காட்டிக் கொடுக்குமே? இதிலுமா உங்களுக்குச் சந்தேகம்? தமிழகக் கட்சிகளையும், வடஇந்தியக் கட்சிகளையும் தராசில் வைத்தால் பின்னதுதான் தாழும். போகட்டும்! தராசிலாவது தமிழகக் கட்சிகள் உயர்ந்து வட இந்தியக் கட்சிகள் தாழ்கின்றனவல்லவா?


பி.செளந்தர், பெரம்பூர்.

உங்கள் வீட்டிலுள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டீர்களா?

என் நூலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறேன். நான் ஓய்ந்து விடாதிருக்க ஒரு பகுதி நூல்கள், என் ஓய்வுக் காலத்தில் படிக்க மறுபகுதி நூல்கள்.


வி.மோகன், மதுரை.

ஒரு பெண்ணின் குரலை வைத்து அவளைப் பற்றிச் சொல்ல முடியுமா?

ஓ! சொல்லலாமே! அவள் தாழ்ந்த குரலில் பேசினால், அவள் எதையோ அடைய விரும்புகிறாள் என்று பொருள். அதுவே ஓங்கிய குரலில் பேசினால் மற்றவர் அடைந்த ஒன்றைக் தடுக்க விரும்புகிறாள் என்று பொருள்.


எஸ்.கோபால், விருதுநகர்.

நேர்மை, நாணயம் மீறி நடப்பவர்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்கிற முதல்வரின் பேச்சு எப்படி?

தி.மு.க. முதன்முதலில் பதவி ஏற்றபோதே இப்படி அறிவித்திருந்தால் தமிழகம் இன்னும் வெகுவாக முன்னேறியிருக்கும்.


எம்.பாத்திமா, மதுரை.

அரிசி விலை தாறுமாறாக உள்ளதே?

இன்னும் ஓர் அறுவடைக் காலம் வரை சமாளிப்போம். உற்பத்தி பெருகினால் விலை தானாகக் குறையப் போகிறது. இயற்கைப் பொய்ப்பிற்கும் நாம் கொடுக்கும் விலை இது!


ஆர்.இருதயராஜ், தேவகோட்டை.

உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கும் லஷ்மி மிட்டலால் நமக்குப் பெருமைதானே?

இந்தியாவை நோக்கி முதலீடுகளைத் திருப்பாத இவரை எண்ணி நான் பெருமிதப்படத் தயாரில்லை.


பீதாம்பரம், கொடுங்கையூர்.

கொள்ளைச் செய்திகளைப் படிக்கும்போது என்ன தோன்றும்?

சாதாரண மனிதர்கள் வீட்டில் கூடப் பல இலட்சம் கொள்ளை என்று அறிய நேரிடும்போது லாக்கரிலும் வங்கியிலும் வைக்காமல் வீட்டில் குவித்து வைக்கும் இவர்களின் அறியாமையை எண்ணி இரங்கத் தோன்றும்.


கே.ஜெயங்கொண்டான், திருச்சி-2.

மீண்டும் முதல்வராக ஆகும் எண்ணம் இல்லை என்கிற கருணாநிதியின் அறிவிப்பு எதைக் காட்டுகிறது.

ஒரு சகாப்தச் சறுக்கலின் முதல் அடியை!


ஜி.சேஷகிரி, சென்னை-60.

எனக்கு ஷுகர் உள்ளதே?

ப்ரென் ஷுகர் இல்லாதவரை ஓ.கே!.


ஆர்.கண்ணன், பொன்னேரி.

வரதட்சணை ஒழிப்பில் நீங்கள் எப்படி?

எனக்கு இருமகன்கள். தேவையில்லாமல் என் வாயைக் கிளறாதீர்கள்!


எஸ்.ஸ்ரீநிவாஸன், வேலூர்.

மீண்டும் நமக்கு குழந்தைப் பருவம் கிடைத்தால்?

அரிச்சுவடி, வாய்ப்பாடு, பெரிய எழுத்து கொன்றைவேந்தன், அதுவும் சுத்தப்பதிப்பு (அது என்ன சுத்தப்பதிப்பு என்று கேட்காதீர்கள்!) ஆகியவற்றைப் படிக்கலாம். இவை வாழ்வைச் சொல்லி கொடுக்க வல்லவை. இவற்றையெல்லாம் படிக்கக் கொடுத்து வைக்க வேண்டும். சும்மா சும்மா பிளாப்பி, டிஸ்க், நெட் என்று போரடிக்க ஆரம்பிக்கிறது.


கா.செங்குட்டுவன், திருநெல்வேலி.

சாலை விபத்தில் மறைந்த தமிழறிஞர் அகத்தியலிங்கம் பற்றி?

ஒரு தமிழ்ப் பெட்டகத்தை இரு ஓட்டுநர்களின் கவனக்குறைவு காவு கொண்டதை ஜீரணிக்கவே சிரமப்பட்டேன். ஆர்ப்பாட்டம் அறியாதவர் அகத்தியலிங்கம். விளம்பரம் விரும்பாத தகையாளர். அந்த புலமையும் சிறந்த நிர்வாகத் திறனும் நேர்எதிர்த் துருவங்கள். இரண்டையும் இழுத்துப் பிடித்து வைத்திருந்தவர் ஐயா அகத்தியலிங்கம்.


ஆர்.பவளராஜன், கமுதி.

கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது என்கிற ரஜினியின் பழைய வசனத்தை உச்ச நீதிமன்றமும் பயன்படுத்தியிருப்பது பற்றி…?

உச்ச நீதிமன்றத்திலும் உவமான உவமேயக்காரர்கள் இருப்பது தெரிகிறது. அரசின் குடியிருப்புகள் பல தகுதியற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தடுக்கச் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் சிபாரிசை மத்திய அரசு காது கொடுத்துக் கேளாதிருக்கிறது. பாவம் மத்திய அரசுக்கு ஆட்சி செய்வதைவிட அரசியலை நடத்துவதே பெரும்பகுதிப் பணியாகப் போய்விட்டது. என்ன செய்வார்கள் பாவம்!

08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply